• Sat. Nov 15th, 2025

24×7 Live News

Apdin News

பாதுகாப்பு ஒத்துழைப்பினை முறைப்படுத்தும் அமெரிக்காவும் இலங்கையும்!

Byadmin

Nov 15, 2025


போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் மொன்டானா தேசிய காவல் படைக்கும், அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம்13, மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பமைச்சில் வெள்ளிக்கிழமை (14) கைச்சாத்திட்டன.

அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன், பாதுகாப்புச் செயலாளரான எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொன்த ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

பங்காண்மை ஊடாக அமைதி எனும் எமது பொதுவான இலக்கை மேம்படுத்துவதற்காக, இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை இராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டி, அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லை இவ்வொப்பந்தம் குறிக்கிறது.

“மொன்டானா மாநிலத்தில் காட்டுத்தீ அனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் முதல் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அமைதிப்பணி மற்றும் மனிதாபிமான முயற்சிகள் வரை, மொன்டானா தேசிய காவல் படையானது, சேவை மற்றும் தொழில்வாண்மைத்துவம் ஆகியவற்றில் ஒரு பெருமைமிக்க வரலாற்றினைக் கொண்டுள்ளது. இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையுடனான இப்பங்காண்மையானது, நம்பிக்கை, தயார்நிலை மற்றும் நீடித்த அமைதி ஆகியவற்றை பங்காண்மை ஊடாக கட்டியெழுப்பும் ஒரு பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டினை பலப்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்ட அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பில் இப்புதிய அத்தியாயத்தின் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“இலங்கையின் பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்துகின்ற மற்றும் அமெரிக்காவுடனான நீடித்த பங்காண்மையினை மேலும் பலப்படுத்துகின்ற ஒரு முற்போக்கான முன்முயற்சியினை இவ்வொப்பந்தம் பிரதிபலிக்கிறது. இராணுவப் பயிற்சி, பேரனர்த்தங்களின் போதான நிவாரணப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பரிமாற்றங்கள், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை பேணி வளர்த்தல் போன்ற விடயங்களில் எமது நாடுகள் இரண்டும் பல வருடங்களாக ஒத்துழைத்து வருகின்றன.

இக்கட்டமைப்பானது, ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளைத் திறக்கும், திறன் விருத்தியினை ஊக்குவிக்கும், மற்றும் பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு பங்களிப்புச் செய்யும்.” என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வு பெற்ற) எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொன்த குறிப்பிட்டார்.

“இலங்கையைச் சேர்ந்த எமது சகாக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எமது இரு நாடுகளதும் பாதுகாப்பை மேம்படுத்துகின்ற வலிமை, நம்பிக்கை மற்றும் நீடித்த பிணைப்புகளை நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.” என மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன் கூறினார்.

பகிரப்பட்ட பாதுகாப்பு இலக்குகளில் வேரூன்றிய ஒரு பங்காண்மை

தொழில்முறை உறவுகளை பலப்படுத்தி, இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஆழமான ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பினை முறைப்படுத்துகையில், 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மொன்டானா-இலங்கை பங்காண்மையானது இன்று ஒரு பெரிய அடியினை முன்னோக்கி எடுத்து வைக்கிறது. State Partnership Program இன் ஊடாக, மொன்டானா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆயுதப் படைகளின் குடிமகன்-படைவீரர் அங்கமான மொன்டானா தேசிய காவலர் படையானது, பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகள், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பங்காண்மைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது.

2021 ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவல்படையும், இலங்கையின் ஆயுதப் படைகளும் நம்பிக்கையை வளர்த்து பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்திய கூட்டுப் பயிற்சிகள், நிபுணர் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர வருகைகள் ஆகியவற்றின் ஊடாக தமக்கிடையிலான பங்காண்மையினை ஆழப்படுத்தியுள்ளன.

குறிப்பிடத்தக்க சமீபத்திய நடவடிக்கைகளுள் அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் பேரனர்த்தங்களின் போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற திறன்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றிய ATLAS ANGEL 2024 மற்றும் PACIFIC ANGEL 2025 என்பன உள்ளடங்குகின்றன.

கடல் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் கடற் சூழலைப் பாதுகாப்பதற்கும் தேவையான  நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டு, அபாயகரமான கழிவுப் பொருட்கள் தொடர்பான நடவடிக்கைகள், கரையோர மீட்பு மற்றும் நீர்நிலைகளில் மிதக்கும் அல்லது அதில் பரவியுள்ள மாசுக்களை சுத்தம் செய்தல் உட்பட, எண்ணெய் கசிவுகளின் போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, State Partnership Program இன் கீழ் அமெரிக்க கடலோர காவல் படை மாவட்டம் 13 இலங்கை கடலோர காவல் படை அதிகாரிகளை 2025 ஓகஸ்ட் மாதம் சியாட்டல் நகரிற்கு வரவேற்றனர்.

எதிர்கால திட்டங்கள் 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், State Partnership Program (SPP) இன் கீழ் அமெரிக்க மாநில தேசிய காவல் படைகளுடன் பங்காண்மை கொண்டுள்ள 115 நாடுகளை உள்ளடக்கிய ஒரு  உலகளாவிய வலையமைப்புடன் இலங்கை இணைகிறது. பேரிடர்களுக்கான பதிலளிப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் வகையில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெறும் முதலாவது கூட்டு நடவடிக்கைகளை 2026ஆம் ஆண்டு கோடை காலத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மொன்டானா- இலங்கை தேசிய காவல் படை பங்காண்மையானது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தும்: 

⦁ ஒன்றிணைந்து செயற்படும் தன்மையினையும் தயார்நிலையினையும் மேம்படுத்துவதற்காக கூட்டுப் பயிற்சிகள் மற்றும் தொழில்முறை பரிமாற்றங்களை மேற்கொள்ளல்.

⦁ கடத்தல், குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலை இடைமறித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தும் கடல்சார் கள விழிப்புணர்வு ஒத்துழைப்பு.

⦁ நெருக்கடி நிலைகளின் போதான பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள், இராணுவ மருத்துவ மற்றும் பொறியியலாளர் செயற்பாடுகளை உள்ளடக்கி, காவல் படையின் இராணுவ-சிவிலியன் எனும் இரட்டை திறன்களையும் பயன்படுத்துதல்.

⦁ விமானப் போக்குவரத்து செயற்பாடுகள், திறன் மற்றும் விசேட நிபுணத்துவம் ஊடாக செயற்பணியின் வெற்றிக்கு உதவி செய்தல்.

இராணுவ மற்றும் சிவில் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, அவற்றிற்கான பதிலளிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை ஆகியவற்றில் இராணுவ-சிவில் ஒருங்கிணைப்பு.பின்னணி: அமெரிக்க மாநில தேசிய காவலர் படையணிகளுக்கும் பங்காளர் நாடுகளுக்கும் இடையில் நீடித்த உறவுகளை பேணி வளர்ப்பதற்காக, பனிப்போர் நிறைவடைந்த பின்னர் 1993 ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தினால் (தற்போதைய போர்த் திணைக்களம்) State Partnership Program (SPP) உருவாக்கப்பட்டது. சிவில்-இராணுவ தயார்நிலை, இன்றியமையாத உட்கட்டமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்புத் துறையினை நவீனமயமாக்கல் போன்ற பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு உதவி செய்வதற்காக, வெளிநாட்டு இராணுவ எதிரிணைகளுடன் அமெரிக்க தேசிய காவலர் படையணியினை SPP ஒன்றிணைக்கிறது. பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் ஒன்றிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஊடாக, பங்காளர்கள் தமக்கிடையே ஒன்றிணைந்து செயற்படும் தன்மையினை பலப்படுத்துகிறார்கள். கொலம்பியா மாவட்டம், மூன்று அமெரிக்க பிராந்தியங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களதும் தேசிய காவற் படையானது, பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் நிபுணத்துவ பரிமாற்றம் ஆகியவற்றினூடாக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர தயார்நிலை ஆகியவற்றினை ஊக்குவிக்கும் வகையில், அண்டார்டிகாவைத் தவிர ஏனைய அனைத்து கண்டங்களிலுமுள்ள 100இற்கும் மேற்பட்ட பங்காளர் நாடுகளுடன் SPP இனூடாக இணைந்துள்ளது.

மொன்டானா மாநிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டதாகும். மொன்டானா தேசிய காவல் படை SPP இல் பங்கேற்பதானது, நம்பகமான சர்வதேச பங்காண்மைகள் ஊடாக உலகளாவிய அமைதியினையும் பாதுகாப்பினையும் முன்னேற்றும் அதேவேளை, அமெரிக்காவையும் பாதுகாத்தல் எனும் அதன் இரட்டைச் செயற்பணியினைப் பிரதிபலிக்கிறது.

படவிளக்கம்:

படம் 1: போர்த் திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், நவம்பர் 14, 2025 ஆம் திகதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்சன், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத்  துயகொந்தா ஆகியோர். பாதுகாப்பு, பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை இவ்வொப்பந்தம் பலப்படுத்துகிறது.

By admin