ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதித்துவிட்டதால் பாம்பன் பாலத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார்.
சிவகங்கை ரயில் நிலையத்தில் நேற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, கோட்ட இயக்க மேலாளர் பிரசன்னா, முதுநிலை நிலைய அதிகாரி முருகன் உடனிருந்தனர். பின்னர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவகங்கை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. பாம்பன் பாலத்தில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கிவிட்டார். அவர் குறிப்பிட்டுள்ள சில குறைகள் சரிசெய்யப்பட்டதும், விரைவில் ரயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் இருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் ரயிலை மானாமதுரை வரை நீட்டிப்பது, தாம்பரம்-செங்கோட்டை ரயிலை சிவகங்கையில் நிறுத்திச் செல்வது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே அதிகாரிகளிடம் கொடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம் சாட்டியிருப்பது குறித்து கேட்டபோது, “அவர் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரயில்களை இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகிறோம். புதிய ரயில்களை இயக்குவது, ரயில்கள் நிறுத்துவது குறித்து ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும்” என்றார்.