படக்குறிப்பு, தேர்தல் நடத்தை விதிகளின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது தவறு என்று யோகேந்திர யாதவ் கூறுகிறார்
பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் முடிவுகளின் போக்கு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ். அவரிடம் பிபிசி இந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவா விரிவாகப் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறுவதற்கான காரணங்கள் என்ன?
யோகேந்திர யாதவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, இந்தத் தேர்தல் முடிவுகளின் போக்கை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பதுதான்.
“பிகார் தேர்தல் முடிவுகளால் நான் ஏமாற்றம் கொண்டேன், சோர்வடைந்தேன். ஆனால், ஆச்சரியப்படவில்லை” என்று அவர் கூறினார்.
மேலும், “வாக்கு வித்தியாசம் நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நாட்டின் குடிமகனாகவும், பிகாரின் நலன் விரும்பியாகவும், மாநிலத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆகவே, அந்த மாற்றம் ஏற்படாத காரணத்தால் நான் ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்தார்.
“இந்த பிகார் தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சாதகமாக இருந்தது என்பது முதல் நாளில் இருந்தே தெளிவாகத் தெரிந்ததால் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில், அது மகா கூட்டணியைவிட பெரிய கூட்டணி. முதல் நாளில் இருந்தே குறைந்தது ஐந்து சதவிகிதம் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் சமூக கூட்டணி மிகப்பெரியது.”
“பிகாரின் சாதிக் கணக்குகளைப் பார்த்தால், மகா கூட்டணி 40 சதவிகித வாக்குகளை ‘சாதி வாக்குகளில் இருந்து’ பெறுகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறைந்தபட்சம் 50 சதவிகித வாக்குகள் அவ்வாறு கிடைக்கின்றன. மூன்றாவதாக, கடந்த பல ஆண்டுகளாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, குறிப்பாக நிதிஷ் குமார், பெண்களின் வாக்குகளைப் பெறும் முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளார்.” என்கிறார் யோகேந்திர யாதவ்.
“இந்த முறை, பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததன் மூலம் அது முழுமையாக உறுதி செய்யப்பட்டது. நான்காவதாக, அரசு இயந்திரம், பணம், ஊடகங்கள், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். இவை அனைத்தினாலும், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது எனக் கூறலாம். இதன் மூலம் அது வெற்றி பெறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
ஆம், இப்போது காணப்படும் 200 இடங்களால் நான் ஆச்சரியப்படுகிறேன். அதேவேளையில், இதன் பின்னணியில் வேறு காரணங்களும் இருந்திருக்குமா என்று எனக்குச் சிறிய சந்தேகமும் எழுகிறது” என்று கூறினார் யோகேந்திர யாதவ்.
படக்குறிப்பு, பிபிசி ஹிந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவா யோகேந்திர யாதவுடன் பேசினார்
நிதிஷின் பிம்பம் அற்புதங்களைச் செய்து காட்டியதா?
நிதிஷ் குமாரின் 20 ஆண்டுக்கால ஆட்சியின் பிம்பத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன்மூலம் அது பயனடைந்ததா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த யோகேந்திர யாதவ், “பிகாரின் தேர்தல் அரசியல் களத்தின் மையமாக நிதிஷ் தற்போது இருக்கிறார் என்பது இன்றைய முடிவுகளில் இருந்து தெளிவாகிறது. அவரின்றி பாஜக செயல்பட முடியாது. பிகாரில் நிதிஷ் குமாருக்கு பதிலாக தேவேந்திர ஃபட்னவிஸ் போன்ற ஒருவரை நியமிக்க பாஜக ஒரு வாய்ப்பைத் தேடுகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை,” என்றார்.
‘ஆனால், தேர்தல் ஆதாயம் தேடும் ஓர் அரசியல் கட்சிக்கு இது சரியான உத்திதானே?’ எனக் கேட்டபோது, யோகேந்திர யாதவ், “பாஜக இப்போதைக்கு நிதிஷ் குமாருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது,” என்று பதிலளித்தார்.
அதோடு, “பிகாரின் அவலநிலை ஒருபுறம் இருந்தபோதிலும், அதன் அடிப்படைப் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படாமல் இருந்தபோதிலும், ஹரியாணா மற்றும் மத்திய பிரதேசத்தில் நான் பார்த்தது போல இங்கு நிதிஷ் குமார் மீது களத்தில் கோபமோ வெறுப்போ இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது,” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ரூ.10,000 கொடுத்தது எப்படி வேலை செய்தது?
பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்கும் திட்டம் எதிர்க்கட்சிகளால் எதிர்க்க முடியாத ஒரு துருப்புச் சீட்டாக அமைந்ததா?
இந்தக் கேள்விக்கு, “கடந்த பல தேர்தல்களில் பாஜக பெண்களைக் கவர்ந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று பதிலளித்தார்.
மேலும், “பாஜக பெண்களைக் கவர்ந்திழுப்பது இது முதல்முறை இல்லை. பெண்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், போதைப் பொருள் எதிர்ப்புத் திட்டம் என எதுவாக இருந்தாலும், பெண்களைக் கவர்வதில் அது சரியாகச் செயல்பட்டுள்ளது. இதுவும் அத்தகைய செயல்முறையின் ஒரு பகுதிதான். ஆனால், இந்த பத்தாயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் சுத்தமான லஞ்சம்; இதை வேறு எப்படியும் சொல்லிவிட முடியாது,” என்று தெரிவித்தார்.
ஆனால், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இலவச திட்டங்களை வழங்கி வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்று செய்யப்பட்டுள்ளனவே?
இதற்குப் பதிலளித்தபோது, “மத்திய பிரதேசத்தில் பாஜக செய்தது, குறைந்தபட்சம் ஒரு திட்டம் மட்டுமே. அது அறிவிக்கப்பட்டு, அதன் முதல் தவணை தேர்தலுக்கு முன்பு உங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறியது. அதுவும் தவறுதான். ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒரு நிரந்தர திட்டத்தை உருவாக்குகிறோம் என்னும் நாடகமாக அது இருந்தது” என்றார்.
மேலும் பேசிய யோகேந்திர யாதவ், “பிகாரில் நடந்தது அப்படியல்ல, அதுவொரு திட்டம் அல்ல. தேர்தலுக்கு முன்பு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அவையனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு செய்யப்பட்டன,” என்று கூறினார்.
“எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அரசின் கருவூலத்தைப் பயன்படுத்தி தேர்தலுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இவ்வளவு பணத்தை விநியோகித்தால், அதற்குப் பிறகு விளையாட்டு மைதானம் சமமாக இருக்காது. இதுவே எதிர்க்கட்சி ஆளும் எந்த மாநிலத்திலாவது இப்படிச் செய்யப்பட்டிருந்தால், தேர்தல் ஆணையம் ஒரே இரவில் நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ” என்று கூறினார்.