திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக (SI) பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சனை குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் வந்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலமாகப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாசமான முறையில் மெசேஜ்களை அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் அதிகாரி ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.
இப்புகார் குறித்து உயர் காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பி அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு தேடி வரும் பொதுமக்களிடம், அதுவும் பெண்ணிடம் காவல் அதிகாரியே இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.