படக்குறிப்பு, புதின்- மோதி சந்திப்பு ‘ரஷ்யாவின் எதிரிகளுக்கு கவலையை அளித்திருக்கும்’ என ஓல்கா ஸ்கபயேவா கூறினார்.கட்டுரை தகவல்
டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை அன்று, ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நடப்பு நிகழ்வுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது அதன் தொகுப்பாளர், புதினின் இந்திய வருகை குறித்த ஐரோப்பிய ஊடகங்களின் கருத்துகளைக் குறிப்பிட்டு, அதை கடுமையாக விமர்சித்தார்.
‘ரஷ்யா 1′ சேனலின் ’60 மினிட்ஸ்’ என்ற அந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபயேவா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, புதினை வரவேற்ற விதம், ‘ரஷ்யாவின் எதிரிகளுக்கு கவலையை அளித்திருக்கும்’ என்று கூறினார்.
“ரஷ்யாவை வெறுப்பவர்கள் விரக்தியடைந்துள்ளனர். அவர்களால் ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியவில்லை. இவ்வளவு பெரிய வரவேற்பு அந்த மேற்கத்திய நாடுகளுக்கும் டிரம்பிற்கும் அவமானமாக மாறியுள்ளது,” என்று நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஸ்கபயேவா கூறினார்.
“இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் தடுக்க டிரம்ப் முயன்றார், ஆனால் அது குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தவில்லை” என்று அவர் கூறினார்.
பின்னர் அவர் மேற்கத்திய செய்தித்தாள்களை மேற்கோள் காட்டி, “புதினின் இந்திய பயணம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. மேற்கத்திய அழுத்தத்தை மீறி ரஷ்ய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததன் மூலம் தெற்குலக நாடுகளுக்கு மோதி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்” என்று கூறினார்.
“ஜெர்மனியின் செய்தித்தாளான பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் (FA) செய்தியின்படி, இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ள அமெரிக்காவிற்கு, மோதி ஒரு விரும்பத்தகாத செய்தியை அனுப்பியுள்ளார்” என்றும் அவர் கூறினார்.
“இந்த வருகை மிகவும் வெற்றிகரமாக இருந்ததால், பிரிட்டன் அதை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்பட்ட ஒரு ராஜ்ஜிய அவமானமாகக் கருதியது,” என்று ஸ்கபயேவா தெரிவித்தார்.
“புதினுக்கு கிடைத்த வரவேற்பை, இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிட்டன் பிரதமரின் ‘உற்சாகமில்லாத மற்றும் பயனில்லாத’ இந்திய வருகையுடன் ‘தி டெலிகிராப்’ செய்தித்தாள் ஒப்பிட்டது. அந்த சமயத்தில், புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது உண்மையான நண்பர் யார் என்பதை மோதி தனது விருந்தினருக்கு நினைவூட்டியிருந்தார்,” என்று அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாது, “ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் நெருக்கம் இப்போது அமெரிக்காவை சங்கடப்படுத்துகிறது.” என்றும் ஸ்கபயேவா குறிப்பிட்டார்.
‘ஒரு அணுகுண்டு வெடித்தது போல்…’
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ஓல்கா ஸ்கபயேவா
வெளியுறவுத்துறை விவகாரங்கள் குறித்த விமர்சகர் அலெக்ஸி நௌமோவ், “புதினின் இந்திய வருகை டொனால்ட் டிரம்பிற்கு ஒரு சுயபரிசோதனைக்கான தருணம்” என்று கூறினார்.
“ரஷ்யா-இந்தியா உறவுகள் மேம்பட்டு வருவதைப் பார்க்கும்போது, டிரம்ப் உண்மையில் கொஞ்சம் கோபத்தில் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
‘சேனல் ஒன்’-இன் ‘வ்ரெம்யா போகஜெட்’ (Time Will Tell) என்ற நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான ஒலேஸ்யா லோசேவா,”மேற்கத்திய பத்திரிகையாளர்கள், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி, புதினின் இந்திய வருகையை ஒரு சவாலாகக் கருதி உடனுக்கு உடன் செய்திகளை வெளியிடத் தொடங்கினர்” என்றார்.
பல மேற்கத்திய ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி, பேசிய லோசேவா, “அவர்களின் தொடர்ச்சியான எதிர்வினைகளைப் பாருங்கள். ஒரு அணுகுண்டு வெடித்தது போல் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு இது மிகவும் கடினமாக இருக்கலாம். இத்தகைய செய்திகளின் மூலம் எந்தத் திசையில் செல்கிறோம் என்பது அவர்களுக்கே இன்னும் தெரியாவிட்டாலும், இலக்கு இல்லாத பாதையில் அவர்கள் தொடர்கிறார்கள்.” என்றார்.
பின்னர் அவர், “பிரெஞ்சு சேனலான பிரான்ஸ் 24, ‘மோதி விளாதிமிர் புதினை தனிப்பட்ட முறையில் வரவேற்றது, மரபு மீறலாகக் கருதப்படுகிறது’ என கூறுகிறது. ஆனால் இது இயல்பாகவே பரஸ்பர நம்பிக்கை மற்றும் முறைசாரா தன்மை குறித்த தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது.” என்று கூறினார்.
மேற்கத்திய ஊடகங்களில் ‘ஓரளவு பீதி’ நிலவுவதாக அவருடன் இருந்த மற்றொரு தொகுப்பாளர் ருஸ்லான் ஓஸ்டாஷ்கோ கூறினார். “ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்காக இந்தியா மீது வரிகளை விதிப்பது முதல் அரசியல் அழுத்தங்களை கொடுப்பது வரை மேற்கத்திய நாடுகள் அனைத்தையும் முயற்சித்தன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.”
‘புதின் வருகை ஒரு சர்வதேச நிகழ்வு’
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
ஆய்வாளர் விளாதிமிர் கோர்னிலோவ் கூற்றுப்படி, ‘புதினின் இந்தியப் பயணம் உண்மையிலேயே ஒரு சர்வதேச நிகழ்வாகும்.’
“மேற்கத்திய நாடுகளிலும் இது ஒப்புக் கொள்ளப்படுகிறது. நான் இப்போது ஐரோப்பிய வெளியீடுகளில் வரும் கருத்துக்களை தொடர்ந்து படிக்கிறேன். ‘உண்மையில் யார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்? இவ்வளவு காலமாக ரஷ்யா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, புறக்கணிக்கப்பட்டது என்று நாம் கூச்சலிட்டு வருகிறோம். இப்போது சீனா, இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, உலகின் முக்கிய சக்திகள் ரஷ்யாவுடன் நட்பு அல்லது நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றன. உண்மையில், ஐரோப்பிய நாடுகள் தனித்து நிற்கின்றன என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த நிலைமை ஐரோப்பாவிற்கு பல கேள்விகளை எழுப்புகிறது.” என்கிறார் கோர்னிலோவ்.
ரஷ்ய வணிக செய்தித்தாள் கொம்மர்சான்ட் மற்றும் அரசாங்க ஆதரவு நாளிதழ் இஸ்வெஸ்டியாவும் புதினின் வருகை குறித்து மேற்கத்திய ஊடகங்களின் சில குறிப்பிட்ட விமர்சனங்களை வெளியிட்டன.
“புதினும் மோதியும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துகிறார்கள், இது டிரம்பை கோபப்படுத்தியுள்ளது” என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கூறியதாக கொம்மர்சான்ட் மேற்கோள் காட்டியது.
‘அமெரிக்க அழுத்தத்தை மீறி’ புதினும் மோதியும் சந்தித்ததாக ப்ளூம்பெர்க் கூறியதாக இஸ்வெஸ்டியா மேற்கோள் காட்டியது.