படக்குறிப்பு, பூண்டை வெறும் வயிற்றில் உட்கொள்வது இரைப்பை குடல் கோளாறு, வாய்வு மற்றும் குடலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.கட்டுரை தகவல்
எழுதியவர், புட் செயின் ப்ரோக்ராம்
பதவி, பிபிசி உலக சேவை
பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக மதிக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளையும் வைரஸ்களையும் எதிர்க்கும் திறன் கொண்டதால், சமையலிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பரவியது. இன்று, உலகில் அதிக அளவில் பூண்டை உற்பத்தி செய்கிற நாடாக சீனா உள்ளது.
பிபிசி உலக சேவையின் புட் செயின் நிகழ்ச்சி, பூண்டின் வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது. அதே சமயம், பூண்டு உண்மையில் நமது ஆரோக்கியத்துக்கு நல்லதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது.
சமையலில் அத்தியாவசியமான பொருள்
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பூண்டு உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனது பிரெஞ்சு சமையல் பள்ளியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் டேனிஷ் சமையல் கலைஞரான பவுல் எரிக் ஜென்சன், ‘பூண்டைப் பற்றித் தெரியாத மாணவரை நான் சந்தித்ததே இல்லை’ என்கிறார்.
பூண்டு உணவின் சுவையை பெரிதும் உயர்த்துவதாக அவர் நம்புகிறார். ‘பூண்டு இல்லாமல் பிரெஞ்சு உணவு எப்படி இருக்கும்?’ என்று அவர் ஆச்சரியப்படுகிறார்.
“பிரெஞ்சுக்காரர்களால் பூண்டு இல்லாத உணவை கற்பனை கூட செய்ய முடியாது என நான் நினைக்கிறேன்,” குழம்பு முதல் சூப் வரை, காய்கறி அல்லது இறைச்சி உணவுகள் வரை, எல்லாவற்றிலும் ஒரு பல் பூண்டு கண்டிப்பாக இருக்கும். பூண்டு இல்லாமல் சமைப்பதை கற்பனை செய்யவே முடியாது” என்று ஜென்சன் கூறுகிறார்.
ஆனால் 1970களின் தொடக்கத்தில் டென்மார்க்கின் கிராமப்புறத்தில் வளர்ந்தபோது, பூண்டு அவருக்கு புதிதாக இருந்தது.
அதன் கடுமையான மணத்தின் காரணமாக மக்கள் அதை அப்போது பயன்படுத்தவில்லை. பின்னர், துருக்கிய தொழிலாளர்கள் டென்மார்க்கிற்கு வந்தபோது, பூண்டு சேர்த்த உணவு பரவலானது. இத்தாலிய பீட்சாக்கள் மூலமாகவும் ஜென்சன் பூண்டை ரசிக்கத் தொடங்கினார். இப்போது, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்காகவும் பூண்டைப் பயன்படுத்துகிறார்.
“நானும் என் துணைவியும், காலையில் ஒரு கப் சூப் குடிப்போம். அதில் ஒவ்வொருவரும் ஒரு முழு பூண்டு பல்லைப் பிழிந்து சேர்ப்போம். இதனால் எங்களுக்கு சளி, காய்ச்சல் எதுவும் வருவதில்லை. அதற்கு காரணம் பூண்டு தான் என நான் நிச்சயமாக நம்புகிறேன்.” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு நீண்ட பயணம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 20ஆம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களுக்கு பூண்டை கொண்டு வந்தனர்
பூண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றுள்ளது. பண்டைய கிரேக்கர்கள், சூனியம் மற்றும் வீடுகளின் பாதுகாவலரான ஹெகேட்டுக்கு காணிக்கையாக சாலைச் சந்திப்புகளில் பூண்டை வைத்தனர்.
எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர்.
அதேபோல், சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுப்புறக் கதைகளில், காட்டேரிகளை விரட்ட பூண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன” என ‘கார்லிக்: எடிபில் பயோகிராபி’என்ற (‘Garlic: An Edible Biography’) புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி கூறுகிறார்.
“பூண்டு குறித்து உள்ள மிகப் பழமையான மருத்துவ குறிப்பும் சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. ‘எபர்ஸ் பாப்பிரஸ்’ என்று அழைக்கப்படும் அந்த ஆவணத்தில், உடல்நலக்குறைவு முதல் உடலிலுள்ள ஒட்டுண்ணிகள், இதயம் மற்றும் சுவாசக் கோளாறுகள் வரை பல பிரச்னைகளுக்கு பூண்டை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய பல குறிப்புகள் இருந்தன,” என்றும் அவர் கூறுகிறார்.
பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
அடிமைகளின் உணவில் இருந்து அரச குடும்பத்தின் உணவு வரை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பீட்சா போன்ற நமக்குப் பிடித்த பல உணவுகளில் பூண்டு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது.
ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர்.
பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் சமையலில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
“அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது.” என்று கூறிய ராபின் செர்ரி, “எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டு கொடுத்தனர். அது மலிவானது மட்டும் அல்லாமல், கெட்டுப் போன உணவின் சுவையையும் மறைக்கக்கூடும். அதனால் அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது.” என்றும் விளக்குகிறார்.
ஆனால் 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது. அது, ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலம்.
“பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது,” என்கிறார் செர்ரி.
1950-60களில் குடியேறியவர்கள் மூலம் பூண்டு அமெரிக்காவுக்கு வந்தது. இது எதிர்மறையான கருத்துகளை மாற்ற உதவியது.
“யூதர்கள், இத்தாலியர்கள், கொரியர்கள் ஆகியோரை ‘பூண்டு சாப்பிடுபவர்கள்’ என்று அவமானகரமாக அழைத்தனர். இதற்கு மோசமான அர்த்தம் இருந்தது,” என்றார் செர்ரி.
மருந்தாகப் பயன்படுத்தப்படும் பூண்டு
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, பூண்டு அதன் மருத்துவ குணங்களுக்காக இன்றும் விரும்பப்படுகிறது
உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
சமையலில் முக்கிய பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன.
உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்த ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனா இப்போது உலகின் மிகப்பெரிய பூண்டு உற்பத்தியாளராக உள்ளது
2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
“பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி” என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர்.
“பூண்டில் ‘அல்லிசின்’ என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது”. என்றார்.
அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது.
ஆனால் அமெரிக்கன் ஃபேமிலி ஃபிசிஷியன் (American Family Physician) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம்.