பட மூலாதாரம், AFP via Getty Images
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்யும் முகவர்கள் மிகவும் கவனமாகத் தங்கள் வலையைப் விரிக்கிறார்கள்.
இத்தகைய முகவர்கள் செயல்படும் விதம் குறித்து பெங்களூரைச் சேர்ந்த மெஹபூப் பாஷா பிபிசி ஹிந்தியிடம் விளக்கினார்.
பெங்களூருவில் உள்ள உரிமம் இல்லாத ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் மெஹபூப் பாஷா உட்பட ஏழு பேரிடம் கடந்த ஒரு வருடத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலை அனுமதி (Work Permit) பெற்றுத் தருவதாக ஆள் சேர்ப்பு முகவர் உறுதியளித்தார் என்றும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு புதிய நாட்டைப் பரிந்துரைப்பார் என்றும் மெஹபூப் கூறுகிறார்.
“நான் காலையில் அவருக்குப் போன் செய்தால், நீங்கள் செர்பியாவுக்குப் போய் விடுங்கள் என்று சொல்வார். மாலையில், நான் உங்களுக்கு பெலாரஸின் வேலை அனுமதி பெற்றுத் தருகிறேன் என்பார், பின்னர் ஸ்லோவாக்கியாவின் பெயரைக் கூறுவார். மறுநாள், ஸ்பெயினுக்குச் செல்லுங்கள், அங்கு உங்கள் குடும்பத்தையும் அழைத்துச் செல்லலாம் என்பார்.”
“நான் அவரிடம், ‘எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் செல்லுபடியாகக்கூடிய வேலை அனுமதியை அளிக்கும் வரை, நான் நம்ப மாட்டேன்’ என்று கூறினேன்.” என்கிறார் மெகபூப்.
உரிமம் இல்லாத ஆள் சேர்ப்பு நிறுவனங்களால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகப் ‘புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர்’ (Protector of Emigrants) அமைப்பிலும், பெங்களூரு காவல்துறையிலும் புகார் அளித்தவர்கள் மெஹபூப் பாஷா மற்றும் அவரது சகாக்கள் மட்டுமல்ல.
பெங்களூருவில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் குறைந்தது ஐந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“ஒரு நிறுவனத்துக்கு எதிராக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் புகார்கள் இருந்தன. முக்கியக் குற்றவாளி துபையில் இருந்தார். சமீபத்தில் அவரது ஊழியர் ஒருவர் துபையிலிருந்து வந்தவுடன், கேரள காவல்துறை அவரைக் கைது செய்தது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
பெங்களூருவில் இந்த நிறுவனம் மக்களிடம் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்திருந்தது. மற்ற இரண்டு முகவர்களுக்கு எதிராக இதேபோன்ற புகார்கள் மேலும் இரண்டு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் மிரட்டல் ஆகிய வழக்குகள் அடங்கும்.
பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய நாடுகள் மீது அதிகரிக்கும் ஆர்வம்
இந்த முகவர்களால் ஏமாற்றப்பட்ட பெரும்பாலான மக்கள் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிலோ அல்லது அவற்றின் அண்டை நாடுகளிலோ குறைந்த திறன் கொண்ட வேலைகளைத் (low-skilled jobs) தேடியவர்களாக உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இப்போது தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் கவர்ச்சிகரமானவையாக கருதப்படுகின்றன.
“இப்போது அதிகப் பணம் கிடைப்பதால், வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வதை விட ஐரோப்பாவிற்குச் செல்ல மக்கள் விரும்புகிறார்கள்,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
“வளைகுடாவில் ஒரு சுமை ஏற்றுபவர் அல்லது இறக்குபவருக்கு மாதத்திற்கு சுமார் 30,000 ரூபாய் கிடைக்கிறது, அதே வேலையை ஐரோப்பாவில் செய்தால் 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.”
ஆகஸ்ட் 2024 நிலவரப்படி கர்நாடகாவில் சுமார் 299 உரிமம் பெற்ற ஆள் சேர்ப்பு முகவர்கள் இருந்தனர். ஆனால் வேலை தேடும் பலரும், தங்களிடம் உரிமம் இருப்பதாகப் பொய் கூறி ஏமாற்றும் நபர்களின் வலையில் விழுந்துள்ளனர்.
பட மூலாதாரம், AFP via Getty Images
“மீண்டும் மீண்டும் ரத்தான விசாக்கள்”
சுதர்ஷனும் இதேபோன்ற மோசடிக்கு ஆளானார். சமூக ஊடகங்களில் ஹங்கேரி, போலந்து மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பிற நாடுகளில் உள்ள வேலைகளுக்கான விளம்பரங்களை இந்த ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.
சுதர்ஷன், தனது வருமானத்தை மூன்று மடங்கு உயர்த்தக் கூடிய வகையில் கட்டுமானத் துறையில் ஒரு பாதுகாப்பு மேற்பார்வையாளர் வேலையைத் தேடிக்கொண்டிருந்தார். அவரிடம் பாதுகாப்பு மேற்பார்வையில் டிப்ளமோ இருந்தது.
“ஒரு நாள் ஒருவரிடம் இருந்து எனக்குப் அழைப்பு வந்தது. அவர் எனது எண்ணை எங்கிருந்து பெற்றார் என்று எனக்குத் தெரியவில்லை – அவரின் நிறுவனத்திடம் ஆள் சேர்ப்பு உரிமம் இருப்பதாகக் கூறினார். அவர் பணத்தைப் பற்றிப் பேசவில்லை, முன்பணமாக 50,000 ரூபாய் மட்டும் கொடுக்க வேண்டும் என்றார்,” என சுதர்ஷன் பிபிசி இந்தியிடம் கூறினார்.
“ஆங்கிலத்தில் நேர்காணல் நடப்பதற்கு முன்பு பணம் கொடுக்க நான் மறுத்தேன். பின்னர், மொத்தம் சுமார் 4.8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், அதனுடன் சேவை கட்டணமும் உண்டு என்று கூறப்பட்டது.” என்று தெரிவித்தார்.
சுதர்ஷன் ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கு மாநகராட்சியிடமிருந்து பெறப்பட்ட ஒரு சான்றிதழ் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டார்.
“நான் ரூ.1.5 லட்சம் கொடுத்தேன். ஹங்கேரியில் வேலைக்கான அனுமதிக்கு காத்திருக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. 10–15 நாட்களுக்குப் பிறகு, மேலும் 3.58 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உதவ முடியாது என்று போன் வந்தது. பின்னர் விசா நிராகரிக்கப்பட்டது என்று ஜனவரியில் அவர் சொன்னார், ஆனால் பிறகு செர்பியாவிற்கான வேலை அனுமதி வாங்கி தருவதாகச் சொன்னார்.”
“ஒரு மாதம் கழித்து, காத்திருங்கள், செர்பியாவின் விசாவும் ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் எதுவும் நடக்கவில்லை. பின்னர் முகவர் லிதுவேனியாவிற்கான விசா கிடைக்கலாம் என்று சொன்னார். கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாத வாக்கில் நாங்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டோம்,” என்று அவர் கூறினார்.
“என்னைப்போல மெஹபூப் மற்றும் அவரது சகோதரர் அஸீம் பாஷா இருவரும் தலா 12 லட்சம் ரூபாய் கொடுத்தனர். ஹூப்ளியைச் சேர்ந்த நவீன் அன்ஜும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்,” என அவர் கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
இடத்தையும் வேலையையும் மாற்றி மாற்றி சொன்ன முகவர்கள்
மெஹபூப் பாஷாவின் விஷயத்தில், நாடு மாறியபோதெல்லாம் வேலையும் மாறியது.
“முதலில் அவர் பிரான்சுக்குச் செல்லத் தயாராக இருங்கள், கப்பலுக்கு வண்ணம் பூசும் வேலை இருக்கிறது என்று சொன்னார். நான் எந்த வேலை செய்யவும் தயாராக இருந்தேன், ஆனால் எனக்குப் பெயிண்ட் கோட்களைப் பற்றி அதிகம் தெரியது. அதன் பிறகு அவர், நெதர்லாந்திற்குச் செல்லுங்கள், அங்கே தக்காளிச் சாகுபடியில் நல்ல வேலை இருக்கிறது என்றார். நான் மற்றும் என் சகோதரன் இருவரும் தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது.” என அவர் கூறினார்.
“அவரிடம் பேசும்போதெல்லாம், அவர் செல்லத் தயாராக இருங்கள், உடனடியாகப் பணத்தைத் திரட்டுங்கள் என்று சொல்வார். எங்கள் சிறிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து நாங்கள் கடன் வாங்க வேண்டியிருந்தது. இதற்குச் சிறிது காலம் ஆனது,” என அவர் கூறினார்.
“இதற்கிடையில் அவர் லிதுவேனியாவுக்குச் செல்லச் சொன்னார், நான் விருப்பமில்லாமல் ஒப்புக்கொண்டேன். அவர் வேலை அனுமதி உருவாக்கிக் கொடுத்தார், ஆனால் அதில் பெயர் தவறாக எழுதப்பட்டிருந்தது.”
“அவர் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் தனது வார்த்தைகளை மாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு நாள், செர்பியாவுக்குச் செல்ல வேண்டுமா அல்லது பெலாரஸுக்குச் செல்ல வேண்டுமா என்று முடிவு செய்யுங்கள் என்றார். அப்போது எனக்கு அவர் மீதுள்ள நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. அவர் ஸ்பெயினைப் பரிந்துரைத்தபோது, நான் சொன்னேன் – ‘இதற்குமேல் எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை,'” என தொண்டை அடைக்கும் குரலில் மெஹபூப் பாஷா கூறினார்,
பயனற்ற வாக்குறுதிகள்
ஆள் சேர்ப்பு முகவர் மெஹபூப் பாஷாவுக்கு 8.36 லட்சம் ரூபாய் திருப்பித் தருவதாக உறுதியளித்தார், ஆனால் பிரணவ் ஆதித்யாவைப் போல அவரது அதிர்ஷ்டம் இல்லை.
பிரணவ், தான் கொடுத்த 3.52 லட்சம் ரூபாயில் இருந்து 80,000 ரூபாயை வெற்றிகரமாக திரும்பப் பெற்றார்.
“நான் அவரது அலுவலகத்திற்குச் செல்லும்போதெல்லாம், அவர் இந்த நாடு, அந்த நாடு என்று சொல்வார்” என்று பிரணவ் ஆதித்யா கூறினார்.
ஆனால் பிரணவ் ஏன் ஐரோப்பாவிற்கு மட்டுமே செல்ல விரும்பினார்?
26 வயதான பிரணவ் வைத்யா, “இப்போது வளைகுடாவில் அதிகப் பணம் கிடைப்பதில்லை. யூரோவின் மதிப்பு அதிகம். நான் என் அம்மாவைக் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.
நிபுணர்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச குடியேற்றம் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான பேராசிரியர் இருதய ராஜன், கேரளக் குடியேற்ற ஆய்வு 2018-2023 இல் மக்கள் வளைகுடாவை விட ஐரோப்பாவிற்குச் செல்லவே அதிகம் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது என்று பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
“கேரளாவைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை பெரியது. ஐரோப்பாவிற்குச் செல்வதில் ஒரு நன்மை உள்ளது, அது என்னவென்றால், சில நாடுகளில் அவர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமை (Permanent Residency) கிடைக்கலாம், இது வளைகுடா நாடுகளில் சாத்தியமில்லை,” என்று அவர் கூறுகிறார்.
“முகவர்கள் மக்களுக்கு கனவுகளை விற்கிறார்கள், எனவே நாம் பள்ளி மட்டத்திலேயே, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிலேயே புலம்பெயர்வு பற்றிய விழிப்புணர்வை அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் குறிப்பாக அதன் ஆபத்துகள் பற்றி கற்பிக்கத் தொடங்க வேண்டும்,” என்று பேராசிரியர் ராஜன் கூறினார்.
குடிவரவுச் சட்டம், 1983-இன் கீழ், உரிமம் பெற்ற ஆள் சேர்ப்பு முகவரின் கமிஷன் தொகை 30,000 ரூபாய்க்குள் (கூடுதலாக ஜிஎஸ்டி வரி) மட்டுமே இருக்க முடியும்.
தற்போது நாட்டில் 2,463 உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே உள்ளனர்.
பிப்ரவரி 2025 வரை நாட்டில் 3,281 சட்டவிரோத முகவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரின் பெயர்களும் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளன.
இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு