பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.
அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி.
நவி மும்பையில் நடக்கும் இந்தப் போட்டியின் மழை காரணமாக டாஸ் தாமதமாகியிருக்கிறது.
5 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படாது. இறுதிப் போட்டிக்கு ஒரு ‘ரிசர்வ் நாள்’ இருக்கிறது.
இந்திய அணியின் பலம் என்ன?
ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர்: இந்திய அணிக்கு ஓப்பனிங்கில் ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷஃபாலி வெர்மா நல்ல தொடக்கம் தர வேண்டும் என்கிற அழுத்தத்தில் இருப்பார்கள். ஸ்மிரிதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
சஃபாலி கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் அதிரடியான தொடக்கம் தருவதற்கான திறன் அவரிடம் உள்ளது.
மிடில் ஆர்டர்: ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு அசைக்க முடியாத கூட்டணியாக உள்ளனர்.
ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவின் அனுபவமும் அமைதியான அணுகுமுறையும் இந்த அணியில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ரிச்சா கோஷின் அதிரடி ஃபினிஷிங் மற்றும் அமன்ஜோத் கவுரின் ஆல்ரவுண்ட் திறன்கள் நவீன கால கிரிக்கெட்டின் தேவைகளாக உள்ளன.
சுழற்பந்து வீச்சு: தென் ஆப்ரிக்க அணியில் வலது கை பேட்டர்கள் அதிகமாக இருப்பதால் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ராதா யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். அது மிடில் ஓவர்களில் இந்தியா ரன்களைக் கட்டுப்படுத்த உதவும்.
வேகப்பந்து வீச்சு: கிராந்தி கவுட் மற்றும் ரேணுகா சிங் காம்பினேஷன் தொடக்க ஓவர்களில் விக்கெட் எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
மைதானம் எப்படி இருக்கிறது?
நவி மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் 30,000 ரசிகர்கள் அமரலாம்.
இந்த உலகக் கோப்பையில் இம்மைதானம் இந்திய அணிக்கு சாதகமானதாகவே இருந்துள்ளது.
இங்கு நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இங்கு விளையாடுகிறது. இது இந்தியா அணிக்குச் சாதகமான அமையும்.