கோவை: மும்மொழி தொடர்பான விவகாரத்தில், மேடையில் பேசுவதை முதலில் விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநகர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எங்கள் கட்சிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு அநியாயம் நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது என்று முதல்வர் கூறியுள்ளார். அவருக்கு இந்த தகவலைத் தெரிவித்தது யார் என்று தெரிவிக்காவிட்டால், நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். மறுவரையறையில் தற்போதுள்ள 543 தொகுதிகள் 800 வரை உயரலாம். விகிதாச்சார அடிப்படையில்தான் மறுவரையறை இருக்கும். இதனால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசும்போது, மத்திய, மாநில அரசுகளைக் குறை கூறியுள்ளார். விஜய் குழந்தைகளுக்கும், அவர் நடத்தி வரும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் மூன்று மொழி. ஆனால், தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. இது என்ன நியாயம்? யாரும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. எனவே, மேடையில் பொய் கூறுவதை விஜய் தவிர்க்க வேண்டும். மேடையில் பேசுவதை முதலில் அவர் கடைப்பிடிக்க வேண்டும்.
திமுகவை ஆட்சியில் அமர வைத்ததற்காக பிரசாந்த் கிஷோரை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் அவருடன் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் கட்சியுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும், ஒருமித்த கருத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுக்க இன்றும் நேரம் உள்ளது. நிச்சயம் அதற்கு பதில் கூறுவோம்.
மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி `காட்டன் 2.0′ என்ற பருத்தி திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்திய ஜவுளித் தொழில் பாதிக்காத வகையில், வங்க தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிப் பொருட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. செயற்கை இழை பிரச்சினைக்குத் தீர்வுகாண, மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடைந்து, சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்து அதிகரிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசிடம் பெற்றுத்தரப்படும். கோவையில் ‘பாரத் டெக்ஸ்’ என்ற சர்வதேச ஜவுளிக் கண்காட்சி நடத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். மக்கள், கட்சித் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள்தான் எங்களது வியூக நிபுணர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.