மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போக்கை பார்க்கும் போது, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற வாய்ப்புள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் நிலை தென்படுகிறது.
288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 145 இடங்களை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் பாஜக கட்சி சார்பாக 149 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இணையதள தரவுகளின்படி, இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இரண்டாவது இடத்திலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. அதாவது மகாயுதி கூட்டணி மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களை வெல்லும் நிலையில் இருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் ‘இப்போது ஏக்நாத் ஷிண்டேதான் எங்கள் முதல்வர்’ என்று கூறிவந்த நிலையில், தற்போது இந்த கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டேவை பாஜக மீண்டும் முதல்வராக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சி செய்த போது பாஜக அவரை முதல்வராக்கியது. இது அவர் செய்த கிளர்ச்சியின் வெகுமதியாக கருதப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
இந்த முறை பாஜக கட்சியை சேர்ந்த ஒருவரே முதல்வராக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பாஜகவில் இருந்து முதல்வர் பதவிக்கு வரப் போவது யார்?
ஏற்கனவே மகாராஷ்டிர மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்துள்ளார், தற்போது அவர் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தில் துணை முதல்வராக உள்ளார். அவர் பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவின் விசுவாசியாக கருதப்படுகிறார். ஆனால் சமீப ஆண்டுகளாகவே பல்வேறு மாநிலங்களில் முதல்வர் பதவிக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பாஜகவின் முடிவுகள் ஆச்சரியமானதாகவே இருந்திருக்கிறது.
அடுத்த முதல்வர் யார்?
இத்தகைய சூழ்நிலையில், பட்னாவிஸுக்கு பதிலாக, ஓபிசி பிரிவில் இருந்து ஒருவரை முதல்வராக பாஜக நியமிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவிவருகிறது. பட்னாவிஸ் விதர்பா பகுதியின் பிராமண பிரிவை சேர்ந்தவர்.
இது ஒரு முக்கியமான தேர்தலாக இருந்தது. முதலாவதாக, சிவசேனா மற்றும் என்.சி.பி இரண்டு பிரிவுகளாக பிரிந்து தனித்தனியாக போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
இரண்டாவதாக, தேர்தலுக்கு முன்பு வரை எந்த கூட்டணியோ, கட்சியோ தங்களது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதல்வர் பதவியை கோரலாம் என்பதுதான் இதன் பின்னணியில் இருந்த உத்தியாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது.
தற்போது வெளியான தேர்தல் முடிவுகளை பொருத்தவரை பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக முதல்வர் பதவி பாஜகவுக்கு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், மகாயுதி கூட்டணியில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்தவொரு தெளிவான அறிக்கையையும் வெளிவரவில்லை.
“இறுதியான முடிவுகள் வெளிவரட்டும், அதன் பிறகு மூன்று கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரும்”, என்றும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
அவர், “மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களும் இதுகுறித்து ஆலோசிப்போம். தேர்தலை எப்படி ஒற்றுமையாக எதிர்கொண்டோமோ, அதேபோல் ஒற்றுமையாக ஒரு முடிவெடுப்போம்” என்றார்.
“ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பாஜகவின் மத்திய தலைமை இணைந்து இது குறித்து முடிவு எடுத்த பின்னர் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்”, என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் தாவ்டே கூறினார்.
மகாராஷ்டிரா அரசியல் நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான ஜிதேந்திர தீட்சித், “பாஜக மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது என்றால், பாஜக கட்சியை சேர்ந்த ஒரு தலைவரே முதல்வராக பதவியேற்க முடியும்”, என்று பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
“முதலில் நினைவுக்கு வரும் பெயர் தேவேந்திர பட்னாவிஸ். அவர் முதல்வர் ஆக்கப்படவில்லை என்றால் புதிதாக ஒரு நபர் வரலாம்”, என்றார் அவர்.
“மற்ற மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களின் போக்கை வைத்து பார்த்தோம் என்றால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் திடீரென பெரிதும் பரிச்சயம் இல்லாத ஒரு நபர் முதல்வராக்கப்பட்டார். மகாராஷ்டிராவிலும் பாஜக இதுபோன்ற முறையைப் பின்பற்றினால், பட்னாவிஸுக்கு பதிலாக வேறு ஒருவரையும் முதல்வராக்க முடியும்”. என்றார் அவர்.
“பட்னாவிஸை தவிர, முதல்வர் பதவிக்காக வினோத் தாவ்டேவின் பெயரும் வரிசையில் உள்ளது. ஓபிசி பிரிவின் முகமாக விதர்பா பகுதியைச் சேர்ந்த சுதிர் முங்கந்திவார் இருக்கிறார். அவரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கலாம். இவர்கள் தவிர, பங்கஜா முண்டே மற்றும் வேறு சில நபர்களும் முதல்வராக வாய்ப்புள்ளது.” என்று ஜிதேந்திர தீட்சித் கூறினார்.
ஷிண்டேவுக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா?
2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. அந்தத் தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன.
இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் அப்போது முதல்வர் பதவிக்காக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இறுதியில் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்து. உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வரானார்.
இருப்பினும், இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே கிளர்ச்சி செய்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.
அரசாங்கத்தை அமைப்பதற்கு, முதல்வர் பதவிக்காக பாஜக சமரசம் செய்ய வேண்டியிருந்தது, தேவேந்திர பட்னாவிஸூக்கு துணை முதல்வர் பதவியே வழங்கக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது. தற்போது பாஜக முன்னலை வகித்து வருகிறது. கடந்த முறை எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு பாஜக வர வேண்டியிருந்ததால், முதல்வர் பதவியில் சமரசம் செய்து கொண்டது.
ஆனால் இந்த முறை முதல்வர் பதவி குறித்து பாஜக சமரசம் செய்து கொள்ள வாய்ப்பில்லை.
பீகார் மாநிலத்தில் செய்ததைப் போல, முதல்வர் பதவியை பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கலாம் என்ற நிலையும் இருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக இருந்தும் பாஜக இதுபோல செய்து வருகிறது.
இருப்பினும், அத்தகைய சூழ்நிலையில், பாஜக துணை முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டு, அரசாங்கத்தில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
பட்னாவிஸ் அடுத்த முதல்வரா?
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேவேந்திர பட்னாவிஸ் கூறிய ‘நான் கடல் போன்றவன், மீண்டு வருவேன்’, என்ற வாக்கியம் மிகவும் பிரபலமானது.
பின்னர் இது நிரூபணமானது. ஆனால் பாஜக ஆளுங்கட்சியான போது, அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அவர் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
மகாராஷ்டிரா மாநில பாஜகவில் தேவேந்திர பட்னாவிஸின் அந்தஸ்து, தற்போது அவர் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக தெளிவுபடுத்துகிறது.
தேவேந்திர பட்னாவிஸ் முதன்முதலில் மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டு முதலமைச்சரானார். அப்போது, மகாராஷ்டிர பாஜகவின் தலைவராக இருந்தபடியே அக்கட்சியை வெற்றி பெற செய்தார்.
அவர் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்து, 2019 ஆம் ஆண்டிலும் அக்கட்சியை வெற்றிக்கு வழிநடத்தினார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி முறிந்ததால், அவரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை.