பட மூலாதாரம், Getty Images
*எச்சரிக்கை: இதில் இடம் பெறும் தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து பர்பானி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாக காவல் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
ஜூலை 15-ஆம் தேதி பத்ரி – செலு தேசிய நெடுஞ்சாலையில், தேவேந்திர ஷிவாரா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையை காவல்துறையினர் மீட்ட போது, அக்குழந்தையின் உடலில் உயிரில்லை.
குழந்தையின் பெற்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? ஏன் பச்சிளம் குழந்தை பேருந்துக்கு வெளியே வீசப்பட்டது?
முழு விவரம் இங்கே!
நடந்தது என்ன?
ஜூலை 15-ஆம் தேதி காலை வழக்கம் போல் பத்ரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார் காவல்துறை அதிகாரி அமோல் ஜெய்ஸ்வால். அப்போது அவருக்கு தன்வீர் ஷேக் என்ற நபரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது.
தன்வீர் மிகவும் பதற்றத்துடன், “பச்சிளம் குழந்தை ஒன்றை யாரோ பேருந்தில் இருந்து தூக்கி வீசிச் சென்றுள்ளனர். செலு சாலைக்கு அருகே இருக்கும் கால்வாய்க்கு அருகே வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் உதவி எங்களுக்கு அவசரமாக தேவை,” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டவுடன் தன்வீர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்தார் ஜெய்ஸ்வால்.
காவல்துறையினரிடம் மேற்கொண்டு பேசிய தன்வீர், “நாங்கள் வழக்கம் போல் சாலையின் இந்த பகுதியில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது ஓடும் பேருந்தில் இருந்து ஏதோ ஒன்று தூக்கி வீசப்படுவதை பார்த்தோம். 100 அடிக்கு முன்னாள் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. ஒரு சில நிமிடம் அங்கே நின்ற பேருந்து, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது,” என்று கூறினார்.
அந்த பொருள் தூக்கி வீசப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கே கறுப்பு – நீல நிற துணியில் சுற்றப்பட்ட ஆண் குழந்தையை பார்த்தேன் என்று தன்வீர் கூறியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அமோல் ஜெய்ஸ்வாலிடம் தன்வீர், அந்த பேருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
அமோல் ஜெய்ஸ்வால் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் மகேஷ் லந்தேகேவிடம் தகவலை தெரிவித்து, ஆம்புலன்ஸை வரவழைத்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் மகேஷ், கான்ஸ்டபிள் விஷ்ணு வாக் மற்றும் அவருடைய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
சம்பவ இடத்திற்கு சென்ற மகேஷின் குழுவினர் அந்த பேருந்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உரிமையாளர் சுயோக் அம்பில்வாதேவுக்கு அழைப்பு விடுத்து நடந்த சம்பவத்தை அவர் எடுத்துரைத்தார். பேருந்து எங்கே இருந்தாலும் அதனை உடனடியாக நிறுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். பிபிசி மராத்தி அந்த பேருந்து உரிமையாளரிடம் பேசியது.
“காலை 7.30 மணி அளவில் மகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. பச்சிளம் குழந்தையை யாரோ ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றதாக அவர் கூறினார். அந்த பேருந்து எங்கே சென்று கொண்டிருந்தாலும் அதனை உடனே நிறுத்தும்படியும், காவல்துறையினர் வரும் வரை அதில் இருந்து யாரும் இறங்கக் கூடாது என்றும் மகேஷ் கேட்டுக் கொண்டார்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
சுயோக் பேருந்தை அடைந்த அதேநேரத்தில் காவல்துறையினரும் அங்கே வந்துவிட்டனர். சுயோக் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் பேருந்தை சோதனை செய்து, பச்சிளம் குழந்தையை வீசிச்சென்ற நபர்களை அழைத்துச் சென்றனர்.
குழந்தையின் அம்மாவை பர்பானியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் பேருந்தில் பயணித்த மற்ற நபர்களிடமும் விசாரணை நடத்தினர். பத்ரி காவல் நிலையத்திற்கு பேருந்து எடுத்துச் செல்லப்பட்டு முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டது.
“நாங்கள் அங்கே சென்ற போது, அப்பெண் பேருந்திலேயே அக்குழந்தையை பிரசவித்திருக்கிறார் என்று தெரியவந்தது. ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை எனவே அங்குள்ள யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்று காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனர்,” என்று சுயோக் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
பேருந்து பயணத்தின் போது அப்பெண் பிரசவித்ததற்கான அனைத்து தடயங்களையும் காவல்துறையினர் சேகரித்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.
குழந்தை தூக்கி எறியப்பட்டது ஏன்?
காவல்துறையினர் வழங்கிய தகவலின் படி, குழந்தையின் தாய்க்கு வயது 19. தந்தைக்கு 21. பர்பானி பகுதியில் வசித்து வரும் அவர்கள் சிகாராபூரில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அமோல் ஜெய்ஸ்வால் பதிவு செய்துள்ள புகாரில், “எங்களுக்கு அக்குழந்தை வேண்டாம் என்பதால் நாங்கள் வீசிச்சென்றோம்,” என்று அந்த தம்பதி கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
“குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் அவர்கள் குழந்தையை துணி ஒன்றில் சுற்றி ஓடும் பேருந்தில் இருந்து வீசிச் சென்றுள்ளனர்,” என்று புகாரில் குறிப்பிடப்படுள்ளது.
காவல் ஆய்வாளர் மகேஷ் இதுகுறித்து பேசும் போது, குழந்தையின் மருத்துவ ஆய்வு முடிவுகள் வந்த பிறகு தான், குழந்தை பிறக்கும் போதே இறந்து தான் பிறந்ததா அல்லது தூக்கி வீசப்பட்டதால் இறந்ததா என்பது தெரிய வரும் என்று குறிப்பிட்டார்.
இந்த தம்பதியினர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை அறிக்கை முடிவுகள் வந்த பிறகு விசாரணைக்கு மறுபடியும் அழைக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
அந்த தம்பதியினர் மீது ஐ.பி.சி. 94, 3(5) பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையின் உடலை கைவிட்டுச் செல்லும் குற்றத்திற்காக பதியப்படும் பிரிவு இது.
குழந்தையின் தந்தையிடம் பிபிசி மராத்தி பேச முயற்சி செய்தது. ஆனால் அவரிடம் இருந்து எந்த கருத்தையும் பெற இயலவில்லை. அவர்கள் தரப்பு கருத்தை கேட்ட பிறகு இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு