• Wed. Nov 12th, 2025

24×7 Live News

Apdin News

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கலுக்குள் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு | Minister E.V.Velu press meet in madurai

Byadmin

Nov 12, 2025


மதுரை: கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் பொங்கல் பண்டிகைக்குள் நிறைவடையும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்டப்பட்டு வரும் மேலமடை மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தென்னகம் புறக்கணிக்கப்பட்டிருந்து. தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், நெடுஞ்சாலைக்கு பல ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருநெல்வேலியில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் காவேரி மேம்பாலம் கூடுதலாக கட்டப்பட்டு வருகிறது.

தமிழ்வளர்த்த மதுரைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற அடிப்படையில் மேலமடை மேம்பாலத்திற்கு ரூ.150 கோடியும், கோரிப்பாளைம் மேம்பாலத்திற்கு ரூ.190 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு 9ஆவது முறையாக ஆய்வு மேற்கொள்கிறேன். ​

சுமார் 950 மீட்டர் நீளம் கொண்ட மேலமடை பாலப் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் வண்ணம் பூசுதல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 3 சதவீத பணிகளே மீதம் உள்ளன. இப்பணிகள் வரும் டிச.1-ம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும். எனவே, இப்பாலத்தை வரும் டிச.7-ம் தேதி முதல்வர் நேரில் வந்து திறந்து வைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

நிலம் எடுப்பு தொடர்பான பிரச்சினைகளால் கோரிப்பாளையம் பாலப் பணிகள் 6 மாதங்கள் காலமாதம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பாலப் பணிகள் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் நிறைவடையும். அதனைத்து தொடர்ந்து இந்த பாலத்தையும் முதல்வர் நேரில் வந்து திறந்து வைப்பார். எனவே, இந்த பணிகளை வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடமும், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளரிடமும் கூறியுள்ளேன்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தித்தில் பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருகிறது. எனவே, தற்போதைய திமுக ஆட்சியல் பாலம் பாதுகாப்புக்கு என தனி விங்க் அமைக்கப்பட்டு, அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே பாலம் திறக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் கோயம்புத்தூரில் 10.2 கி.மீ. நீளமுள்ள பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பாலத்தின் வளைவுகளில் மலைகளில் பயன்படுத்தப்படும் அமெரிக்கன் டெக்னாலஜி மூலம் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த இரு பாலங்களைம் கட்டி முடித்துவிட்டு மதுரை தெற்குவாசல் – வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். பின்னர் அதன் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படவுள்ளது.

பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் உறுதியான பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார பூர்வமான புகார்களுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.



By admin