சென்னை: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது பாஜக-வில் தேசிய அளவிலான கட்சி பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது. உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது. பதவிகளுக்கு பின்னால் செல்பவன் நான் அல்ல” என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது: “பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஏமாற்றுகின்ற கட்சி அல்ல; ஏமாறும் கட்சியும் அல்ல. எந்த கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என விரும்புவது இல்லை. இந்த விஷயம் தொடர்பாக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து இதற்கு மேல் நான் பேசுவது சரியாக இருக்காது.
அதிமுக உடன் கூட்டணி அமைத்ததில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். நான் பாஜக தொண்டன். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை பதவியில் இருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். முன்பை போல அரசியல் இல்லை. இதை தலைவர்களும் புரிந்து கொள்வார்கள்.
எதிர்வரும் தேர்தலில் ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்று எனக்கு தெரியாது. திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியுமா என்று எனக்கு தெரியாது. அது போல எந்தவொரு கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? அல்லது கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்களின் உழைப்பை கொண்டு ஆட்சிக்கு வரலாம். இன்றைய தமிழகம் மாறியுள்ளது. இது 1980, 1990 மற்றும் 2000 போன்ற காலம் அல்ல. 2024 மக்களவை தேர்தல் இதற்கு ஒரு சாட்சி. எந்த கட்சியின் வாக்கு சதவீதம் என்னவென்று எல்லோருக்கு தெரியும். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரத்தில் பிற கட்சிகளும் மற்றொரு கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்றார்.