பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
‘முஸ்லிமாக இருந்து இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்று இல்லாவிட்டாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து பெற முடியும்’ என, நவம்பர் 7-ஆம் தேதி வழக்கு ஒன்றின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் தனது நடத்தையால் அந்தப் பெண் இந்து மதத்துக்கு மாறிவிட்டதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
பல வழக்குகளுக்கு வழிகாட்டும் தீர்ப்பாக இது அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம், சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
சென்னை பெண்ணின் வழக்கில் என்ன நடந்தது?
சென்னை அம்பத்தூரை சேர்ந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்து திருமணச் சட்டப் பிரிவு 13(பி)ன்படி தங்களுக்கு விவாகரத்து வழங்குமாறு மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், ‘மனைவி முஸ்லிமாக உள்ளார். ஆனால், இந்து திருமணச் சட்டப் பிரிவு 2ன்படி மதத்தால் இந்து, புத்தம், ஜெயின், சீக்கியராக இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சி, யூத பிரிவை சாராதவர்களாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது’ என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
‘அவர்களுக்கு மட்டுமே இந்து திருமணச் சட்டப் பிரிவு பொருந்தும்’ எனக் கூறி விவாகரத்து மனுவை அவர் நிராகரித்திருந்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தம்பதியர் தரப்பில் சிவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இந்த வழக்கில் நீதிபதி பி.பி.பாலாஜி தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, ‘மனைவி பிறப்பால் இஸ்லாமியர். ஆனால், இந்து முறைப்படியும் சடங்குகளின்படியும் திருமணம் செய்துள்ளார்’ எனக் கூறினார்.
சென்னை, முகப்பேரில் உள்ள கோவிலில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. “இதற்கான ஆவணங்களில் எந்த இடத்திலும் தன்னை ஒரு முஸ்லிம் என அவர் குறிப்பிடவில்லை” என பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டது.
“பெண்ணின் தந்தை, தாய் ஆகியோர் மத அடிப்படையில் முஸ்லிம்” என்று கூறிய பெண்ணின் வழக்கறிஞர், “பெண்ணின் தாய்வழிப் பாட்டி இந்து மதத்தைச் சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
“வெளிப்படையாக தன்னை இந்து மதத்துக்கு மனுதாரர் தன்னை மாற்றிக் கொண்டார். ஆனால், அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இந்துமத சடங்குகளின்படியே திருமணம் செய்து கொண்டார்” எனவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
கோவிவில் நடைபெற்ற திருமணம் தொடர்பான புகைப்படங்களையும் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வழங்கிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் பெண்ணின் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெருமாள் நாடார் வழக்கின் தீர்ப்பு என்ன?
வழக்கின் வாதத்தின்போது 1971ஆம் ஆண்டு பெருமாள் நாடார் எதிர் பொன்னுசாமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று மேற்கோள் காட்டப்பட்டது.
இந்த வழக்கில், ‘வேறொரு மதத்தில் பிறந்த ஒருவர் தன்னை இந்து என்று வெளிப்படையாக அறிவித்தாலும் அவரை இந்து மதத்துக்கு மாற்ற முடியாது. ஆனால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அதனை வெளிப்படுத்தும் நடத்தையுடன் இருப்பது மத மாற்றத்துக்கு போதுமான சான்று’ எனத் தீர்ப்பளித்துள்ளது.
‘மத மாற்றத்தை செயல்படுத்துவதற்கான சடங்குகள் தேவையில்லை’ எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அடிப்படையில், தனது நடத்தையால் மனுதாரர் இந்து மதத்துக்கு மாறிவிட்டதாகவும் விவாகரத்து கோரிய மனுவில் மதத்தால், தான் இந்து என உறுதிப்படுத்தியிருந்தால் அவர் இந்து மதத்துக்கு மாறியதை நிறுவுவதற்கு போதுமானது” எனப் பெண்ணின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்த வாதத்தில் வலிமை இருப்பதாக தீர்ப்பில் நீதிபதி பி.பி.பாலாஜி குறிப்பிட்டுள்ளார். ‘கோவிலில் நடந்த திருமணத்தின் புகைப்படங்களைக் கவனித்தால் இந்து சடங்குகளின்படி திருமணம் நடந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன’ என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதம் மாறியதற்கு ஆவணம் தேவையா?
‘இந்து மதத்தை மட்டுமே பின்பற்றுகிறோம் என்பதை உணர்ந்து இந்து திருமணச் சட்டத்தின்கீழ் உள்ள விதிகளின்படி விவாகரத்து கோரி தம்பதியர் விண்ணப்பித்துள்ளனர்’ எனத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதி, ‘பெண்ணின் பெயர் முஸ்லிம் பெயராக உள்ளது என்பதற்காக நீதிமன்றம் எந்த விசாரணையையும் நடத்த வேண்டியதில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
‘உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் எந்தவொரு முறையான விழா அல்லது அறிவிப்பின் மூலம் மற்றொரு மதத்துக்கு மாறுவதற்கு கோர வேண்டிய அவசியம் இல்லை. அவரின் நடத்தை மட்டுமே மத மாற்றத்தை நிறுவுவதற்கு போதுமானது’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்த பெண் தனது வெளிப்படையான நடத்தையின் மூலம் இந்து உரிமைகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி செயல்படுவது, இந்து திருமண சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி குடும்ப நீதிமன்றத்தை அணுகுதல் என இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டதை போதுமான அளவு வெளிப்படுத்தியுள்ளதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் நீதிமன்ற உத்தரவு ரத்து
‘தம்பதியர் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளபோது, அவர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு, 1955 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி தங்களின் திருமணத்தைக் கலைக்கக் கோருவது தான்’ எனத் தீர்ப்பில் நீதிபதி பி.பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘அந்த வகையில், இந்து திருமணச் சட்டப் பிரிவு 13(பி)ன்படி விவாகரத்து கோரி விண்ணப்பிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை’ எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
‘மனுதாரர் பிறப்பால் முஸ்லிம் என்றால் தனது நடத்தையால் இந்து மதத்துக்கு மாறிவிட்டதை தெளிவாக நிரூபித்துள்ளார். அதற்கான விழா எதுவும் இல்லாததைக் காரணமாக காட்டி மனுவைத் தள்ளுபடி செய்ய முடியாது’ என்று கூறி அம்பத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘பரஸ்பர விவாகரத்து கோரிய வழக்கில் உத்தரவு பெறப்பட்ட நாளில் இருந்து நான்கு வாரங்களுக்குள் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

‘பல வழக்குகளில் வழிகாட்டும் தீர்ப்பு இது’
“சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது இந்த விவகாரத்தில் முழுமையான தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது” என்று வழக்கறிஞரும் திராவிடர் கழக பிரசார செயலாளருமான அருள்மொழி கூறியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் “இதற்கு சட்டப்படியான விளக்கத்தை நீதிபதி கொடுத்துள்ளார். அந்தவகையில் பல வழக்குகளுக்கு வழிகாட்டும் தீர்ப்பாகவும் இது உள்ளது” எனக் கூறுகிறார்.
“இருவரும் இந்துக்கள் என்று கூறும்போது அதற்கான ஆதாரம் கொடுக்குமாறு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. வழக்கில் குறிப்பிடப்படும் நபர்கள் இவர்கள் தானா.. திருமணப் பதிவில் சொல்லப்பட்டுள்ள தகவல்களும் உண்மைதானா என்பதைத் தான் நீதிமன்றம் பார்க்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், தன்னை இந்து என்றே அந்தப் பெண் அடையாளப்படுத்திக் கொள்கிறார்” எனவும் அருள்மொழி குறிப்பிட்டார்.
“அந்தவகையில், இந்து திருமணச் சட்டத்தின்படி வழக்கு தாக்கல் செய்வதற்கு உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது மிகச் சரியான ஒன்று தான்” என்கிறார், வழக்கறிஞர் அருள்மொழி.
இந்து என சான்றிதழ் வாங்கினால் போதுமானதா?

ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, ” கணவன்-மனைவி என வரும்போது அவர்கள் பின்பற்றும் மத நடைமுறைகளைக் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம் என சில வழக்குகளில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைக் குறிப்பிட்ட வழக்கின் தன்மைக்கு ஏற்றுக் கொள்ளலாம். அனைவருக்கும் பொருந்தும் எனக் கூற முடியாது” என்கிறார்.
அம்பத்தூர் தம்பதியின் வழக்கை மேற்கோள் காட்டிப் பேசிய அங்கயற்கண்ணி, “பெண்ணின் கல்வி சான்றிதழில் முஸ்லிம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர் இந்துவாக மாற விரும்பினால் சென்னையில் உள்ள ஆரிய சமாஜம் அலுவலகம் சென்று இந்துவாக மாறிக் கொள்ளலாம்” எனக் கூறுகிறார்.
“சட்டத்தின்படி இந்துவாக மாறினால் மட்டுமே அவர் இந்துவாக ஏற்றுக் கொள்ளப்படுவார். ‘பழக்கவழக்கங்கள் இருந்தாலே இந்துவாக ஏற்றுக் கொள்ளலாம்’ எனத் தீர்ப்புகள் கூறினாலும் சட்டம் அவ்வாறு வரையறுக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஆனால், இந்து எனச் சான்றிதழ் கொடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வி எழுந்தால் அந்தச் சான்று என்னவாகும்?” எனக் கேள்வி எழுப்பும் அருள்மொழி, “கோவிலில் திருமணம் செய்து கொள்வது, பள்ளிவாசலில் இந்து ஆண் திருமணம் செய்து கொள்வது என்பன போன்ற நடத்தைகள் தான் மதம் மாறியதற்கான சான்றாக உள்ளது” என்கிறார்.
“அதைத் தான் நீதிமன்றமும் கூறுகிறது. அதைவிட சான்றிதழ் என்ன செய்ய முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
சொத்துரிமை, வாரிசுரிமையில் சிக்கல் வருமா?
“அந்தப் பெண்ணின் சான்றிதழில் முஸ்லிம் எனப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது நீக்கப்பட வேண்டும். இதன் காரணமாக சொத்துரிமை, வாரிசுரிமை ஆகியவற்றில் சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தந்தையின் சொத்தில் உரிமை கோரும்போது சான்றிதழின்படி அவர் முஸ்லிம் என்று இருக்கும். கணவர் இறப்புக்குப் பிறகு வாரிசுரிமை கோரும் போது இந்து திருமண சட்டத்துக்குரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இது குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று அங்கயற்கண்ணி குறிப்பிட்டார்.
வாரிசுரிமை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகக் கூறும் வழக்கறிஞர் அருள்மொழி, ” மதம் மாறி திருமணம் செய்தவர்கள் வாரிசுரிமை என வரும்போது மதம் மாறியதற்கான ஆதாரம் கேட்கப்படுகிறது” என்கிறார்.
“அந்தந்த மதங்களுக்கான தனிப்பட்ட சட்டத்தின்கீழ் வரும்போது அவர்களின் குழந்தைகளுக்கு சட்டப்படியான அந்தஸ்து வரும். அப்படிப் பார்த்தால் இந்த வழக்கில் இந்து திருமண சட்டத்தின்கீழ் மனுத்தாக்கல் செய்ய முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பால் என்ன நடக்கும்?
“இருவருக்குள் ஒத்துப் போக முடியவில்லை என நீதிமன்றம் வரும் நபர்களுக்கு சட்ட சிக்கல் இருந்தாலும் தீர்வு தான் முக்கியம் என்பதை அனுசரித்து அவர்களுக்கு உரிய நிவாரணத்தை நீதிமன்றம் வழங்க வேண்டும். மாறாக பிரச்னைகளை மட்டும் காட்டி அவர்களுக்கான நிவாரணத்தை மறுக்கக் கூடாது என்பது தான் நீதி” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் அருள்மொழி.
“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது முழுமையான தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதே கருத்தை முன்வைக்கும் வழக்கறிஞர் சாந்தகுமாரி, “ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தனது நடத்தையில் என்ன மதத்தைப் பயன்படுத்துகிறாரோ அதுவே அவரது மதம் என்பதற்கு பல்வேறு வழக்குகள் உதாரணங்களாக உள்ளன” எனக் கூறுகிறார்.
“கீழமை நீதிமன்றத்தின் நிலைப்பாடும் சரியானது. சட்டத்தைத் தாண்டி கீழமை நீதிமன்றத்தால் பார்க்க முடியாது. ஆனால், பரந்துபட்ட பார்வையுடன் உயர் நீதிமன்றம் அணுக முடியும். அதைத்தான் இந்த தீர்ப்பு உணர்த்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய திருமண சட்டங்கள் சொல்வது என்ன?
இந்தியாவில் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்துவ திருமணச் சட்டம், இஸ்லாமியர் திருமணச் சட்டம், பார்ஸி திருமணச் சட்டம் எனத் தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
“இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது கொள்வதற்கு சிறப்பு திருமணச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதன்படி திருமணம் செய்து கொள்ளலாம்” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் அருள்மொழி.
இந்து திருமண சட்டத்தின் கீழ் சுயமரியாதைத் திருமணம் – ஏன்?
1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது. முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, சுயமரியாதை திருமணச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஆனால், சுயமரியாதை முறைப்படி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அனைத்தும் இந்து திருமண சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
இதற்கான காரணத்தை விவரித்த அருள்மொழி, “இந்து திருமணச் சட்டத்தில் மத முறைப்படி நடக்கும் திருமணங்கள் பிரிவு 7ல் வருகின்றன. அண்ணா கொண்டு வந்த சுயமரியாதை திருமணச் சட்டம் பிரிவு 7(A)ல் வருகிறது. இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது, பொதுவான சட்டமாக சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது” என்கிறார்.
“கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய திருமண சட்டங்களில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு சாதி தேவையில்லை. அந்தந்த மதச் சட்டங்களின்படி போதகர் இருந்தால் போதுமானது. அது பிறப்பின் அடிப்படையில் வருவதில்லை. இந்த திருமணங்களில் பெண்ணின் விருப்பம் என்பது முக்கியமானது” எனக் கூறுகிறார் அருள்மொழி.
“ஆனால், இந்து திருமணச் சட்டத்தில் திருமணத்தை நடத்தி வைப்பவர் பார்ப்பனராக இருக்க வேண்டும். இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமானதாக இல்லை. பெண்ணை தானமாக கொடுக்கும் வழக்கம் உள்ளது. சடங்குகள் இருந்தால் தான் இந்தத் திருமணம் செல்லும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்துவாக உள்ளவர்கள் இதுபோன்ற சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்து கொள்வதற்கு இந்து திருமணச் சட்டத்தில் இடமில்லை” என்கிறார் அருள்மொழி.
“சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைப்பவருக்கு சாதி தேவையில்லை. இரண்டாவது, பெண்ணை தானமாக கொடுக்க முடியாது; பெண்ணின் சம்மதம் வேண்டும். மூன்றாவது, இது திருமண ஒப்பந்தம் என்பதால் இருவரும் மனம் இணைந்து இருக்கும் வரையில் இருக்கலாம். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13(பி) சொல்வதும் இதைத் தான். அதனால் இதனை இந்து திருமண சட்டத்தில் கொண்டு வந்தனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு