ராமேசுவரம்: ‘இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
‘இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ தொழிலாளர்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய பேரணி, யாழ்ப்பாணம் மாவட்டம் மீன்வளத்துறை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலத்தை வந்தடைந்தது.
பேரணிக்கு பின்னர், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகம் எதிரே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திய துணை தூதர், வட மாகாண ஆளுநர் அலுவலம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அதிகாரிகளிடம், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.