பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் பார்வையில்,1848ஆம் ஆண்டு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற லார்ட் டல்ஹவுசி, மூன்று முக்கிய பணிகளை நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. முதலாவதாக, அவர் பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லைகளை பெரிதும் விரிவுபடுத்தினார்.
டல்ஹவுசி, தனது ‘டாக்ட்ரின் ஆஃப் லேப்ஸ்’ கொள்கையின் கீழ் வலுக்கட்டாயமாக பல சமஸ்தானங்களை பிரிட்டிஷ் ஆட்சிக்குள் இணைத்ததன் மூலம் ஒரு பெரிய பேரரசின் அடித்தளத்தை அமைத்தார்.
ஆனால் டல்ஹவுசியின் மிகப்பெரிய சாதனை இந்தியா முழுவதும் ரயில்வே, சாலைகள், தகவல் தொடர்பு சேனல்கள் மற்றும் கால்வாய்களின் வலையமைப்பை அமைத்ததுதான்.
“இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாறுவதற்கு முன்பு, டல்ஹவுசிக்கு மூன்று பொறுப்புகள் வழங்கப்பட்டன. எல்லைகளை விரிவுபடுத்துதல், இந்தியாவை ஒன்றிணைத்தல் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளங்களை சுரண்டுதல்” என்று டல்ஹவுசியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வில்லியம் வில்சன் ஹண்டர் குறிப்பிட்டுள்ளார்.
“டல்ஹவுசி இந்தப் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றினார், ஆனால் இந்திய மக்களின் பார்வையில், டல்ஹவுசியின் இந்தக் கொள்கைகள் அவரை இங்குள்ள மக்களிடமிருந்து அந்நியப்படுத்தின.”
“டல்ஹவுசி ஒரு சர்ச்சைக்குரிய கவர்னர் ஜெனரலாக கருதப்பட்டார். டல்ஹவுசியின் நடவடிக்கைகள் 1857 இல் முதல் சுதந்திரப் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை உருவாக்கியதாக பலர் நம்புகிறார்கள்” என புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் அமர் ஃபரூக்கி தனது ‘கவர்னர்ஸ் ஆஃப் எம்பயர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தியாவின் இளைய கவர்னர் ஜெனரல்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டபோது டல்ஹவுசிக்கு 35 வயது மட்டுமே. ஏப்ரல் 22, 1812 இல் பிறந்த இவர், இந்திய மண்ணில் கால் பதித்த இளைய கவர்னர் என்ற சிறப்பையும் பெற்றார்.
எல்.ஜே. ட்ராட்டர் தனது ‘லைஃப் ஆஃப் தி மார்க்விஸ் ஆஃப் டல்ஹவுசி’ என்ற புத்தகத்தில், “கிளைவ் வங்கத்தின் ஆட்சியாளராக ஆனபோது, அவருக்கு 32 வயதுதான். கிளைவுக்கும் டல்ஹவுசிக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், இந்தியாவைப் பற்றிய எந்த அறிவும் அனுபவமும் இல்லாமல் டல்ஹவுசி நேரடியாக இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பதுதான். பிரிட்டனில் அவரது அரசியல் வாழ்க்கை ஏற்கெனவே செழிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் அவர் இந்தியாவுக்கு நியமிக்கப்பட்டார்”என்று பதிவு செய்துள்ளார்.
இதற்காக டல்ஹவுசி யாருடைய உதவியையும் பெறவில்லை. உண்மையில், பிரிட்டனின் வேகமாக மாறிவரும் அரசியல் சூழலில் புதிய கூட்டணிகளைத் தேடிக்கொண்டிருந்தார் பிரதமர் லார்ட் ஜான் ரஸ்ஸல். டல்ஹவுசியின் நண்பர்கள் தனக்குப் பின்னால் அணிதிரள வேண்டும் என்று அவர் விரும்பினார், எனவே அவர் டல்ஹவுசிக்கு அந்தப் பதவியை வழங்கினார்.
டல்ஹவுசியை தனது அமைச்சரவையில் சேர அவர் முன்பு அழைத்திருந்தார், ஆனால் டல்ஹவுசி அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
டல்ஹவுசி மிகவும் மதிக்கப்படும் ஸ்காட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை 1808 இல் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றினார். 1828 இல், அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
ராஜினாமா செய்வதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் அவர் பணியாற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
இருபத்தைந்தாயிரம் பவுண்டுகள் சம்பளம்
1847 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் ஹார்டிங்கின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் ரஸ்ஸல் டல்ஹவுசியை அந்தப் பதவிக்கு நியமிக்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
டல்ஹவுசிக்கு குறிப்பிடத்தக்க நிர்வாக அனுபவம் இல்லாததால், டல்ஹவுசியை இந்தப் பதவிக்கு நியமிப்பதன் மூலம், ரஸ்ஸல் அந்தப் பதவியின் அந்தஸ்தை குறைக்கக்கூடும் என்று அப்போது நம்பப்பட்டது.
தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றும்படி கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் டல்ஹவுசி இந்திய கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 1847 இல், விக்டோரியா மகாராணி அவரது நியமனத்தில் கையெழுத்திட்டார்.
“நீண்ட காலம் பிரிட்டனில் இல்லாதது தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை டல்ஹவுசி முழுமையாக அறிந்திருந்தார். அவர் கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்களில் ஒன்று, அவர் பெறும் ஆண்டு சம்பளம் 25,000 பவுண்டுகள் என்பதாக இருந்தது. இது தனது குடும்பத்தின் அனைத்து பொருளாதாரப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்று அவர் நம்பினார்” என்று அமர் ஃபரூக்கி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் .
ஜனவரி 12, 1848 அன்று, லார்ட் டல்ஹவுசி தனது மனைவி மற்றும் அவரது தனிச் செயலாளர் கோர்ட்னியுடன் கல்கத்தா துறைமுகத்தில் தரையிறங்கினார். டல்ஹவுசிக்கு கூர்மையான பார்வை இருந்தது.
”35 வயதானாலும், டல்ஹவுசி அதைவிட இளமையாகத் தோன்றினார். அகலமான நெற்றியும், தெளிவான இனிமையான குரலும் அவருக்கு இருந்தன” என வில்லியம் வில்சன் ஹண்டர் பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
நீண்டகால விளைவுகள்
டல்ஹவுசி காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பார். “எட்டு மணிக்கு அவர் காலை உணவை சாப்பிடுவார், அதே நேரத்தில் சாப்பாட்டு மேசையில் உள்ள இந்திய செய்தித்தாள்களைப் பார்ப்பார். ஒன்பது முப்பது மணிக்கு அவர் தனது மேசைக்குச் சென்று மாலை ஐந்து முப்பது மணி வரை அங்கிருந்து நகர மாட்டார். அலுவலக மேசையிலேயே மதிய உணவை எடுத்துக்கொள்வார். அவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் வேலை செய்வார். மிகக் குறைவாக சாப்பிட்டார், மிகக் குறைவாக குடித்தார். பெரிய விருந்துகளில் கலந்துகொள்வது அவருக்குப் பிடிக்காது. ஆனால் அவர் ஏற்பாடு செய்த விருந்துகள் மிகுந்த ஆடம்பரமாக இருக்கும்” என்று ட்ராட்டர் குறிப்பிட்டுள்ளார்.
டல்ஹவுசிக்கு முன் இருந்த கவர்னர் ஜெனரல்கள் பெரும்பாலான நிலங்களை அவர்களுடன் நட்பு கொண்டிருந்த இந்திய மன்னர்களுக்கு வழங்கியிருந்தாலும், டல்ஹவுசி இந்தக் கொள்கையில் ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்தி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இன்னும் அதிகமான நிலங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டார்.
“இந்தக் கொள்கையின் கீழ் மத்திய இந்தியாவில் மற்றும் அவாத் ஆகிய சில சமஸ்தான அரசுகள் பிரிட்டிஷ் ஆட்சியில் இணைக்கப்பட்ட விதம் முழு இந்தியாவின் அரசியலிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய இந்தியாவின் சமஸ்தானங்களிடம் இருந்து அரசுகளிடமிருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கான காரணம் வாரிசுகள் இல்லாததுதான் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், அவாத் நவாப் தவறான ஆட்சியின் அடிப்படையில் அரியணையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது மற்ற இந்திய மன்னர்களிடையே அடுத்ததாக தாங்களும் புறக்கணிக்கப்படலாம் என்ற பயத்தை ஏற்படுத்தியது” என்று மாரெக் பென்ஸ்-ஜோன்ஸ் தனது ‘தி வாய்ஸ்ராய்ஸ் ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் எழுதுகிறார்.
பட மூலாதாரம், Constable London
பஞ்சாபை கையகப்படுத்துதல்
இந்தியாவில் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டல்ஹவுசி பஞ்சாபை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைத்தார்.
ஜனவரி 13, 1849 அன்று, கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம் சில்லியன்வாலா போரில் சீக்கிய ராணுவத்தை தோற்கடித்தது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 21 அன்று குஜராத் போரில் வெற்றி பெற்றது.
மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகன் தலீப் சிங், ஆங்கிலேயர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்ற செய்தி டல்ஹவுசிக்குக் கிடைத்தபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
“நான் இப்போது காளையைப் பிடித்துவிட்டேன். ஐந்து வயது மகாராஜா எங்களுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, கோஹினூர் வைரம் பிரிட்டன் ராணிக்கு அனுப்பப்படும். நாங்கள் லாகூர் கோட்டையில் பிரிட்டிஷ் கொடியை ஏற்றிவிட்டோம், மேலும் பஞ்சாபின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாகும்” என்று ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில், டல்ஹவுசி எழுதினார்.
அதே கடிதத்தில், அவர் தன்னைப் புகழ்ந்து, “ஒரு பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி 4 மில்லியன் மக்களை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைத்து, முகலாய பேரரசர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வைரத்தை தனது ராணிக்கு வழங்குவது ஒரு நாளும் சாத்தியமில்லை. நான் அதைச் செய்துவிட்டேன். காரணம் இல்லாமல் நான் கொண்டாடுவதாக நினைக்காதீர்கள்” என்று எழுதினார்.
மகாராஜா தலீப் சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, டல்ஹவுசி அவரை பஞ்சாபிலிருந்து அறுநூற்று ஐம்பது மைல் தொலைவில் உள்ள ஃபதேகர் கோட்டைக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார்.
மேலும், அவர் தனது தாயார் ஜிந்தன் கவுரிடமிருந்து பிரிக்கப்பட்டு, ஒரு ஆங்கிலேய தம்பதியினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.
பின்னர், தலீப் சிங் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டு பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
ஆக்கிரமிக்கப்பட்ட பர்மா
பஞ்சாபிற்குப் பிறகு, டல்ஹவுசியின் அடுத்த வெற்றி பர்மாவின் மூலம் வந்தது. ஏப்ரல் 1852 இல், பிரிட்டிஷ் படைகள் பர்மாவில் உள்ள ரங்கூனைக் கைப்பற்றின.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் மற்றொரு முக்கியமான நகரமான பெகுவைக் கைப்பற்றினர். கோங்பாங் ராஜ்ஜியத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து நிலங்களும் பிரிட்டிஷ் பிரதேசமாக மாற்றப்பட்டு கீழ் பர்மா (Lower Burma) என்று பெயரிடப்பட்டன.
பர்மியப் போரின் போது, டல்ஹவுசி தனது படையின் மன உறுதியை அதிகரிக்க பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் கல்கத்தாவிலிருந்து பர்மாவுக்கு படையெடுத்துச் சென்றார்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1885 இல், வடக்கு பர்மாவும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.
கோங்பாங் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் கைது செய்யப்பட்டு இந்தியாவின் ரத்னகிரிக்கு நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு அங்கு அவர் 1916 இல் இறந்தார்.
சாத்தாராவின் கடைசி மன்னர் உயிரிழந்தபோது, பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு அரச குடும்பத்தை நாடு கடத்தியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜான்சியில் ராஜ் கங்காதர் ராவ் இறந்தபோதும் இதேபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவருக்கு குழந்தைகள் இல்லை.
“ஜான்சியின் மன்னர் கங்காதர் ராவின் மனைவி ராணி லட்சுமிபாய்க்கு பிரிட்டிஷ் கம்பெனி 60 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கியது, ஆனால் அவர் தனது வளர்ப்பு மகனுடன் கணவரின் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவர் ஒரு பெரிய கிளர்ச்சித் தலைவராக ஆனார். அதேபோல், கடைசி பேஷ்வாவின் வளர்ப்பு மகனான நானா சாஹேப்புக்கு பிரிட்டிஷ் கம்பெனி ஓய்வூதியம் வழங்க மறுத்துவிட்டது. அவர் 1857 இல் கான்பூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தினார்” என ஜான் வில்சன் தனது ‘இந்தியா கான்குவர்டு’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அவாத் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது
1856 ஆம் ஆண்டு டல்ஹவுசியின் பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்பு, அவர் அவாத்தை பிரிட்டிஷ் பேரரசில் இணைக்கும் பணியையும் செய்து முடித்தார்.
“ஷுஜா-உத்-தௌலாவின் மரணத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகளுக்கு, ஆங்கிலேயர்கள் அவாத் மீது மறைமுகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதன் சுயாட்சி கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அவாத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ரெசிடென்ட் ஒரு இணையான அதிகார மையமாக உருவெடுத்தார். 1770 களில் அவாத்தின் தலைநகரம் பைசாபாத்திலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டபோது, பிரிட்டிஷ் ரெசிடென்ட் நவாபின் அரசவையை விட அதிக சக்திவாய்ந்தவராக மாறினார். மீதமுள்ள நவாபின் அதிகாரத்தை அகற்ற டல்ஹவுசி முடிவு செய்தார்” என்று அமர் பரூக்கி பதிவு செய்துள்ளார்.
ஜனவரி 1849 இல், பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஸ்லீமன் சமஸ்தானத்தின் நிர்வாகம் முற்றிலுமாக சரிந்துவிட்டதாக அறிவித்தார்.
அதன் பிறகு, 1855 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அமைச்சரவையும் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் குழுவும் அவாத்தை இணைக்க முடிவு செய்தன.
பிப்ரவரி 1856 இல், அவாத்தை கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது, மேலும் நவாப் வாஜித் அலி ஷா கல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதன் பிறகு, டல்ஹவுசி தனது கடமைகளை புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் லார்ட் கேனிங்கிடம் ஒப்படைத்தார்.
பட மூலாதாரம், Getty Images
தாக்குதல் உத்தி
பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்கள் அனைவரிலும் மிகவும் ஆக்ரோஷமானவராக டல்ஹவுசி கருதப்படுகிறார்.
தனது பதவிக் காலத்தில், கிட்டத்தட்ட 250,000 சதுர மைல் நிலப்பரப்பை பிரிட்டிஷ் பேரரசுடன் அவர் இணைத்தார்.
“1847 ஆம் ஆண்டு டல்ஹவுசி இந்தியா வந்தபோது பார்த்த இந்திய வரைபடம், தனக்கு அடுத்த கவர்னர் ஜெனரலிடம் ஒப்படைத்த வரைபடத்திலிருந்து கணிசமாக வேறுபட்டது. பஞ்சாப், சிக்கிம், கச்சார் மற்றும் பர்மாவின் ஒரு பகுதி, சாத்தாரா மற்றும் சிந்துவின் ஒரு பகுதி ஆகியவை பிரிட்டிஷ் பேரரசுடன் இணைக்கப்பட்டன. கூடுதலாக, அவாத், சம்பல்பூர், ஜெய்பூர், உதய்பூர், ஜான்சி, பெரார் மற்றும் கந்தேஷின் ஒரு பகுதியும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன” என்று வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதியுள்ளார்.
டல்ஹவுசி நிலப்பரப்பு விரிவாக்கக் கொள்கைக்காக கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். ஆனால் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, கால்வாய்கள், நீர்வழிகள், தந்தி, அஞ்சல் அமைப்பு, கல்வி மற்றும் வணிகம் ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
“டல்ஹவுசியின் காலத்தில் தான் இந்தியாவில் முதல் ரயில்வே இயக்கப்பட்டது . டல்ஹவுசி இந்திய மக்களுக்கு கல்வி வழங்கினார், நீர்ப்பாசன முறையை உருவாக்கினார், இந்தியாவிற்கு அஞ்சல் மற்றும் தந்தி சேவைகளை வழங்கினார் ஆனால் இந்த சாதனைகள் இருந்தபோதிலும், அவர் அங்கு விருப்பமானவராகக் கருத்தப்படவில்லை.
அவர் மிகவும் சர்வாதிகாரத் தன்மையோடு நடந்து கொண்டார் என்று அவரைப் பற்றி கூறப்பட்டது. அவர் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அவரது குறுகிய மனநிலையும் கோபமும் அவரை தனது சக ஊழியர்களிடையே பிரபலமற்றவராக மாற்றியது.” என்கிறார் மாரெக் பென்ஸ்-ஜோன்ஸ்
பட மூலாதாரம், Constable London
தெளிவற்ற நிலையில் கழிந்த கடைசி ஆண்டுகள்
இந்தியாவை விட்டு வெளியேறும் போது, டல்ஹவுசிக்கு கடுமையான கால் எலும்பு நோய் ஏற்பட்டது.
அடுத்த கவர்னர் ஜெனரல் லார்ட் கேனிங் கல்கத்தா வந்தபோது, டல்ஹவுசி கவர்னர் ஜெனரலின் இல்லத்தில் கைத் தடியின் உதவியுடன் நின்று அவரை வரவேற்றார்.
மார்ச் 6, 1856 அன்று, டல்ஹவுசி கல்கத்தாவிலிருந்து தனது தாயகத்திற்குப் புறப்பட்டார்.
குறிப்பாக, கரடாக் என்ற கப்பலில் பயணிக்க வேண்டிய நிலை, அவரை மிகுந்த மன வருத்தத்துக்கு உள்ளாக்கியது.
தனது நண்பர் ஜார்ஜ் கூப்பருக்கு கடிதம் எழுதி, கரடாக் போன்ற பழைய கப்பலை அனுப்பி தன்னை அழைத்து சென்றது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், “நான் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் குழுவோ அல்லது அரசாங்கமோ எனக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை” என்றும் அவர் புகார் எழுப்பினார்.
லண்டனுக்கு வந்ததும், அரசாங்கம் அவருக்கு ஆண்டுக்கு ஐயாயிரம் பவுண்டுகள் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக செய்தி வந்தபோது டல்ஹவுசி சற்று மனநிறைவு அடைந்தார்.
டல்ஹவுசி தனது வாழ்க்கையின் கடைசி நான்கு ஆண்டுகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
“கவர்னர் ஜெனரலாக, இந்தியாவை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்ற தீவிர மனப்பான்மையோடு இருந்தார் டல்ஹவுசி. இது அவரை ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவராகவும், இடையூறு செய்பவராகவும் மாற்றியது. மேலும், பணியில் மூழ்கிவிடும் பழக்கம் அவருக்கு இருந்தது. இந்தியாவின் நிர்வாகியாக ஒரு நாளைக்கு நீண்ட நேரம் வேலை செய்வது அவரது உடலை சோர்வடையச் செய்தது, குறைந்த வயதிலேயே அவர் மரணம் அடைந்ததற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்” என்று அமர் பரூக்கி குறிப்பிட்டுள்ளார்.
டல்ஹவுசி டிசம்பர் 1860 இல் தனது 48 வயதில் மரணமடைந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு