• Thu. Feb 27th, 2025

24×7 Live News

Apdin News

லோட்டறிச் சீட்டு | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

Byadmin

Feb 27, 2025


உயர்ந்த மரநிழலில்
ஒரு தகரக் கொட்டகை
பல வகை அதிஸ்டலாபச் சீட்டுகள்
அடுக்கி வைத்த பலகை
ஒரு மனிதனின் வாழ்வாதாரம்
நகரத்தின் மையத்தில்

சைக்கிள் உருட்டி வந்த
கிழவரும் வாங்கினார்
அழகு நடை நடந்து வந்த
யுவதியும் வாங்கினாள்
பாடசாலை செல்லும்
சிறுவரும் வாங்கினர்

பளபளக்கும் காரில் வந்த
கோதையரும் வாங்கினர்
மோட்டார் சைக்கிள் ஓட்டி
ஸ்ரையிலாய் இறங்கி வந்த
இளைஞனும் வாங்கினான்
வாங்கியவருள் வயது பால் வேறுபாடில்லை

கண்மூடிக் கும்பிட்டு ஒன்றை
எடுத்த பக்தரும் உண்டு
எண் கூட்டிப் பார்த்து
வாங்கியவரும் உண்டு
செல்வந்தர் ஆகி விட
யாருக்குத் தான் விருப்பமில்லை

உன்னில் நம்பிக்கை வை
ஓயாமல் உழைத்தாயானால்
வெற்றி உன்னை வந்து சேரும்
என்று எவரும் நம்பவில்லை
அதிஸ்டத்தை நம்பி
லோட்டறிச் சீட்டு வாங்குகின்றார்

 

– திரு பத்மநாபன் மகாலிங்கம்

By admin