• Sun. Jul 20th, 2025

24×7 Live News

Apdin News

வாழ்க்கையை வளப்படுத்தும் வாஸ்துவின் வகைகள்

Byadmin

Jul 20, 2025


அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும்.

வீடு, மனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமே ‘வாஸ்து’ என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான்கு வகையான வாஸ்து உள்ளது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பூமி வாஸ்து

நிலம் அல்லது மனையின் தன்மைகள் பற்றிச் சொல்வது ‘பூமி வாஸ்து.’ மனையானது கிழக்கு மனையா, மேற்கு மனையா, வடக்கு மனையா, அல்லது தெற்கு மனையா என்பது பற்றிக் குறிப்பிடும். மேலும் மனைக்கு ஒரு பக்கத்தில் மட்டும் சாலையா, இரு பக்கமும் சாலைகளா, மூன்று புறங்களும் சாலைகளா, அல்லது நான்கு பக்கங்களும் சாலைகளா என்பதையும் எடுத்துக்காட்டும். பூமியில் சல்லிய தோஷங்கள் ஏதாவது உள்ளதா?, மனையானது சாலையில் இருந்து பள்ளத்தில் உள்ளதா?, அந்த மனையில் மண்ணின் நிறம் மற்றும் இதற்கு முன்பு அந்த இடம் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிடும்.

வீட்டு வாஸ்து

வீடு, அரண்மனை, வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பொதுத்துறை கட்டிடங்கள் போன்ற அனைத்து வகையான கட்டிட அமைப்பு முறைகள் பற்றி ‘வீட்டு வாஸ்து’ குறிப்பிடும். ஒரு இடத்தில் எந்த அளவில், எந்த முறையில், எப்போது, எவ்வாறு கட்டிடங்களை அமைக்க வேண்டும் என்பதையும், சொந்த வீடு அல்லது வாடகை வீட்டு விஷயங்களையும் இது எடுத்துக்காட்டும். மேலும் அந்தக் கட்டிடம் வங்கியா?, மருத்துவமனையா?, வணிக வளாகமா?, பள்ளி- கல்லூரியா?, ஓட்டலா?, உணவகமா?, தங்கும் விடுதியா?, தொழிற்சாலையா?, தகவல் தொழில்நுட்ப அலுவலகமா?, வாடிக்கையாளர் சேவை மையமா?, பொதுத்துறை நிறுவனமா?, ஊடகங்கள் சார்ந்த அலுவலகமா? என்பதைப் பொறுத்து அதன் வடிவமைப்புகளையும் இது சொல்லும்.

முக்கிய நுழைவுவாசல், வரவேற்பறை, பின்புறம் அமையும் வாசல்கள், சமையலறை, உணவு உண்ணும் அறை, ஓய்வு அறை, பணியாற்றும் அலுவலகம், தலைமை அதிகாரியின் அறை, மின்சாதனங்கள் அறை, படிக்கட்டுகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், பாத்ரூம்-டாய்லெட் போன்ற எல்லா அறைகளின் அமைப்பையும் இது குறிப்பிடும்.

இருக்கை வாஸ்து

வீடுகள், வியாபார, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் ஆகியவற்றில் இடம்பெறும் இருக்கைகள், ஊஞ்சல்கள், படுக்கைகள் அமைக்கும் விதம் பற்றி கூறுவது ‘இருக்கை வாஸ்து.’ ஒரு வீடோ, அலுவலகமோ அல்லது வேறு நிறுவனம் சார்ந்த கட்டிடங்களோ எதுவாக இருந்தாலும், அங்கு பணியாற்றுபவர்கள் அமர்வதற்கான இடம், மீட்டிங் ஹால்கள், கேண்டீன்கள், ஓய்வு எடுக்கும் இடம் பற்றிய எல்லாவித தகவல்களையும் சொல்லும் வாஸ்து இது. நிறுவனத்தின் தலைவர் எங்கே அமர வேண்டும், அவரைச் சந்திக்க வருபவர்கள் எங்கே அமர வேண்டும், பணிபுரிபவர்கள் எங்கே அமர வேண்டும் என்ற நுட்பங்களையும் இது தெளிவுப்படுத்தும்.

வாகன வாஸ்து

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தேர், பல்லக்கு போன்ற அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் வாஸ்து இது. இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ வீட்டின் அத்தியாவசிய ஒரு தேவையாக மாறிவிட்டது. அந்த வாகனத்தை வீட்டில் எப்படி நிறுத்துவது, வாகனங்களை எப்போது வாங்குவது, வாராந்திர பூஜை போன்ற முறைகளை இது விரிவாகச் சொல்கிறது. நமது பயணங்களுக்குத் துணை செய்யும் வாகனங்களின் முக்கியத்துவம் பற்றி இந்த வாஸ்து பிரிவு குறிப்பிடுகிறது.

The post வாழ்க்கையை வளப்படுத்தும் வாஸ்துவின் வகைகள் appeared first on Vanakkam London.

By admin