பட மூலாதாரம், X
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார்.
புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், “தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், TVK Party HQ/x
இதற்குப் பிறகு பேச வந்த அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவை விமர்சிப்பதில் துவங்கி, புதுச்சேரிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறி முடித்தார்.
அவர் பேசுகையில், “இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி. இதுபோன்ற பாதுகாப்பை தமிழகத்தில் கொடுத்ததில்லை. சி.எம். சார் (மு.க. ஸ்டாலின்), உங்கள் அரசியலைத் தூக்கிப்போட்டுவிட்டு, தைரியம் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். காவல்துறையை வைத்து எங்களை நிறுத்துவதை விடுங்கள்” என்றார்.
மேலும், புதுச்சேரியில் தவெக கூட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்தும் அவர் பேசினார்.
“ஏன் புதுச்சேரியில் கூட்டம் எனக் கேள்வியிருக்கிறது. இது போலத்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக ஏங்குகிறார்கள். எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் திட்டம் வைத்திருக்கிறார். அடுத்த 50 வருடத்திற்கான புதுச்சேரியின் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்” என்றார் அவர்.
விஜய் பேசியது என்ன?
இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு மிகச் சுருக்கமாகவே அமைந்திருந்தது. எல்லா ஊர்களிலும் பேசுவதைப் போலவே முதலில் அந்த ஊரைப் பற்றிப் பேசினார். அதற்குப் பிறகு அ.தி.மு.க. முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததைப் பற்றிப் பேசினார்.
“1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை ‘மிஸ்’ பண்ணிவிடக்கூடாது என ‘அலர்ட்’ செய்ததே புதுச்சேரிதான்” என்றார் விஜய்.
பட மூலாதாரம், TVK Party HQ/x
மத்திய அரசு பற்றி என்ன சொன்னார்?
அடுத்ததாக, தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய்.
“இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்” என்றார்.
அடுத்ததாக, புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினார்.
“கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பிய தீர்மானம், அப்படி அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்.” என்றார்.
மேலும், புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விஜய் பேசினார்.
“புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளைத் திறக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இங்கே ஒரு ஐ.டி நிறுவனம் வர வேண்டுமென்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை.” என்றார்.
காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் கைவிடப்பட்ட பகுதியாக உள்ளது என குறிப்பிட்ட விஜய், புதுச்சேரிக்கு கடலூர் மார்க்கமாக ரயில் வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை என்றார்.

சுமார் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவில் இடம்பெற்றவில்லை என பேசிய விஜய், இதனால் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை, தோராயமான நிதியே ஒதுக்கப்படுகிறது என்றார்.
அப்போது, “அந்த நிதி சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறது. அதனால் பிற செலவுகளுக்கு புதுவை கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்து தேவை.” என்றார்.
மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதாக கூறிய அவர், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார்.
இந்தப் பேச்சின் நடுவிலேயே யார் பெயரையும், எந்த அரசையும் சுட்டிக்காட்டாமல் சில விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
“இங்கே ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, புதிய அமைச்சரை நியமித்தார்கள். அந்த அமைச்சருக்கு இலாகாவே தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் செயல் என மக்களே சொல்கிறார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போலவே இங்கேயும் அந்த முறை சீராக்கப்பட வேண்டும்” என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
எனினும், பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரேஷன் கடைகள் குறித்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நமச்சிவாயம், “புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. அவற்றின் மூலமாகத்தான் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், MGR FAN CLUB
விஜய் பேச்சு எத்தகையது?
”புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம்” என்கிறார், புதுச்சேரியின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ம. இளங்கோ.
“தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் த.வெ.க. அங்கே ஆளும் தி.மு.கவைக் கடுமையாக எதிர்க்கிறது. ஏன் தி.மு.கவை மட்டும் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டால், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.கவையா எதிர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பவர்கள், என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல் பேசுகிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கென தனியான அரசியல் தேவை.” என்கிறார் ம. இளங்கோ.
புதுச்சேரி குறித்து விஜய் பேசிய விஷயங்கள் பல ஆண்டுகளாக இருப்பவைதான் என்று கூறும் ம. இளங்கோ, சமீபத்தில் வெடித்த போலி மருந்து விவகாரம் குறித்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்றது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக, பிரபலமான மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து விற்றதாக இரண்டு மருந்து நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றுகிறது எனக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விஜய் எதையும் பேசாததையே ம. இளங்கோ சுட்டிக்காட்டுகிறார்.

விஜய், அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியுடனான தனிப்பட்ட நல்லுறவை அரசியல் உறவாகக் கருதுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.
“ஆனால், அரசியலில் இதுபோன்ற தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடம் இல்லை. புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறார் என்றால் அது என். ரங்கசாமியுடன் மட்டும் முடிவதில்லை. அங்கிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. பா.ஜ.கவைக் கொள்கை எதிரி எனக் கூறுபவர், எப்படி இதுபோலச் செய்ய முடியும்?” என்கிறார் ஆர். மணி.
புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.
ஆனால், இந்தக் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தபடியே இருந்தன. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கருதுகிறாரா விஜய்? “அப்படி ஒரு ஆசை விஜய்க்கு இருக்கலாம். ஆனால், அது போன்ற ஒரு முடிவை என்.ஆர். காங்கிரஸ் எடுக்காது” என்கிறார் ம. இளங்கோ.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு