0
கிழக்கு யார்க்ஷயரின் பிர்ட்லிங்டன் (Bridlington) நகருக்கு அருகிலுள்ள லிட்டில் ஈடன் ஹாலிடே பூங்காவில் (Little Eden Holiday Park), 15 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை அன்று பாதுகாப்பு தொடர்பான கவலைகளை முன்வைத்து வந்த தகவலையடுத்து, ஹம்பர்சைட் காவல்துறையினர் (Humberside Police) சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு, வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த தங்குமிடத்தின் உள்ளே இரு பதின்ம வயதினரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, “கடுமையான கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட கொலை” என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில், மரணங்களுக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், இது கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) நச்சுத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறை கண்காணிப்பாளர் மாட் பீச் (Matt Peach), இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த துயரத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். விசாரணைகள் தொடரும் நிலையில், பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவசரக்கால சேவையினர் விடுமுறை பூங்காவில் உள்ள பிற தங்குமிடங்களுக்கும் சென்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை அந்தப் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.