• Sat. Nov 23rd, 2024

24×7 Live News

Apdin News

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்  | Villupuram District Disabled Persons Welfare Officer temporarily suspended

Byadmin

Nov 23, 2024


விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகள் வழங்காமலும், அடையாள அட்டை வழங்கும் முகாம்களை சரிவர நடத்தாமலும் தங்கவேல், மெத்தனப் போக்குடன் இருந்து வருவதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்கு தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பணியாற்றி வரும் தங்கவேல் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் பழனிக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கடிதம் அனுப்பியிருந்தார்.

மாவட்ட ஆட்சியர் பழனி நடத்திய விசாரணையில் மேற்கண்ட புகார்கள் அனைத்தும் உண்மை என்பது தெரிய வந்தது. அது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருக்கு கடிதம் மூலம் அனுப்பினார். இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக்கூறி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், உரிய அனுமதி இல்லாமல் தலைமையிடமான விழுப்புரத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



By admin