மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் எனவும், அதற்குப் பதிலாக கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது, இந்த விவகாரத்தில் மீண்டும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், கடந்த ஆண்டில் செப்டம்பர் 17ஆம் தேதியன்று, பிரதமர் மோதியின் பிறந்த நாளன்று அவரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்தது. இத்திட்டம், வரும் 2027-2028 வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வகர்மா திட்டம் – தொடக்கம் முதல் தற்போது வரை
இந்தத் திட்டத்தில் ‘பிரதமர் விஸ்கர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையுடன் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவனையாக 2 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியான 13 சதவீதத்தில் 8 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதம் 5 சதவீத வட்டியை மட்டும் கடன் பெறுவோர் செலுத்தினால் போதும்.
அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது; கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி தரப்படுகிறது.
இதில், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர்– காலணி தொழிலாளா்– காலணி செய்பவர், கொத்தனார், கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் என 18 விதமான தொழில்களைச் செய்வோர் பயன் பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் செயல்படுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செப்டம்பரில் கோவையில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுவரை 2 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரத்து 676 பேர், விஸ்வகர்மா திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்ததில், 25 லட்சத்து 4,250 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கோரும் திருத்தங்கள் என்னென்ன?
இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘‘பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில், உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கடந்த ஜனவரி 4 அன்று, பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இந்தக் குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, இந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்திட பரிந்துரைத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ‘‘அந்தக் குழுவின் பரிந்துரைகள்படி, விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவை நீக்கப்பட வேண்டும்; அதற்குப் பதிலாக, வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுடைவராக இருக்க வேண்டும்.” என்று பரிந்துரைத்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குரிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தில் பயன் பெறும் குறைந்தபட்ச வயது வரம்பை 35 ஆக உயர்த்த வேண்டும் எனவும் இதன்மூலம் தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர, அதை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பலன்களைப் பெற முடியும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
“கிராமப்புறங்களில் பயனாளிகளைச் சரி பார்க்கும் பொறுப்பு, கிராமப் பஞ்சாயத்துத் தலைவருக்குப் பதிலாக வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன்’’ என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
‘‘கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தில் இருந்து வந்த பதில் கடிதத்தில், தமிழக அரசு பரிந்துரைத்த திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது’’ என்று கூறியிருந்த முதல்வர் ஸ்டாலின், மாற்றுத் திட்டம் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
‘‘சமூகநீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்துக் கைவினைக் கலைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும்’’ என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் கடிதத்துக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு
முதல்வரின் இந்தக் கடிதத்திற்கு, பாரதிய ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த வானதி சீனிவாசன், ‘‘இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், பிரதமருக்கும், பாரதிய ஜனதாவுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்ற ஆற்றாமையில், இத்திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று திமுக பொய்ப் பிரசாரம் செய்வதாக” தெரிவித்தார்.
“இதைத் தற்போதுள்ள நிலையில் செயல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாநிலத் தலைமையுடன் கலந்து பேசி, போராட்டம் நடத்த முடிவு செய்யவுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதும், சமூகநீதிக்கு எதிரான திட்டம் என்பதும் மதியீனத்தின் உச்சம் என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் சமூக ஊடகங்களில் கருத்துப் போர் வலுத்து வருகிறது. ஆனால் அதிமுக உள்ளிட்ட பிற முக்கியக் கட்சிகள் தரப்பில் இதுபற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் சத்யா, ‘‘இதில் மத்திய அரசுக்கு என்னென்ன பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு செய்தது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எந்தவொரு தொழில் முனைவோருக்கும் கடன் உதவியும், மானியமும் அளிப்பது நல்ல விஷயம்தான்,” என்று கூறினார்.
ஆனால் “அந்தத் தொழிலை சாதியரீதியாகப் பார்ப்பது, எந்த மாதிரியான நிலைப்பாடு என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு தொழிலை நீ மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதும் தவறு; ஒரு தொழிலை இன்னொருவர் செய்யக்கூடாது என்பதும் தவறு. இந்தத் திட்டத்தில் இரு அரசுகளுக்கும் ஒரு தெளிவில்லை. தெளிவுபடுத்தினால் மட்டும்தான் இதில் அதிமுக தலைமையின் நிலைப்பாட்டைக் கூற முடியும்’’ என்றார்.
திமுக எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன?
ஆனால் இது குலத்தொழிலை வளர்க்கும் திட்டம் என்பதால்தான், இதை ஆரம்பத்தில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதாக திமுகவினர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது திமுகவிற்கு வழக்கம் கிடையாது. ஒன்றிய அரசு கொண்டு வரும் ஒரு திட்டத்தை, அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப மாற்றம் செய்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்துவதுதான் கூட்டாட்சியின் அடிப்படை. அரசியலமைப்புச் சட்டமும் இதையே உறுதி செய்கிறது. அதன்படி விஸ்வகர்மா திட்டத்தில் திருத்தங்களை திமுக கோரியுள்ளது’’ என்றார்.
திருத்தம் கோருவதில் எந்தத் தெளிவுமில்லை என்று அதிமுக தரப்பில் கூறப்படுவது பற்றி அவரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘திமுகவின் அரசியல் பார்வை வேறு; அதிமுகவின் அரசியல் கணக்குகள் வேறு. உதய் மின் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதைச் செயல்படுத்த ஜெயலலிதா மறுத்தார்.
ஜெயலலிதா இருக்கும் வரை, இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என்று அப்போது பொறுப்பிலிருந்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். அவர் சொன்னபடியே ஜெயலலிதா மறைந்ததும் அதில் எந்தவோர் எதிர்ப்புமின்றி எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.
சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்தும் நிதிக்குழுவின் நிபந்தனையையும் அவர் ஏற்றுக் கொண்டதும் இப்படித்தான். சட்ட அறிவே இல்லாமல் ஒன்றிய அரசு சொல்வதை ஏற்பதுதான் இன்றைய அதிமுகவின் நிலைப்பாடு. திமுக எப்போதுமே தெளிவாகத்தான் ஒரு விஷயத்தை எதிர்க்கும்’’ என்றார்.
திட்டத்தின் பெயரை மாற்றுமாறு வலுக்கும் கோரிக்கை
இந்த அரசியல் மோதல்களுக்கு இடையில், இத்திட்டத்தின் பெயரையே மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘‘விஸ்வர்கமா என்பது ஒரு ஜாதியும் இல்லை, பாரம்பரிய தொழிலும் அல்ல.’’ என்று கருத்து கூறியதைக் கண்டித்து, கடந்த அக்டோபரில் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன், ‘‘தச்சு, தங்க நகை பாத்திரம், இரும்பு மற்றும் சிற்பத் தொழில் செய்யும் தொழிலாளர் ஆகிய ஐவர் மட்டுமே விஸ்வகர்மா தொழிலாளர்கள். விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 18 தொழில் செய்பவர்களையும் விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்திருந்தார்.
விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த 7 அமைப்புகளை உள்ளடக்கித் துவக்கப்பட்டுள்ள கோயம்புத்துார் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா பிபிசி தமிழிடம் இதே கருத்தைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் எங்கள் சாதியையும், பிற சாதியினரையும் கலக்கின்ற ஒரு பணியாகத் தெரிவதால், திட்டத்துக்குப் பெயர் மாற்ற வேண்டும் என்று கூறிய ரகுநாதன், ‘‘சட்டப்படி விஸ்வகர்மா என்பது ஒரு சாதி. ஆனால் பானை செய்பவர், முடி திருத்துபவர் என 13 விதமான கைவினைஞர்களை இத்திட்டத்தில் சேர்த்து அனைவருக்கும் பிரதமர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் சான்று தருகின்றனர். இது பிற சாதியினரை விஸ்வகர்மாவாக அறிவிப்பதாகிவிடுகிறது.
அதனால்தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே இதை நாங்கள் எதிர்த்தோம். ஆனால் சுத்தியல் எடுக்கும் எல்லோரையும் விஸ்வகர்மாவாக வர்ணனை செய்துவிட்டோம் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆண்டாண்டு காலமாக இருந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்துக்கு இவர்கள் எப்படி புதுவர்ணனை தர முடியும்?’’ என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு