ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் இன்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கடந்த அக்டோபர் 20-ம் தேதி அன்று 69 அடியை எட்டியது.
ஆகவே பாதுகாப்பு கருதி தேனி, திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டது.
தொடர்ந்து மூல வைகை, முல்லை பெரியாற்றில் இருந்தும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இதனைத் தொடர்ந்து வைகை பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்பும் வகையில் 1,824 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில் முதற்கட்டமாக கடந்த அக்.27 முதல் அக்.31-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பூர்வீக பாசனப் பகுதி 624 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூர்வீக பாசனம் 2-ம் பகுதியான சிவகங்கை மாவட்டத்துக்கு இன்று (நவ.2) 2 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டது. வரும் நவ.6-ம் தேதி வரை மொத்தம் 772 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
பின்பு நவ.8-ம் தேதி முதல் நவம்.13ம் தேதி வரை மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி மொத்தம் 428 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளன. இந்த நீர் திறப்பின் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பூர்வீக நிலங்கள் பாசன வசதி அடையும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 449 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகவே கரையோர மக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம். பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.