சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்துவது என பாமகவின் ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்புமணிக்கு எதிராக, தனது மகள் காந்தியை கட்சியின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இளைஞர் சங்க தலைவராக கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை நியமித்தார்.
இதனை தொடர்ந்து, பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் தமிழகம் முழுவதும் 36 இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னையில் ஜி.கே.மணி தலைமையிலும், கடலூரில் செயல் தலைவர் காந்தி பரசுராமன், அரியலூரில் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, தஞ்சாவூரில் இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர்் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி வரும் டிச.5-ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்அறவழி போராட்டம் நடத்துவதுஎன்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.