• Tue. Jun 9th, 2026

24×7 Live News

Apdin News

19 ஆண்டுகள் தாமதமாக வந்த தந்தைக்கான இதழ்: வியப்பில் ஆழ்த்திய தபால் துறை!

Byadmin

Jun 9, 2026


இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியைச் சேர்ந்த பால் எட்வர்ட்ஸ் (வயது 52) என்பவர், 2007ஆம் ஆண்டில் தனது இளம் குடும்பத்துக்காக ஆர்டர் செய்த இதழ், 19 ஆண்டுகள் கழித்து தற்போது அவரிடம் வந்து சேர்ந்துள்ளது.

பால் எட்வர்ட்ஸ், ‘மதர் அண்ட் பேபி’ (Mother & Baby) என்ற இதழுக்கு 2007இல் சந்தா கட்டியபோது, அவரது மகளுக்கு 18 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. அவரது மகன் பிறப்பதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. ஆனால், அந்த இதழ் அப்போது வந்து சேரவில்லை. தற்போது அவரது பிள்ளைகளுக்கு முறையே 18 மற்றும் 20 வயதாகிறது. அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு கிழிந்த உறையில் ஏப்ரல் 2007 திகதியிட்ட அந்த இதழ் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அந்த உறையில் ராயல் மெயில் (Royal Mail) நிறுவனம், “ஏற்பட்ட சிரமத்திற்கு மனமார்ந்த மன்னிப்புக் கோருகிறோம்” என்ற குறிப்பையும் ஒட்டியிருந்தது.

ஒரு எழுத்தாளரான பால் எட்வர்ட்ஸ், தனது அறிவியல் புனைகதை புத்தகங்கள் வெளியாவது குறித்த செய்திக்காக ஆவலுடன் காத்திருந்த நேரத்தில், இரண்டு தசாப்தங்களுக்கு முந்தைய இந்த இதழ் வந்தது அவருக்கு மிகுந்த வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்துள்ளது. “பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இப்போது வந்து மன்னிப்புக் கோருவது வேடிக்கையாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பால் எட்வர்ட்ஸ் இந்த விசித்திரமான அனுபவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட செய்தி, சுமார் 15 லட்சம் பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.

இந்தத் தாமதம் குறித்து ராயல் மெயில் நிறுவனம் கூறுகையில், அந்த இதழ் தபால் அலுவலகத்தில் தொலைந்து போகவில்லை என்றும், யாரோ ஒருவரால் மீண்டும் தபால் அமைப்பிற்குள் அது கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தபால் துறையின் தாமதமான சேவைகள் குறித்து ஏற்கெனவே பல புகார்கள் எழுந்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

19 ஆண்டுகள் தாமதமாக வந்த தந்தைக்கான இதழ்: வியப்பில் ஆழ்த்திய தபால் துறை!

By admin