0
இந்திய மத்திய அரசின் புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத IndiGo விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விமான சேவைகளை IndiGo நிறுவனம் இரத்துசெய்து வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (09) IndiGo பிரச்சினை எழுப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவிக்கையில், “எந்த விமான நிறுவனமும் சரி, அது எவ்வளவு பெரிய விமான நிறுவனமாக இருந்தாலும் சரி. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதிக்காது. கடுமையான, தகுந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருமாறு IndiGo நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறோம்” என்றார்.
தொடர்புடைய செய்தி : IndiGo விமான சேவைகளை ரத்து செய்யப்பட்டமையால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு!
மேலும், இதுவரை 750 கோடி இந்திய ரூபாய் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. பயணிகளின் உடமைகள் உரிய முறையில் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டு இருக்கிறதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
பெங்களூருவில் 121, ஐதராபாத்தில் 58, சென்னை 41, கேரளா 4 என இன்றும் 200க்கும் அதிகமான விமான சேவைகள் இரத்தாகின. தொடர்ந்து இரத்து அறிவிப்பு வெளியாகிக் கொண்டே வருவதால், உள்நாட்டு விமான போக்குவரத்தில் IndiGo நிறுவனத்தின் விமான சேவைகளைக் குறைக்கலாம் என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.