இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. அதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. இதன்மூலம் இந்தியா 1-0 என்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடர் இந்தியா இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல், ஜடேஜா போன்றோருக்கு இந்தத் தொடர் தேர்வர்கள் முன்னிலையில் தகுதி பெறுவதற்கு இந்தத் தொடரில் தங்கள் முழு திறனையும் காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறும் என்று கணிக்கப்படுகிறது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், “முந்தைய ஆட்டத்தின்போது நன்றாகத் தொடங்கியிருந்தாலும் ஆட்டத்தின் நடுவே கூட்டணி சரியாக அமையவில்லை. அது மிகவும் முக்கியம்.
உலகக்கோப்பை இங்கு நடக்கவுள்ளதால் இத்தகைய போட்டிகளில் இங்கு விளையாடுவது நல்ல கற்பிதங்களை வழங்குகிறது,” எனக் கூறியவர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக நேதன் எல்லீஸும் அலெக்ஸ் கேரிக்கு பதிலாக ஜோஷ் இங்கிலீஸும் அணியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த மைதானம் மிகவும் வறட்சியானது என்றும் நீண்டகாலமாக மறைத்து வைக்கப்பட்டதாகவும் கூறிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, “திறம்பட பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிறகு அந்த ஸ்கோரை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நிதானமாகவும் கூட்டுமுயற்சியோடு இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளேன்.
ஆட்டத்தின் நடுவே சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம்,” எனக் கூறியவர், இஷான் கிஷானுக்கு பதிலாகத் தான் இடம் பெறுவதாகவும் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்ஷர் பட்டேல் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்திய அணிக்காக முதலில் ரோகித் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் களமிறங்கியுள்ளனர். முந்தைய போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டியிருந்தாலும் பேட்டிங்கின்போது, இஷான், விராட் கோலி, சூர்யகுமார் ஆகியோர் ஒற்றை இலக்கில் அவுட்டானார்கள். ஷுப்மன் கில் 20 ரன்களில் அவுட்டானார். ஆகவே இன்றைய போட்டியில் தொடக்கம் சரியாக அமைய வேண்டியிருந்தது.
ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஷுப்மன் கில் இரண்டே பந்துகளில் ஒரு ரன்கூட எடுக்காமல் மிட்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 13 ரன்களில் ரோஜித் ஷர்மாவும் ஆட்டமிழந்தார்.
படக்குறிப்பு,
9 ரன்களில் அவுட்டாகி வெளியேறும் கே.எல்.ராகுல்
ரோகித் ஷர்மா, விராட் கோலி கூட்டணியில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஐந்தாவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சிலேயே 13 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். முந்தைய போட்டியில் இந்திய அணியைத் தூக்கிப் பிடித்த அவர் இந்த முறையும் விழுந்துகொண்டிருக்கும் விக்கெட் மழையைத் தடுத்து நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதேநேரத்தில், இந்தப் பந்தில் அவருடைய விக்கெட்டையும் வீழ்த்தி ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் குறிக்கோளோடு மிட்செல் ஸ்டார்க் காத்திருந்தார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக 9வது ஓவரில் கே.எல்.ராகுல் வெறும் ஒன்பதே ரன்களில் மிட்செல் பந்துவீச்சில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் மூன்றே பந்துகளை எதிர்கொண்டு ஒரேயொரு ரன்னோடு ஷான் ஆப்போட் பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித்திற்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தின் 10வது ஓவரில் ஆறாவதாக களமிறங்கிய ஜடேஜாவும் கோலியும் கூட்டணி சேர்ந்து விக்கெட் விழாமல் தக்க வைக்க முயற்சி எடுத்தனர்.
ஆனால், அந்த முயற்சியால் கிடைத்த நம்பிக்கையையும் நீண்டநேரம் நீடிக்க விடாத ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் நேதன் எல்லீஸ் பந்துவீச்சில் விராட் கோலி அவுட்டானார்.
16வது ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 6 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்திருந்தது.
ரோகித் ஷர்மா 15 பந்துகளில் 13 ரன்கள், ஷுப்மன் கில் 2 பந்துகளில் பூஜ்ஜிய ரன்கள், சூர்யகுமார் யாதவ் ஒரு பந்தில் 0 ரன்கள், கே.எல்.ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 3 பந்துகளில் 1 ரன், விராட் கோலி 35 பந்துகளில் 31 ரன்கள் என வரிசையாக விழுந்த 6 விக்கெட்களும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ரசிகர்கள் மீது இறங்கியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு,
ஒரேயொரு ரன் எடுத்து ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார்.
இந்திய அணி 81 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அப்போது களத்தில் அக்ஷர் பட்டேலும் ரவீந்திர ஜடேஜாவும் இருந்தார்கள். ஜடேஜா 28 பந்துகளை இதுவரை எதிர்கொண்டு 12 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவரும் நேதன் எல்லீஸ் பந்துவீச்சில் 20வது ஓவரில் அவுட்டானார்.
8வது இடத்தில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 17 பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஷான் ஆப்போட் பந்துவீச்சில் அவுட்டானார். இன்னும் 2 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இந்திய அணி 25 ஓவர்களில் 103 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன், நேதன் எல்லீஸ் ஆகியோரின் பிடியில் சிக்கி இந்திய அணி தவிக்கிறது என்று சொல்லும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது.