இன்று (மே 24) வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் ராயல்ஸ் தடுமாறியபோதெல்லாம் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். பேட்டிங்கில் தன் அணி தடுமாறியபோது 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தவர், பந்துவீச்சின்போது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ,தேர்வாகி தன் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ஆர்ச்சர்.
இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த கேபிட்டல்ஸ் 203 ரன்கள் அடிக்க, அடுத்து விளையாடிய கேகேஆர் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தடுமாறி மீண்ட ராயல்ஸ் பேட்டிங்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் வழக்கம்போல் இருக்கவில்லை. எப்போதும் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷிக்குப் பதிலாக ஆரம்பத்திலேயே அதிரடியைக் கையில் எடுத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். சில பெரிய சிக்ஸர்களை அடித்துக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால், ஆஃப் ஸ்பின்னர் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டைக் கைப்பற்றினார் தீபக் சஹர். சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் 6 பந்துகள் சந்தித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து அல்லா கசன்ஃபர் பந்துவீச்சில் வெளியேறினார். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
பவர்பிளேவுக்குப் பிறகும் அந்த அணியால் பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முடியவில்லை. ஒருசில வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அவர்களால் அதை பெரிதாக மாற்ற முடியவில்லை. ஷனகா 29 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். துருவ் ஜுரெல் 38 ரன்கள், டானவன் ஃபெரீரா 18 ரன்கள் என முன்னணி பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதனால் 139/6 என்ற நிலையில் தடுமாறியது ராயல்ஸ்.
இந்நிலையில் 8வது வீரராகக் களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் தன் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். வேகமாக ரன்கள் சேர்த்த ஆர்ச்சர், 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். அதன் காரணமாக ராயல்ஸ் அணியின் ரன்ரேட் உயர்ந்தது.
கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் நாந்த்ரே பர்கர் இருவரும் 9வது விக்கெட்டுக்கு 2 ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தனர். அதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக தீபக் சஹர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
பட மூலாதாரம், ANI
பந்துவீச்சிலும் கைகொடுத்த ஆர்ச்சர்
206 ரன்களை இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோஹித் ஷர்மாவை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். மூன்றாவது ஓவரில் அவர் நமன் தீர் விக்கெட்டையும் (6 ரன்கள்) கைப்பற்றினார்.
நான்காவது ஓவரில், 12 ரன்கள் எடுத்திருந்த ரியான் ரிக்கில்டனை வெளியேற்றினார் நாந்த்ரே பர்கர். அடுத்ததாக 6வது ஓவரில் திலக் வர்மாவை (3 ரன்கள்) பெவிலியனுக்கு அனுப்பினார் பிரிஜேஷ் ஷர்மா. இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் பவர்பிளே முடிவில் 49/4 என்ற நிலையில் இருந்தது.
5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜேக்ஸ் இருவரும் அதிரடியாக விளையாடி தங்கள் அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். இந்தக் கூட்டணி 63 ரன்கள் எடுத்தது. 33 ரன்கள் எடுத்த வில் ஜேக்ஸ், 12வது ஓவரில் யஷ் ராஜ் புஞ்சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினார். இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடியதால் மும்பை இந்தியன்ஸ் வெற்றியை நோக்கி முன்னேறத் தொடங்கியது. கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 59 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அப்படியொரு தருணத்தில் இன்னொருமுறை ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பக்கம் எடுத்துவந்தார் ஆர்ச்சர். அவர் வீசிய ஷார்ட் பாலில் ஹர்திக் பாண்டியா (34 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதன்பிறகு மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது மும்பை இந்தியன்ஸ்.
17வது ஓவரில் கார்பின் பாஷ் (2 ரன்கள்), 18வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் (60 ரன்கள்), 19வது ஓவரில் தீபக் சஹர் (8 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஏற்கெனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
புள்ளிப் பட்டியல்
2026 ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியல் எப்படி இருக்கிறது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 18 புள்ளிகள்
குஜராத் டைட்டன்ஸ் – 18 புள்ளிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 18 புள்ளிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் – 16 புள்ளிகள்
பஞ்சாப் கிங்ஸ் – 15 புள்ளிகள்
டெல்லி கேபிட்டல்ஸ் – 14 புள்ளிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 13 புள்ளிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் – 12 புள்ளிகள்
மும்பை இந்தியன்ஸ் – 8 புள்ளிகள்
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் – 8 புள்ளிகள்
பிளே ஆஃப் சுற்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் இரு இடங்களில் முடித்த ஆர்சிபி மற்றும் டைட்டன்ஸ் அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியில் மோதவிருக்கின்றன. புதன்கிழமை நடக்கும் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் மற்றும் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.