பட மூலாதாரம், BBC/Hosu Lee
-
- எழுதியவர், ஹ்யோஜுங் கிம்
- பதவி, பிபிசி கொரியன்
-
ஒவ்வொரு நவம்பர் மாதமும், தென் கொரியா முழுவதும் ஒரு பிரபலமான கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக ஒரு நாள் முழுவதும் அமைதியாகிறது.
அன்றைய தினம் கடைகள் மூடப்படுகின்றன, சத்தத்தைக் குறைக்க விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன, மாணவர்களுக்கு வசதியாக காலையில் போக்குவரத்தும் மெதுவாக இயங்குகிறது.
பிற்பகல் வேளையில், பெரும்பாலான மாணவர்கள் தேர்வு முடிந்து பள்ளி வாசலை விட்டு வெளியே வந்து, நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, வெளியே காத்திருக்கும் குடும்பத்தினரை அணைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால், எல்லோராலும் அந்த நேரத்தில் தேர்வை முடிக்க முடிவதில்லை.
இரவில் இருள் சூழ்ந்த பிறகும், சில மாணவர்கள் தேர்வு அறையிலேயே இருக்கிறார்கள்.
அவர்கள் பெரும்பாலும் இரவு 10 மணியளவில் தான் தேர்வை எழுதி முடிக்கிறார்கள்.
பார்வைத் திறனற்ற மாணவர்களான அவர்கள், சுனியுங்கின் மிக நீளமான தேர்வை எழுத, பெரும்பாலும் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிடுகிறார்கள்.
வியாழக்கிழமை, தென் கொரியா முழுவதும் 550,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுனியுங் தேர்வை எழுத உள்ளனர். சுனியுங் என்பது கல்லூரி திறனறி தேர்வு (CSAT) என்பதற்கான சுருக்கமாகும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த தேர்வு, ஒருவர் பல்கலைக்கழகத்தில் சேர முடியுமா என்பதை மட்டும் அல்ல, அவர்களின் வேலை வாய்ப்பு, வருமானம், வாழ்விடம் தொடங்கி, எதிர்கால உறவுகள் வரை தாக்கம் செலுத்துகிறது.
மாணவர்கள் தேர்வு செய்யும் பாடங்களைப் பொறுத்து, அவர்கள் கொரிய மொழி, கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல் அல்லது இயற்கை அறிவியல், கூடுதல் வெளிநாட்டு மொழி மற்றும் ஹன்ஜா (கொரிய மொழியில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சீன எழுத்துக்கள்) ஆகியவற்றில் சுமார் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு இது ஒரு நீண்ட, தொடர்ச்சியான 8 மணி நேர தேர்வு.
சுனியுங் தேர்வு காலை 08:40 மணிக்கு தொடங்கி மாலை 5:40 மணிக்கு முடிவடைகிறது.
ஆனால், கடுமையான பார்வைக் குறைபாடு உள்ள பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு இத்தேர்வை முடிக்க 1.7 மடங்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது.
அதாவது, அவர்கள் கூடுதல் வெளிநாட்டு மொழிப் பிரிவை எடுத்திருந்தால், தேர்வு இரவு 9:48 மணி வரை நீடிக்கலாம் . அதாவது, தேர்வு தொடங்கிய 13 மணி நேரம் கழித்து அவர்கள் தேர்வை முடிக்கலாம்.
இந்த தேர்வுக்கு இரவு உணவுக்கான இடைவேளை இல்லை. தேர்வு தொடர்ச்சியாக நடைபெறும்.
மேலும், பிரெய்லி எழுத்துகளில் தேர்வுத் தாள்களை தயாரிப்பதற்கு கூட அதிக நேரம் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு வாக்கியமும், குறியீடும், வரைபடமும் பிரெய்லியாக மாற்றப்படுவதால், ஒரு தேர்வுக் கையேடு சாதாரண கையேட்டைவிட 6 முதல் 9 மடங்கு தடிமனாக இருக்கும்.
பட மூலாதாரம், BBC/Hosu Lee
சியோலில் உள்ள ஹான்பிட் பார்வையற்றோருக்கான பள்ளியில் பயிலும் 18 வயதான ஹான் டோங்யூன் இந்த ஆண்டு சுனியுங் தேர்வின் மிக நீளமான வகைத் தேர்வை எழுத உள்ளார்.
கடந்த ஆண்டு, நாடு முழுவதும் 111 பார்வையற்ற மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். அவர்களில் 99 பேர் குறைந்த பார்வைக் குறைபாடுடன், 12 பேர் ஹான் டோங்யூன் போல கடுமையான பார்வைக் குறைபாடுடன் இருந்தனர் என கல்வி அமைச்சகம் மற்றும் கொரியா பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் தகவல் வழங்கியுள்ளது.
ஹான் டோங்யூன் முழுமையாக பார்வைத் திறனற்றுப் பிறந்தவர். அவரால் ஒளியையே உணர முடியாது.
நவம்பர் 7-ஆம் தேதி பிபிசி அவரைச் சந்தித்தபோது, அவர் பழைய தேர்வுகளுக்கான பிரெய்லி பயிற்சி புத்தகத்தில் விரல்களை வேகமாக நகர்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது தேர்வுக்கு ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருந்ததால், அவர் தனது உடலின் ஆற்றல் மற்றும் மனநிலையை சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். டோங்-ஹியூன் பிரெய்லி தேர்வுத் தாள்கள் மற்றும் திரை வாசிப்பு கணினியின் உதவியுடன் தேர்வை எழுத உள்ளார்.
“தேர்வு மிகவும் நீளமாக இருப்பதால் இது சோர்வடையச் செய்கிறது,” என்ற கூறும் அவர், “ஆனால் இதில் எந்தவிதமான சிறப்பு உத்தியும் இல்லை. படிப்பதற்காக தயாரித்திருக்கும் அட்டவணையைப் பின்பற்றி, என்னை சரியாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அதுதான் ஒரே வழி”என்கிறார்.
கொரிய மொழிப் பிரிவு தான் தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் டோங்-ஹியூன்.
அந்தப் பிரிவுக்கான ஒரு சாதாரண தேர்வுக் கையேடு சுமார் 16 பக்கங்கள் கொண்டிருக்கும். ஆனால் அதற்கான பிரெய்லி பதிப்பு சுமார் 100 பக்கங்கள் கொண்டது.
திரை வாசிப்பு மென்பொருள் இருந்தாலும், அதில் பேசப்படும் தகவல்கள் கேட்டவுடன் மறைந்துவிடும். பார்த்து படிக்கக்கூடிய உரையைப் போல மீண்டும் அதனை வாசிக்க முடியாது.
அதேபோல் கணிதப் பிரிவும் எளிதானது அல்ல.
சிக்கலான வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள் பிரெய்லியாக மாற்றப்பட்டிருப்பதால், அவற்றை அவர் தனது விரல் நுனிகளால் மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், முன்பை விட இப்போது சூழ்நிலை சிறப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். முன்பு, மாணவர்கள் பெரும்பாலான கணக்குகளையும் நினைவில் வைத்தே செய்ய வேண்டும். ஆனால் 2016 முதல், ஹான்சோன் எனப்படும் பிரெய்லி நோட்டேக்கரைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“பார்வைத் திறனுள்ள மாணவர்கள் பென்சிலில் கணக்குகளை எழுதுவது போல, நாங்களும் ஹான்சோனில் பிரெய்லியில் கணக்குகளை எழுதுகிறோம். கணக்கைச் செய்து முடிக்க இது உதவுகிறது,” என்று டோங்-ஹியூன் கூறினார்.
பட மூலாதாரம், BBC/Hosu Lee
அதே பள்ளியில் படிக்கும் 18 வயது ஓ ஜியோங்-வோன் என்ற மாணவரும் இந்த ஆண்டு சுனியுங் தேர்வை எழுத உள்ளார். அன்றைய தினத்தில் பிற்பகல் நேரம் தான் மிகவும் “கடினமான நேரம்”என்று கூறுகிறார் ஜியோங்-வோன்.
“மதிய உணவு வரை சமாளிக்க முடிகிறது, ஆனால் மாலை 4 அல்லது 5 மணிக்கு, ஆங்கிலம் முடிந்து கொரிய வரலாறு தொடங்கும் நேரம் மிகவும் கடினமாக இருக்கும்”என்று ஜியோங்-வோன் கூறினார்.
“இரவு உணவுக்கு இடைவேளை கிடையாது,” என்று கூறிய அவர்,
“நாங்கள் சாப்பிட வேண்டிய நேரத்தில் கூட கணக்குகளை தீர்க்கிறோம். அதனால் இன்னும் சோர்வாகிறது. ஆனால், இறுதியில் ஒரு சாதனையை எட்டிய உணர்வு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்”என்று விளக்கினார்.
ஜியோங்-வோனுக்கு, இரு கைகளையும் செவித் திறனையும் பயன்படுத்தி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதால், அவர் கூடுதலாக சோர்வடைகிறார்.
“நான் பிரெய்லியை விரல்களால் படித்துக்கொண்டே அதே நேரத்தில் ஆடியோவில் தகவல்களை கேட்கும்போது, பார்வைத் திறனுள்ள மாணவர்களை விட அதிகம் சோர்வாக உணர்கிறேன்,” என்கிறார் ஜியோங்-வோன்.
ஆனால், தேர்வுக்கான நேரமோ அதிக நேரம் படிக்க வேண்டும் என்பதோ கடினம் அல்ல. படிப்புகுத் தேவையானவற்றை பெறும் வாய்ப்பு தான் மிகவும் சவாலானது என மாணவர்கள் கூறுகின்றனர்.
பார்வைத் திறனுள்ள மாணவர்கள் பயன்படுத்தும் பிரபல பாடப்புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு எட்டாதவையாகவே உள்ளன.
பிரெய்லியில் கிடைக்கும் தரவுகளும் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அவற்றை ஆடியோவாக மாற்ற உரை கோப்புகள் தேவைப்படும். ஆனால் அவற்றைப் பெறுவது கடினம். பல நேரங்களில், முழு புத்தகங்களையும் தட்டச்சு செய்யவேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால், பல ஆசிரியர்கள் திரையில் காட்சி குறிப்புகள், வரைபடங்கள், கிராபிக்ஸ் மூலம் விளக்குகிறார்கள். ஆடியோ மூலம் அவற்றைப் பின்தொடர முடியாது.
பட மூலாதாரம், BBC/Hosu Lee
அரசு தயாரிக்கும் ஈபிஸ் தயாரிப்பு புத்தகங்களின் பிரெய்லி பதிப்புகள் தாமதமாக கிடைப்பதும் மிக முக்கியமான தடையாக இருக்கிறது. இவை தேசிய தேர்வுடன் நேரடியாக தொடர்புடைய முக்கியமான தரவுகள்.
இந்தத் தாமதத்தின் காரணமாக, பார்வையற்ற மாணவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை விட பல மாதங்கள் தாமதமாகவே அப்புத்தகங்களைப் பெறுகிறார்கள்.
“பார்வைத் திறன் கொண்ட மாணவர்கள் ஜனவரி முதல் மார்ச் வரை ஈபிஎஸ் புத்தகங்களைப் பெற்று ஆண்டு முழுவதும் படிப்பார்கள்,” என்று கூறும் ஜியோங்-வோன், “ஆனால் நாங்கள் பிரெய்லி கோப்புகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பெறுகிறோம். அப்போது தேர்வுக்கு சில மாதங்களே இருக்கும்”என்று விளக்குகிறார்.
டோங்-ஹியூனும் அதே கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
“பிரெய்லி கோப்புகள் தேர்வுக்கு 90 நாட்களுக்கு முன்பு தான் தயாராயின, அவற்றை விரைவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன்”என்று அவர் கூறினார்.
இந்த தாமதம் குறித்து கொரிய கல்வி அதிகாரிகளிடம் பிபிசி விளக்கம் கேட்டுள்ளது.
பட மூலாதாரம், BBC/Hosu Lee
இந்த மாணவர்களுக்கு, சுனியுங் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல. அவர்கள் பல ஆண்டுகள் கடந்து வந்த பயணத்துக்கான சான்று.
ஜியோங்-வோன் இந்த தேர்வை “விடாமுயற்சி” என்று விவரிக்கிறார்.
“வாழ்க்கையில் விடாமுயற்சி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது, இதனை என் மனவலிமையை பயிற்றுவிக்கும் ஒரு பயணமாகவே நான் பார்க்கிறேன்” என்கிறார் ஜியோங்-வோன்.
அவர்களின் ஆசிரியர் காங் சியோக்-ஜு, ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொள்வதைப் பார்க்கிறார். பார்வையற்ற மாணவர்களின் மனவுறுதி “அற்புதமானது” என்று அவர் விவரிக்கிறார்.
“பிரெய்லி முறையில் படிப்பது என்பது, உங்கள் விரல் நுனியில் புள்ளிகளைக் கண்டுபிடிப்பதாகும். தொடர்ந்து உராய்வு ஏற்படுவதால் கைகளில் வலி ஏற்படலாம். ஆனால் அவர்கள் அதை மணிக்கணக்கில் செய்கிறார்கள்.”
மாணவர்கள் ஏமாற்றத்தை விட, முழுமையாக முயற்சி செய்வதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று காங் வலியுறுத்துகிறார்.
“இந்தத் தேர்வில், ஒன்றாம் வகுப்பிலிருந்து கற்ற அனைத்தையும் ஒரே நாளில் வெளிப்படுத்த வேண்டும், பல மாணவர்கள் பின்னர் ஏமாற்றமடைகிறார்கள். ஆனால் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள் என்பதை உணர்ந்து அவர்கள் வெளியேற வேண்டும்”.
ஏனென்றால், “தேர்வு மட்டுமே எல்லாம் கிடையாது”என்று அறிவுறுத்துகிறார் ஆசிரியர் காங்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு