பட மூலாதாரம், Getty Images
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
சமூக ஊடக பிரபலமான உர்ஃபி ஜாவேத் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார், அந்தக் காணொளியில் அவரது முகம் வீங்கி வித்தியாசமாக இருப்பதைக் காணலாம்.
வீடியோவைப் பார்த்ததும், முதல் பார்வையில் அது வேடிக்கைக்காக ஃபில்டரை பயன்படுத்தியது என தோன்றுகிறது. ஆனால் உர்ஃபி ஜாவேத்தின் முக வீக்கத்தின் பின்னணியில் உள்ள உண்மையான கதை ஃபில்டர் செய்யப்படாத அசல் உண்மை.
இன்ஸ்டாகிராமில் உர்ஃபி பகிர்ந்த காணொளியில், தனது உதடுகளின் வடிவத்தை மேம்படுத்துவதற்காக ‘லிப் ஃபில்லர்’ (lip filler) என்ற சிகிச்சையை சில காலத்துக்கு முன்பு செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த அழகு சிகிச்சைக்குப் பிறகு, உதடுகளை அழகான வடிவத்துக்கு மாற்றுவதற்காக செலுத்தப்பட்ட லிப் ஃபில்லர்கள் ‘தவறாக’ வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்ததாக உர்ஃபி தெரிவித்தார்.
“எனது உதடுகளில் ஃபில்லர்கள் சரியாக வைக்கப்படவில்லை என்று தெரிந்தது. எனவே, அவற்றை அகற்ற முடிவு செய்தேன்,” என்று உர்ஃபி ஜாவேத் தெரிவித்தார்.
ஃபில்லர்களைக் கரைக்கும் செயல்முறையின்போது, அவரது முகம் வீங்கிவிட்டது.
“இந்த நடைமுறையை மீண்டும் செய்வேன், ஆனால் இயற்கையாகவே” என்று கூறும் உர்ஃபி ஜாவேத், “ஃபில்லர்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவற்றை அகற்றுவது வேதனையானது” என்று கூறுகிறார்.
“ஃபில்லர்களை பொருத்துவது என்றால், அதற்கு நீங்கள் சரியான மருத்துவரிடம் செல்வது மிகவும் முக்கியம், ஆடம்பரமான அலங்கார மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் இந்த சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது” என்று உர்ஃபி ஜாவேத் கூறுகிறார்.
சரி, அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ஃபில்லர்’ என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன, இதற்கு எவ்வளவு செலவாகும், அவை ஆரோக்கியத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இந்த கேள்விகளுக்கான பதில்களை அறிய முயற்சிப்போம்.
பட மூலாதாரம், Getty Images
‘ஃபில்லர்’ என்றால் என்ன?
லூதியானாவில் ‘Skinic’ என்ற அழகுசாதன மருத்துவமனையை நடத்தி வரும் தோல் மருத்துவர் அனுபமா ராம்பால், இந்த நடைமுறை குறித்து பிபிசியிடம் பேசினார்.
“ஃபில்லர்கள் என்பது உடலின் எந்தப் பகுதியிலும் செலுத்தக்கூடிய ஹைலூரோனிக் அமில மூலக்கூறுகள்” (hyaluronic acid molecules) என்று அனுபமா கூறுகிறார்.
“ஹைலூரோனிக் அமிலம் நமது உடலில் இயற்கையாகவே உள்ளது. உடலில் நீரை தக்கவைத்து ஈரப்பதத்தை அளிப்பதாகும். சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும் என்பதால், இதை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். “
“ஹைலூரோனிக் அமில மூலக்கூறுகள் அல்லது ஃபில்லர்கள், நாம் பெரியதாகவும் தடிமனாகவும் காட்ட விரும்பும் உடல் அல்லது முகத்தின் பகுதிக்குள் செலுத்தப்படுகின்றன.”
“முகத்தில், பொதுவாக கன்னங்கள், உதடுகள், மூக்கு, கண்களுக்குக் கீழே, தாடை, கன்னம் மற்றும் நெற்றியில் ஃபில்லர்களை நிரப்புவார்கள்.”
ஃபில்லர்கள் பொருத்தும் செயல்முறை என்ன, அதற்கு எவ்வளவு செலவாகும்?
இந்த செயல்முறைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே ஆகும் என்று டாக்டர் அனுபமா ராம்பால் கூறுகிறார்.
“ஃபில்லர் ஊசி போட வேண்டிய இடத்தை மரத்துப் போகச் செய்ய அங்கு கிரீம் ஒன்றை தடவுவார்கள். பின்னர் ஃபில்லர் ஊசி போடப்படும்” என்று அவர் கூறுகிறார்.
இந்த முழு செயல்முறைக்கும் 25 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், இதன் விளைவு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும் என்றும் டாக்டர் அனுபமா விளக்கினார்.
ஃபில்லர்களை பொருத்துவதற்காக 25 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகமாக வருவதாக அவர் கூறினார்.
இந்த அழகு சிகிச்சை பிரபலமாவதற்கு காரணம் சமூக ஊடகங்களும், வெளிப்புற அழகுடன் தொடர்புடைய சமூக அழுத்தங்களுமே என்று டாக்டர் அனுபமா நம்புகிறார்.
“இப்போதெல்லாம், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் சாமானிய மக்களால் எளிதில் அணுகக்கூடியவைகளாக இருக்கின்றன. தங்கள் கண்களின் வடிவத்தில் அதிருப்தியுடன் இருக்கும் எவரும், சமூக ஊடகங்களின் தாக்கத்தாலோ அல்லது நண்பர்களிடம் பேசியோ இந்த நடைமுறையை மிக எளிதாகத் தேர்வு செய்யலாம்” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஃபில்லர்களை ‘கரைத்தல்’ என்றால் என்ன?
ஹைலூரோனிக் அமில ஊசிகள் ‘பிளைண்ட் ஸ்பாட்’ பகுதியில் செலுத்தப்படுகின்றன. அதாவது, நிபுணர்கள் தங்கள் சொந்த யூகத்தின் அடிப்படையில் இந்த ஊசியை செலுத்துகிறார்கள் என்று டாக்டர் அனுபமா ராம்பால் கூறுகிறார்.
இந்த ஊசியை ஒரு பயிற்சி பெறாத நிபுணரால் செலுத்தும்போதோ அல்லது உரிய முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் செலுத்தப்படும்போதோ, ஃபில்லர்கள் நிரப்ப வேண்டிய இடத்துக்கு மேலே அல்லது கீழே தவறுதலாக நிரப்பப்படலாம்.
இதனால், அவர்களின் திட்டமிட்டபடி உடல் பாகம் மாறாமல், வேறெப்படியாவது மாறலாம் அல்லது விகாரமானதாக மாறலாம்.
“உதாரணமாக, உதடுகளின் கீழ்பகுதியில் ஃபில்லர்கள் செலுத்தப்பட்டால், அது உதடுகளில் மேல் பகுதி வரை நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளது, இது தோற்றத்தில் சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். மேற்கொள்ளப்பட்ட ஃபில்லர் சிகிச்சையில் வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லையென்றால், சில நேரங்களில் செயல்முறையை மாற்றியமைக்கலாம்” என்று டாக்டர் அனுபமா விளக்குகிறார்.
நிபுணர்கள் லிப் ஃபில்லர்களைக் கரைக்க ஹைலூரோனிடேஸ் எனப்படும் நொதியைப் பயன்படுத்துகின்றனர். இந்த பொருள், ஹைலூரோனிக் அமில அடிப்படையிலான ஃபில்லர்களை மட்டுமே அழிக்கிறது.
வழக்கமாக, தலைகீழ் செயல்முறையான ஃபில்லர்கள் அகற்றும் செயல்முறையில் சிக்கல் ஏற்படாது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இது காலியிடத்தை விட்டுச் செல்லக்கூடும். இந்த அழகு செயல்முறையானது, ஒரு பலூனை ஊதி பெரிதாக்கிய பிறகு, அதிலிருந்து காற்றை வெளியேற்றினால் ஏற்படும் மாற்றம் போன்றது. அதாவது தோல் தொய்ந்து போகலாம்.
ஃபில்லர்கள் தொடர்பான கவலைகள்
பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் இந்த சிகிச்சையை செய்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என்று ஸ்கினோவேஷன் கிளினிக்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநரும் தோல் மருத்துவருமான அனில் கஞ்சு பிபிசியிடம் தெரிவித்தார்.
இருப்பினும், சிகிச்சையை நிபுணர்களிடம் செய்துக்கொள்வதால் மட்டுமே, அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் முற்றிலுமாக இருக்காது என தவறாக புரிந்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
“தோலின் வெவ்வேறு அடுக்குகளில் செலுத்தப்படும் ஃபில்லர்கள், தற்செயலாக ரத்த நாளத்தில் செலுத்தப்பட்டால், அது மிகவும் கடுமையான பிரச்னையாக மாறலாம்” என்று டாக்டர் கஞ்சு எச்சரிக்கிறார்.
கண்களுக்குக் கீழும் நெற்றியிலும் ஃபில்லர்களைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கலானது என்று அவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இந்தப் பகுதியில் ஏதாவது தவறு நடந்தால், கண் பார்வையை இழக்கலாம்.
“ஃபில்லர்களை உடலில் செலுத்திக் கொள்ளும்போது ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள் என்றால், ஊசி போடும் இடம் சிவத்துப் போவது, வீங்கிப்போவது, வலி மற்றும் அரிப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். மிகவும் தீவிரமான, ஆனால் குறைவான பொதுவான பக்க விளைவுகள் என்றால், தொற்று, ஒவ்வாமை எதிர்வினைகள், நெக்ரோசிஸ் எனப்படும் திசு அழிவு மற்றும் கண் பார்வை பிரச்னைகள் ஆகியவை அடங்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தவறு நேர்ந்தால் அது எங்கே நிகழ வாய்ப்புள்ளது?
ஃபில்லர் சிகிச்சையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது எங்கே நிகழலாம் என்பது குறித்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் ரோஹித் ராம்பால், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தோல் மருத்துவர்கள் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே ஃபில்லர்கள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான நடைமுறைகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
ஆனால் இதையெல்லாம் மீறி, அழகுநிலையங்கள், பல் மருத்துவம் மற்றும் பிற துறைகளுடன் தொடர்புடைய பலர் தங்கள் சொந்த வணிக கிளினிக்குகளைத் திறந்து இந்த சேவைகள் அனைத்தையும் வழங்குகிறார்கள்.
“அவர்கள் இந்த விஷயத்தில் நிபுணர்களாக இல்லாவிட்டாலும், குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதாக சொல்வது மற்றும் விளம்பரத்தின் மூலம் மக்களை ஈர்க்கிறார்கள்,” என்று டாக்டர் ரோஹித் ராம்பால் கூறினார்.
“சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்துவதற்காக சிறப்பு மருத்துவர் அல்லாதவர்களிடம் சென்று இதுபோன்ற சிகிச்சையைப் பெறுவதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சிகிச்சையின் போதும் அல்லது அதற்குப் பிறகு பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார்.
எனவே, ஃபில்லர் அழகு சிகிச்சை போன்ற நடைமுறைகளுக்கு நிபுணர்களை அணுகுவது மிக முக்கியமானது என்று டாக்டர் ரோஹித் ராம்பால் கூறுகிறார்.
ஃபில்லர் சிகிச்சை தொடர்பான முக்கிய விஷயங்கள்
தோல் மருத்துவர் டாக்டர் அனுபமா ராம்பால் கூறுகையில், ஃபில்லர்களைப் பெறுவதற்கு முன், பின்வரும் விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்:
- ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி: தகுதிவாய்ந்த நிபுணரை அணுகவும். தோல் நிரப்பிகளைப் பயன்படுத்துவதில் அனுபவம் வாய்ந்த சான்று பெற்ற தோல் மருத்துவர் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் தேர்வு செய்யவும்
- செயல்முறையைப் புரிந்து கொள்ளுங்கள்: பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை நிரப்பி, அது எவ்வளவு காலம் பயனளிக்கும் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்
- சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரிடம் உங்களுடைய மருத்துவ வரலாற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்
- ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்
- மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்
- மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்
- ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு