நேற்று (நவம்பர் 25) வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 27-ஆம் தேதிக்கு அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை எங்கு மழை பெய்யும்?
நாளை தமிழகத்தின் பெருவாரியான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் ஆகியவற்றில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நாளை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் பலத்த மழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது.
இதனால் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மற்றும் தரைப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றது. யாழ்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளின் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்மழை காரணமாக இலங்கையில் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மலையகத்தின் பல விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மற்றும் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் பெரிய கற்கள் சாலையில் விழுந்துள்ளதால் அங்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.