பட மூலாதாரம், Kuldeep Brar/BBC
எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில விவரங்கள் உங்களை பாதிக்கக்கூடும்
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், ஒரு தந்தை தனது மகளைக் கால்வாயில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஃபெரோஸ்பூர் காவல்துறை குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் இந்தச் சம்பவத்தை ஒரு வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதில், அந்தப் பெண்ணின் இரு கைகளும் கட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் நடந்தபோது அந்தப் பெண்ணின் தாயும் உடனிருந்தார்.
முழு விவரம் என்ன?
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வேகமாகப் பரவியது. அதில், ஒரு நபர், அவரது மனைவி மற்றும் மகள் கால்வாயின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பது தெரிகிறது.
வீடியோவில், அந்தப் பெண்ணின் இரு கைகளும் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவளது தந்தை அவளிடம், “எங்கள் அன்பில் என்ன குறை இருந்தது?” என்று கேட்பது தெரிகிறது.
அதே நேரத்தில், அப்பெண்ணின் தாய், “நீ ஏன் இதைச் செய்தாய்?” என்று கேட்பது கேட்கிறது.
வீடியோவில், அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது மனைவியிடம் தொலைபேசியை எடுக்குமாறு கூறுகிறார். அந்தப் பெண் தொலைபேசியை எடுக்க ஒரு பக்கம் செல்லும் போது, தந்தை அந்தக் கொடூரச் செயலைச் செய்துவிடுகிறார்.
அதன் பிறகு, அந்த வீடியோவில் அப்பெண்ணின் தாய் அழுது புலம்புவது தெரிகிறது.
‘நான் மிகவும் தடுத்தேன், ஆனால் அவள் நிறுத்தவில்லை’
பட மூலாதாரம், Kuldeep Brar/BBC
குற்றம்சாட்டப்பட்டவர் அளித்த தகவலின்படி, அவர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வணிக அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்கள் கேட்டபோது, “அவள் இதற்கு முன்பும் இரண்டு முறை இப்படிச் செய்தாள். ‘மகளே, இப்படிச் செய்யாதே’ என்று நாங்கள் கைகூப்பித் கெஞ்சினோம், ஆனால் அவள் கேட்கவில்லை.” என்று சுர்ஜித் சிங் கூறினார்.
காவல்துறை என்ன கூறுகிறது?
ஃபெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி. (SSP) பூபிந்தர் சிங் சித்து,”சுர்ஜித் சிங் என்ற நபர் தனது மகளின் கைகளைக் கட்டி அவளைக் கால்வாயில் வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார்,” என்று விவரித்தார்.
“பெண்ணின் அத்தை எங்களுக்கு இது குறித்துப் புகார் அளித்தார். அதைப் பற்றி விசாரித்த போது, இவை அனைத்தும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஒரு குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.”
“இந்த நபர் மிகக் கொடூரமான செயலைச் செய்துள்ளார். அவர் தனது சொந்த மகளைக் கால்வாயில் வீசியுள்ளார். நாங்கள் அவரைக் கைது செய்துள்ளோம், தேவையான நடவடிக்கையை எடுப்போம்.”
பட மூலாதாரம், Kuldeep Brar/BBC
எஸ்.எஸ்.பி. பூபிந்தர் சிங் கூற்றுப்படி, விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர், தனது மகளுக்கு முறையற்ற உறவுகள்’ இருப்பதாகச் சந்தேகித்ததாலேயே இந்தச் செயலைச் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம், அந்தப் பெண்ணின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.”
உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் என்ன கூறினர்?
பட மூலாதாரம், Kuldeep Brar/BBC
இந்தச் சம்பவம் குறித்து, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் கூறுகையில், அவர் தனது மகளை இரவு 9 மணியளவில் அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
அண்டை வீட்டுக்காரரான சந்தோஷ் பேசுகையில்,”அந்தப் பெண் தன் தாயுடன் சேர்ந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். அவர் போதையில் இதைச் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தத்தால் செய்தாரா என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் எனது மகள் தவறானவள், அதனால்தான் நான் இதைச் செய்தேன் என்று அவர் எங்களிடம் கூறினார்.” என்று கூறினார்.
“நாங்கள் அந்தப் பெண்ணைப் பற்றி மோசமாக எதையும் பார்த்ததில்லை, அவள் மோசமாக நடந்து கொண்டாள் என்று எங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு எதுவும் தெரியாது. அவரே காலையில் எழுந்து, நான் என் மகளுக்கு இப்படிச் செய்துவிட்டேன் என்று சத்தமாகச் சொன்னார்.” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Kuldeep Brar/BBC
அந்தப் பெண்ணின் அத்தையின் கணவரான ஜஸ்வந்த் சிங் கூறுகையில், “இதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு இன்னும் புரியவில்லை. நாங்கள் இவர்களது வீட்டிற்கு வரும்போதெல்லாம், அந்தப் பெண் தவறானவள் என்று எங்களுக்கு ஒருபோதும் தோன்றவில்லை. ஆனால் இப்போது அவரே வீடியோவில் இதையெல்லாம் சொல்கிறார். இருப்பினும், அந்தப் பெண் தவறானவள் என்று நாங்கள் நினைக்கவில்லை.”
“சுர்ஜித் சிங்கைச் சந்தித்தால் மட்டுமே இதற்குக் காரணம் என்னவென்று தெரியவரும். இந்தச் சம்பவம் பற்றி எங்களுக்கு இரவு 11:30 மணிக்குத் தான் தெரியும், நாங்கள் காலையில் 6 மணிக்கே ஊருக்கு வந்துவிட்டோம். இங்கு வந்தவுடன் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தோம், காவல்துறையினர் தங்கள் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.” என்று அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.