வடக்கு ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கத்திற்கு மாறான சிறிய எலும்புகள் மீதான நீண்ட ஆய்வுக்குப் பிறகு, ஒரு சிறிய கோழி அளவிலான டைனோசர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் புதிய இனத்திற்கு ஃபோஸ்கியா பெலெண்டோனம் (Foskeia pelendonum) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது கிரகத்தில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படுகிறது மற்றும் ஆர்னிதோபாட்ஸ் என்று அழைக்கப்படும் தாவரங்களை உண்ணும் அழிந்துபோன டைனோசர்களின் குழுவைச் சேர்ந்தது. அதன் அளவு சிறியதாக இருந்தாலும், அந்த டைனோசர் எதிர்பாராத அளவு பரிணாம வளர்ச்சியடைந்த மண்டை ஓட்டைக் கொண்டிருந்ததாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
“இதன் உடல் அமைப்பு, டைனோசர் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ளும் முறையையே மாற்றும் அளவுக்கு வித்தியாசமாக உள்ளது,” என்று ஸ்பெயினில் உள்ள லா லகூனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிர் ஆய்வாளர் பெனிலோப் குரூசாடோ-கபல்லெரோ கூறினார்.
பட மூலாதாரம், Dieudonné et al. 2026
படக்குறிப்பு, ஃபோஸ்கியா அளவில் ஒரு கோழியுடன் ஒப்பிடப்பட்டுள்ளது
அர்ஜென்டினாவில் உள்ள ரியோ நீக்ரோ தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிர் ஆய்வாளர் பால்-எமில் டியூடோனே தலைமையிலான சர்வதேசக் குழுவின் ஆராய்ச்சியின்படி, கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் குறைந்தது ஐந்து வெவ்வேறு தனிப்பட்டவை ஆகும். இவர் 2013 முதல் இதில் பணியாற்றி வருகிறார்.
“இந்தக் கண்டுபிடிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், இன்னும் நிறையப் படிமப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளன என்பதையும், அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலான டைனோசர்களிடமிருந்தே கிடைக்கும் என்பதையும் இது நிரூபிக்கிறது என்று நான் கூறுவேன்,” என்று டியூடோனே பிபிசியிடம் கூறினார்.
“சிறிய அளவிலான டைனோசர்கள் நாம் முன்பு நினைத்ததை விட மிகவும் மாறுபட்டவை மற்றும் நமக்குத் தெரிந்த பெரும்பாலான குழுக்கள் காலப்போக்கில் பெரிதாக வளர்ந்த சிறிய அளவிலான டைனோசர்களிடமிருந்தே தோன்றியிருக்க வாய்ப்புள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
கண்டுபிடிப்பது கடினம்
ஆனால் சிறிய டைனோசர் எச்சங்கள் மிகவும் மென்மையானவை மற்றும் கண்டுபிடிப்பதற்குக் கடினமானவை என்று டியூடோனே குறிப்பிட்டார். “துரதிர்ஷ்டவசமாக, சிறிய பொருட்கள் மிகவும் துண்டு துண்டாக உள்ளன… சில சிறிய எலும்புகளின் படிவுகள் எளிதில் மறைந்துவிடுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் பெல்ஜியத்தில் உள்ள ரிஜே யுனிவர்சிட்டிட் பிரஸ்ஸலைச் சேர்ந்த தொல்லுயிர் ஆய்வாளருமான கோயன் ஸ்டெய்னின் கூற்றுப்படி, இந்த டைனோசர் வழக்கத்திற்கு மாறாகச் சிறியதாக இருந்தது.
இது சுமார் 25 முதல் 30 செ.மீ உயரம் கொண்டதாகவும், அளவில் ஒரு கோழிக்கு ஒப்பிடக்கூடியதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது.
“ஐரோப்பா கண்டத்தில் கண்டறியப்பட்டவற்றில் இது மிகச் சிறிய டைனோசர்களில் ஒன்று. ஏன் இதுதான் மிகச் சிறியது என்று கூட சொல்லலாம். உலகளாவிய அளவிலும் மிகச் சிறிய டைனோசர்களில் ஒன்றாக இருக்கக்கூடும்” என்று ஸ்டெய்ன் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Dieudonné et al. 2026
படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர்கள் மண்டை ஓட்டின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கினர்
படிமங்களின் சிறிய அளவு, டைனோசர்கள் குட்டிகளாக இருந்திருக்கலாம் என்பதைக் குறித்தது. ஆனால் ஆழமான ஆய்வு வேறுவிதமாகக் காட்டியது.
குறைந்தது ஒன்றாவது வயது வந்ததாக இருந்தது என்று ஸ்டெய்ன் விளக்கினார், மேலும் குட்டிகளாக இருக்கும்போது அவை நான்கு கால்களில் நடந்திருக்கலாம் – அதேசமயம் வயது வந்தவுடன், அவை இரு கால்களில் நடப்பவையாக மாறின என்றும் அவர் கூறினார்.
ஃபோஸ்கியா என்பது ஆர்னிதோபாட்களுக்குள் உள்ள ஒரு குழுவான ராப்டோடோன்டோமார்ப் வகையைச் சேர்ந்த அறியப்பட்ட ஆரம்பக்கால உயிரினமாகும்.
ராப்டோடோன்டோமார்ப்கள் “அநேகமாக ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறியதாக இருந்தன” என்றும் அது “அவை வேட்டையாடப்படுவதிலிருந்து தப்பிக்க அனுமதித்திருக்கும்” என்றும் டியூடோனே விளக்கினார்.
“சிறிய அளவு என்பது நீண்ட தூரம் ஓடுவதற்கு ஏற்றதல்ல, மாறாக விரைவாக ஒளிந்து கொள்வதற்கான இடத்தைத் தேடுவதற்கே ஏற்றது,” என்று அவர் மேலும் கூறினார்.
பல தசாப்த காலக் கண்டுபிடிப்பு
பெரும்பாலான படிமங்கள் 1998இல் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் சில அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே தளத்திலிருந்து மீட்கப்பட்டன. ஆனால் அவற்றை அடையாளம் காணப் பல ஆண்டுகள் ஆகியுள்ளன.
தளத்தை முதலில் கண்டுபிடித்து பெரும்பாலான எச்சங்களைச் சேகரித்தவர் வடக்கு ஸ்பெயினில் உள்ள சலாஸ் டி லாஸ் இன்ஃபான்டெஸில் இருக்கும் டைனோசர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஃபிடல் டார்சிடா பெர்னாண்டஸ்-பால்டோர் ஆவார் – இவர் ஆய்வின் மற்றொரு இணை ஆசிரியர்.
“தொடக்கத்திலிருந்தே, இந்த எலும்புகள் அவற்றின் மிகச்சிறிய அளவின் காரணமாகச் சிறப்பானவை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்,” என்று டார்சிடா பெர்னாண்டஸ்-பால்டோர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Paul-Emile Dieudonné
படக்குறிப்பு, ஃபோஸ்கியா பெலெண்டோனத்தின் மண்டை ஓட்டின் மேல்பகுதி மற்றும் மூளைப் பெட்டியிலிருந்து பெறப்பட்ட மூட்டு இணைந்த எலும்புகள் (மூட்டில் இணைக்கப்பட்ட எலும்புகள்) புதிய ஆராய்ச்சியில் ஆய்வு செய்யப்பட்டன
ஃபோஸ்கியாவைக் (‘ஃபோஸ்’ (Fos) என்பது ஒளிக்கான பண்டைய கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது) கண்டுபிடித்தது ஆர்னிதோபாட் டைனோசர்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
“உருவம் சிறிதாவதென்பது பரிணாம எளிமையைக் குறிக்கவில்லை,” என்று அர்ஜென்டினாவில் உள்ள கார்டோபா தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை ஆசிரியரும் தொல்லுயிர் ஆய்வாளருமான மார்கோஸ் பெசெரா கூறியுள்ளார்.
ஃபோஸ்கியா பற்களின் தனித்துவமான அமைப்பையும் கொண்டிருந்தது, இதில் “நடுவில் ஒரு பிரம்மாண்டமான திரிசூலம் போல” முன்னோக்கி நீண்டிருக்கும் முன் பற்களும் அடங்கும் என்று டியூடோனே குறிப்பிட்டார்.
அதன் “சற்றே விசித்திரமான” பற்களைப் போலவே, இது ஒரு “சுவாரஸ்யமான மண்டை ஓட்டு அமைப்பையியல் கொண்டிருந்தது என்று ஸ்டெய்ன் கூறினார்.
பட மூலாதாரம், Paul-Emile Dieudonné
படக்குறிப்பு, ஃபோஸ்கியா பெலெண்டோனத்தின் பல் வரிசை (கீழ் தாடை) எலும்பின் ஒரு துண்டு
மண்டை ஓடு
2016இல் வெளியிடப்பட்ட முந்தைய ஆராய்ச்சி, இந்தப் படிமங்களை வெகாகேட் ஆர்னிதோபாட் என்று அழைக்கப்படும் டைனோசருக்குத் தோராயமாக ஒதுக்கியது. ஆனால் அதை முறையாக அடையாளம் காணப் போதுமான தகவல்கள் இருக்கவில்லை.
இந்த சமீபத்திய ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனை என்னவென்றால், மண்டை ஓட்டுத் துண்டுகள் உட்படப் புதிய மண்டை ஓட்டுக் கூறுகளை அடையாளம் கண்டதாகும். இது வெகாகேட் ஆர்னிதோபாட் டைனோசரை முறையாக அடையாளம் காணவும் ஃபோஸ்கியா பெலெண்டோனம் என பெயரிடவும் வழிவகுத்தது.
“உயிருள்ள உயிரினங்களில், பொதுவாக, நமக்கு அதிகத் தகவல்களைத் தரும் உடல் உறுப்பு மண்டை ஓடு ஆகும். இது மெல்லும் செயல்முறை, கண்பார்வை, உடலின் சமநிலை பற்றி நமக்குச் சொல்கிறது,” என்று டியூடோனே விளக்கினார்.
“எனவே இந்த மண்டை ஓட்டு எலும்புகள், எவ்வளவு சிறியதாகவோ மற்றும் துண்டு துண்டாகவோ இருந்தாலும், விலங்கின் வாழ்க்கை முறை பற்றி நமக்கு நிறையத் தகவல்களைத் தருகின்றன”.
“கடந்த காலத்தில் மாறிவரும் சூழல்களில் வாழ்க்கை எவ்வாறு தொடர்ந்து மாறியது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, அவை எப்படி வளர்ந்தன, எப்படி வாழ்ந்தன, எப்படி இறந்தன, மற்றும் எப்படிப் பரிணாம வளர்ச்சியடைந்தன என்பதைக் கண்டறிய இவற்றை ஆவணப்படுத்துவது முக்கியம்,” என்று அவர் விளக்கினார்.