நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை.
இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் – உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது.
இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் வளர்ந்த குழங்தைகளின் சுய மரியாதையை குறைப்பது எனப் பல வழிகளில் குழந்தைகளையும் பாதிக்கலாம்.
சுயக்கட்டுப்பாடு இல்லாததைப் பற்றி உங்களை நீங்களே குறைக் கூறுவதற்குப் பதிலாக, நாம் சாதனங்களை எப்போது எடுப்பது என்ற நோக்கத்துடன் செயல்படுவதில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு உளவியலாளர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
எளிய வழி என்ன?
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் இணைப் பேராசிரியரான கெய்டலின் ரெகெர், நீங்கள் மற்றவருடன் இருக்கும்போது இயந்திரத்தனமாக ஃபோனை எடுப்பதைத் தடுக்க ஒரு எளிய வழியைப் பரிந்துரைக்கிறார்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் ஃபோனை எடுக்க முற்படும்போது, ஏன் அதைச் செய்கிறீர்கள் என்பதை மற்றவரிடம் சொல்லுங்கள், முடித்தவுடன், அதை கீழே வைத்துவிட்டு மீண்டும் அவர்களிடம் கவனத்தை செலுத்துங்கள்.
இது மிகவும் எளிதானதாகத் தோன்றலாம், ஆனால் ரெகெர், ‘வுமன்ஸ் ஹவர்’ (Woman’s Hour) நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தச் சிறிய மாற்றம் நமது நடத்தையை மாற்ற உதவும் என்கிறார்.
ஏனென்றால் நாம் பெரும்பாலும் சிந்திக்காமல் மெசேஜ்களை பார்க்கிறோம், நோட்டிஃபிகேஷன்களைத் தள்ளுகிறோம் அல்லது “விரைவாக ஏதாவது ஒன்றைத் தேடுகிறோம்.”
இங்கு வெளிப்படையாக இருப்பதுதான் முக்கியம். எனவே, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு மெசேஜ் வந்தால், நீங்கள் உங்களுடன் இருப்பவரிடம் அல்லது குழுவினரிடம், “நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும், அதன் பிறகு உங்கள் மீது என் கவனம் இருக்கும்” என்று கூற வேண்டும்.
“நான் எனது ரயில் நேரத்தைச் சரிபார்க்க வேண்டும்” அல்லது “நான் என் அம்மாவுக்குப் பதிலளிக்கிறேன்” என்று குறிப்பிடுவதன் மூலம், நீங்கள் ஃபோனைச் பார்க்கும் தன்னியக்கப் பழக்கத்தைத் தடுக்கிறீர்கள், மேலும் உங்கள் அருகில் இருப்பவருக்கு அவர் இன்னும் முக்கியமானவர்தான் என்ற செய்தியையும் இது தருகிறது.
“இது மற்றவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வதைத் தடுக்கிறது,” என்று ரெகெர் கூறுகிறார்.
“மேலும், இது உங்களை பொறுப்புடையவராக வைத்திருக்கிறது, ஏனெனில் நீங்கள் மற்ற செயலிகள் அல்லது முடிவில்லாத ஸ்க்ரோலிங்கில் செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளது.”
இதைச் செய்வது உங்கள் உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.
பட மூலாதாரம், Getty Images
ஆய்வு சொல்வது என்ன?
சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் இணைப் பேராசிரியரான கிளாரி ஹார்ட், உறவுகள் மற்றும் ஃபோன் பயன்பாடு குறித்து 196 நபர்களிடம் பேசிய ஒரு ஆய்வுக்குத் தலைமை தாங்கினார்.
ஒட்டுமொத்தமாக, நீங்கள் எவ்வளவு அதிகமாக ஃப்பப்பிங் (Phubbing) செய்யப்படுவதாக உணர்கிறீர்களோ, அவ்வளவு மோசமாக உங்கள் உறவு இருக்க வாய்ப்புள்ளது என்று முடிவுகள் காட்டின.
“எல்லோரும் ஒரே மாதிரி எதிர்வினையாற்றுவதில்லை,” என்று ஹார்ட் கூறுகிறார். “இது ஆளுமையைப் பொறுத்தது, ஆனால் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்தவுடன், அது பதிலடி கொடுப்பதைத் தூண்டலாம்.”
“அவர்களும் தங்கள் சொந்த ஃபோனை எடுக்கிறார்கள், அப்போதுதான் இது ஒரு ஆபத்தான சுழலாக மாறுகிறது, ஏனெனில் ஒவ்வொரு துணையும் திரையில் உள்ளதைவிடத் தாங்கள் மதிப்பற்றவர்களாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள்.”
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஃப்பப்பிங் செய்யும்போது, நீங்கள் தொடர்பை இழக்கிறீர்கள்.
திரையைப் பார்ப்பதற்காக குடும்பத்தினர்/நண்பர்கள் சூழ்ந்த ஒரு தருணத்தை விட்டு நீங்கள் விலகிய பிறகு அதே தருணத்திற்கு திரும்புவதற்குச் சிறிது நேரம் ஆகலாம்.