பட மூலாதாரம், 14Reels
அகண்டா-2 தாண்டவம் படத்தின் கதை, அகண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
அகண்டா பகுதி 1 திரைப்படத்தின் காட்சிகளை சுருக்கமாக நினைவுபடுத்தும் போது, ‘உனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், நான் வருவேன்’ என சின்னப்பாவுக்கு அகண்டா கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வரும். பகுதி 2 இன் முக்கியக் கருவும் அதேதான்.
திரைப்படம் இந்திய எல்லைகளில் தொடங்குகிறது. இந்திய ராணுவத்தினரால் தனது மகன் கொல்லப்பட்டதால், ஒரு சீன தளபதி இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்.
இந்தக் கோபம் அவரை மற்றொரு முன்னாள் தளபதியுடன் கைகோர்க்க வைக்கிறது.
இருவரும் இணைந்து, ஒரு அரசியல் தலைவர் மூலம் சதி செய்கிறார்கள். கும்பமேளா நிகழ்ச்சியின்போது, கங்கை நதியில் ஒரு கொடிய வைரஸ் வெளியிடப்படுகிறது.
ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், பிரதமர் உடனடியாக தடுப்பூசியை தயாரிக்க அவசரமாக உத்தரவிடுகிறார்.
லடாக்கில் உள்ள ஒரு ஆய்வுக்கூடத்தில் ஒரு இளம் விஞ்ஞானி இந்த முக்கியப் பணியைத் தொடங்குகிறார். அவர் வேறு யாருமல்ல, அகண்டாவின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள்.
ஒரு வில்லன் கும்பலால் அப்பெண் பிடிபட்டபோது அகண்டா அவரை எப்படி காப்பாற்றினார்? அவர் நாட்டை, கடவுள் நம்பிக்கையை எப்படி காப்பாற்றினார்? என்பதே கதை.
இடைவேளை வரை காத்திருக்க வேண்டும்
இளம் வயதில் பிரிந்த இரட்டையர்களில் ஒருவர் தவறானவராக வளர்ந்து, பின்னர் சகோதரனின் குடும்பம் சிக்கலில் சிக்கும்போது நல்லவனாக மாறுவதுதான் அகண்டா-1 வெற்றி பெற்றதற்குக் காரணம்.
கதாநாயகனே வில்லனாக இருப்பது வணிக ரீதியாக ஒரு புதிய அம்சம். (இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படம் தமிழில் அப்படி ஒரு அம்சத்தை கொண்டிருந்தாலும், அது ஒரு கமர்ஷியல் திரைப்படம் அல்ல).
பாலகிருஷ்ணாவை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பது மக்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் கதையும், கதை சொல்லும் விதமும் மிகவும் வலிமையாக இருந்தன.
ஆனால் ‘அகண்டா 1’ இல் இருந்த அந்தக் கதை வலிமையும் கதை சொல்லும் விதமும் ‘அகண்டா 2’ இல் இல்லை.
பான்-இந்தியா இலக்கை மனதில் வைத்து, கதை திடீரென நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மோதலுக்கு கும்பமேளா தேவைப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனமும், ராணுவமும் படத்தில் இணைந்தன.
கதை பல திசைகளில் பயணித்ததால், கதாபாத்திர அறிமுகங்களும், கதை வேகமெடுக்கவும் அதிக நேரம் எடுத்தது. பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்காக இடைவேளை வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
பட மூலாதாரம், 14Reels
‘அகண்டா’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், இந்தப் படத்தில் அதிக அதிரடி மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை எதிர்பார்த்தனர்.
ஆனால் முதல் பாதி மந்தமாக உள்ளது. இடைவேளைக் காட்சி உற்சாகமளித்தாலும், இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் சண்டைக் காட்சிகளுக்கு இடையில் கதாநாயகன் மதம் மற்றும் கடவுளைப் பற்றி உபதேசம் செய்வது சற்று நெருடலாக இருந்தது.
பாலையா (பாலகிருஷ்ணா) மற்றும் இயக்குநர் போயபதியின் கூட்டணி எப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும் . அங்கே லாஜிக் குறித்து கேள்வி கேட்க கூடாது. நீங்கள் மேஜிக் செய்தால், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், இங்கு அந்த மேஜிக் நிகழத் தவறிவிட்டது.
கதை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே புள்ளியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பகுதி 1 இல் வரும் மற்றொரு பாலகிருஷ்ணா கதாபாத்திரத்தை கதையில் இணைத்திருக்கலாம் .
இரண்டாம் பாகத்தில் எம்.எல்.ஏ.வாக வரும் பாலகிருஷ்ணாவுக்கு கதையில் இடமே இல்லை. படம் அவருடைய மகள் ஜனனி (ஹர்ஷாலி) மற்றும் அகண்டாவுக்கு இடையில்தான் உள்ளது. தேவையற்ற சண்டை மற்றும் பாடல் காட்சிகள் பாலகிருஷ்ணாவுக்கு உள்ளது. எஸ்.பி. உட்பட அனைத்து அதிகாரிகளும் கஞ்சா கும்பலால் கடத்தப்படும்போது, எம்.எல்.ஏ. சென்று அவர்களை விடுவித்து, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளிலும் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்.
அவர் வீட்டில் பல நபர்கள் உள்ளனர். அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தால், படத்தின் நீளம் இன்னும் அதிகரித்திருக்கும்.
ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும், படத்தில் ஏதோ ஒரு குறை உள்ளது.
டெல்லி, திபெத், சீனா, கும்பமேளா என அனைத்தும் கலந்துவிட்டதால், பார்வையாளர்கள் கதையிலிருந்து துண்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
சில காட்சிகளில் பாலகிருஷ்ணாவின் முகபாவங்கள், உடல் மொழி , மற்றும் வசனங்கள் மிகவும் நன்றாக உள்ளன. இது போன்ற பாத்திரங்கள் அவருக்கு மிகவும் பொருத்தமானவை.
பஞ்ச் வசனங்களுக்குப் பெயர் பெற்றவர் பாலையா. ஆனால் இந்தப் படத்தில் வசனங்களின் நீளம் அதிகமாகிவிட்டது.
பட மூலாதாரம், 14Reels
இந்த படத்தில் ஆதி பிணிசெட்டி ஒரு மந்திரவாதியாக திகிலூட்டும் வகையில் நடித்துள்ளார். படத்தில் இரண்டு பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் உள்ளன.
அகண்டாவின் தாய் இறக்கும்போது, திடீரென சிவனே அகண்டா வடிவத்தில் (சிவனாக நடித்த பாலய்யா அல்ல). தோன்றுகிறார். அவர் திடீரென அகண்டாவை கடவுள் என்று புகழ்கிறார்.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக இருந்தாலும்,அவர் ஒரே ஒரு பாடலில் மட்டுமே வருகிறார். மகள் வேடத்தில் நடித்த ஹர்ஷாலிக்குச் சரியாக டப்பிங் கொடுக்கப்படவில்லை.
சர்வதாமன் பானர்ஜி பிரதமராகவும், ஜான்சி என்ஐஏ (NIA) தலைவராகவும் நடித்திருந்தனர். மேலும் பல நடிகர்கள் இருந்தாலும், அவர்களில் யாருக்கும் முக்கியத்துவம் இல்லை.
- ராம் பிரசாத் மற்றும் சந்தோஷின் கேமரா காட்சிகள் நன்றாக உள்ளன.
- எடிட்டிங் கச்சிதமாக உள்ளது.
- தமனின் இசை காட்சிகளின் தாக்கத்தை மேலும் உயர்த்துகிறது.
- விஎஃப்எக்ஸ் சில இடங்களில் குறைபாடுகளுடன் உள்ளது.
- ஆனால் மிகப்பெரும் செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு வரியில் கூற வேண்டும் என்றால், இது பாலையாவின் ஒன்-மேன் ஷோ தான்.
படத்தில் திரிசூலத்துடன் கூடிய ஒரு பயங்கரமான காட்சி ஒன்றுள்ளது. அவரது ரசிகர்கள் படத்தை மகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள் .
ஆனால், சாதாரண பார்வையாளர்கள் சிறிது பொறுமையாக இருக்க வேண்டியிருக்கும்.
இந்து மற்றும் சனாதன தர்மத்தை கடுமையாகத் திணிக்கும்போது, அது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக இருக்காது. தர்மத்தை வலியுறுத்தி பெரிய வசனங்கள் பேசுவதற்குப் பதிலாக, அதை காட்சிகளின் மூலமாகவே காட்ட வேண்டும்.
இயக்குநர் போயபதி இந்த லாஜிக்கைத் தவறவிட்டார்.
படத்தின் ப்ளஸ்:
1. பாலய்யாவின் அருமையான நடிப்பு.
2. கேமரா, பின்னணி இசை
3. இரண்டாம் பாதியில் சில காட்சிகள்
படத்தின் மைனஸ்:
1. முதல் பாதி
2. கதையின் வேகம்
3. வலுவான வில்லன் இல்லாதது
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் பாலய்யா மற்றும் போயபதியின் கூட்டணியில் வெளிவந்த ஒரு மூர்க்கத்தனமான பக்தித் திரைப்படம் இது.
(குறிப்பு: இவை எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு