படக்குறிப்பு, அகமது அல் அகமது தாக்குதல் நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்கிறார்.கட்டுரை தகவல்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த “ஹீரோ” கேமராவில் சிக்கியுள்ளார். அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது.
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, ஒரு பழக் கடை நடத்தி வருகிறார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் தெரிவித்தனர்.
போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
காவல்துறையினர் இதை யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட ‘பயங்கரவாத தாக்குதல்’ என்று அறிவித்துள்ளனர்.
ஹனுக்கா என்பது யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.
“அவர் ஒரு ஹீரோ, அவர் இரண்டு முறை சுடப்பட்டார்”
படக்குறிப்பு, ஒரு காரின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அகமது, தாக்குதல் நடத்திய நபரைப் பிடித்தார்.
அகமதுவின் உறவினர் முஸ்தபா, ஞாயிற்றுக்கிழமை இரவு 7நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் பேசிய போது, “அவர் ஒரு ஹீரோ, 100 சதவிகிதம் அவர் ஒரு ஹீரோ. அவர் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். ஒன்று கையில், மற்றொன்று முழங்கையில்”என்று கூறினார்.
திங்கட்கிழமை அதிகாலை வெளியான புதிய தகவலில், “அவர் குணமடைவார் என்று நம்புகிறேன். நான் அவரை நேற்றிரவு பார்த்தேன். அவர் நலமாக இருந்தார். ஆனால் நாங்கள் மருத்துவர் வழங்கும் தகவலுக்காகக் காத்திருக்கிறோம்”என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் தாக்குதல் நடத்தியது இரண்டு பேர் என்றும், அவர்கள் 5தந்தை – மகன் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய 50 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 24 வயதுடைய மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைரலான காணொளியில் என்ன காணப்பட்டது?
தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பறிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சிறிய நடைமேம்பாலத்துக்கு அருகில் ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் குறிவைக்கும் இடம் கேமராவின் சட்டகத்திற்குள் வரவில்லை.
அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, தாக்குதல் நடத்தியவரை நோக்கிப் பாய்ந்து அவரை மடக்கிப் பிடிப்பதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
தாக்குதல் நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளி பின்னர் அவரை நோக்கி அகமது துப்பாக்கியை நீட்டுகிறார். அதன்பின், அந்தத் தாக்குதல் நடத்திய நபர் பாலத்தை நோக்கிப் பின்வாங்கத் தொடங்குகிறார்.
அதன்பிறகு, அகமது தனது ஆயுதத்தைக் கீழே இறக்கிவிட்டு, தான் தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் அல்ல என்று காவல்துறைக்கு காட்டுவதற்காக ஒரு கையை மேலே உயர்த்துகிறார்.
இந்த நேரத்தில், தாக்குதல் நடத்திய நபர் இன்னொரு ஆயுதத்தை எடுத்து மீண்டும் சுடுவதைக் காண முடிகிறது .
துப்பாக்கி ஏந்திய இரண்டாவது நபரும் பாலத்தில் இருந்து தொடர்ந்து சுடுகிறார். தாக்குதல் நடத்திய அவர்கள், யாரை அல்லது எதை நோக்கிச் சுடுகிறார்கள் என்பதை வீடியோ தெளிவாகக் காட்டவில்லை.
படக்குறிப்பு, அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, பின்னர் அதைத் தாக்கியவரை நோக்கி திருப்பினார்.
அகமதுவுக்கு தலைவர்கள் பாராட்டு
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியரான கிறிஸ் மின்ஸ், அகமதுவின் துணிச்சலைப் பாராட்டினார். அப்போது அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை.
“அவர் ஒரு உண்மையான ஹீரோ, அவருடைய துணிச்சலால், இன்று இரவு பலர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை,” என்று கிறிஸ் மின்ஸ் கூறினார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதுகுறித்துப் பேசுகையில், “இன்று, மற்றவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த ஆஸ்திரேலியர்களை நாங்கள் கண்டோம். இந்த ஆஸ்திரேலியர்கள் ஹீரோக்கள். அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது,” என்றார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அகமது மீது தனக்கு “பெரிய மரியாதை” இருப்பதாகக் கூறினார்.
மேலும் “அவர் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான மனிதர். அவர் முன்னால் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தாக்கி பல உயிர்களைக் காப்பாற்றினார்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்ததையும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததையும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண பிரீமியர் கிறிஸ் மின்ஸ் உறுதிப்படுத்தினார்.
50 வயது தந்தை மற்றும் அவரது 24 வயது மகன் ஆகிய இருவர் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என்று காவல்துறை ஆணையர் மெயில் லேன்யன் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய 50 வயது நபர், காவல்துறையால் சுடப்பட்டதில் உயிரிழந்தார். 24 வயதான அவரது மகனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 42 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 50 வயது நபர் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பெயரில் ஆறு ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. போண்டி கடற்கரையில் ஆறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பவ இடத்தில் ‘இரண்டு வெடிகுண்டுகள்’ காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
மேற்கு சிட்னியில் உள்ள கெம்ப்ஸி மற்றும் போன்னிரிக் பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் காவல்துறையினர் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
சிட்னியில் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக 328 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலிய சமூகத்தில் இருந்து யூத-விரோதப் போக்கினை “வேரறுக்க” அந்நாட்டு பிரதமர் உறுதியளித்தார்.