பட மூலாதாரம், Juggernaut
அக்பரின் அரசவையில் கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவ அறிஞர்கள், கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், தளபதிகள் மற்றும் நிர்வாகிகள் என நாட்டின் மிகவும் திறமையானவர்கள் நிறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் அக்பர் அரசவையின் ‘நவரத்தினங்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இந்த நவரத்தினங்களில் ஒருவரான பீர்பால், அக்பருடனான அவரது நட்பு மற்றும் சமயோசித பதில்களுக்காக இது நாள் வரையில் இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.
இந்திய வரலாற்றில் மக்களிடையே இவ்வளவு பிரபலமாக இருந்தும், அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்த நபர்கள் வெகு சிலரே
அக்பர் எப்போதும் பீர்பாலைத் தன்னுடன் வைத்திருக்க விரும்பினார்.
அக்பரின் வாழ்க்கை வரலாறான ‘அக்பர் தி கிரேட் முகல்’ நூலை எழுதிய இரா முகௌட்டி, “அக்பர் ஃபதேபூர் சிக்ரியைக் கட்டும் போது, அதில் பீர்பாலுக்காக ஒரு அரண்மனையைக் கட்ட உத்தரவிட்டார். ஜனவரி 1583-இல் இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவிலும் அக்பர் கலந்து கொண்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவர் இடையேயான நட்பு எந்த அளவுக்கு இருந்ததென்றால் முகலாயப் பேரரசு முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கழிந்த பிறகும், அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் இன்றும் ஆர்வத்துடன் சொல்லப்பட்டு வருகிறது.
இந்தக் கதைகள் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதற்கு மிகக் குறைவான ஆதாரங்களே உள்ளன எனக் கூறும் இரா முகௌட்டி, “இந்தக் கதைகளில் பேரரசர் எப்போதும் கேலி செய்யப்படுகிறார் மற்றும் பீர்பால் அவரை விட புத்திசாலியாகக் காட்டப்படுகிறார். ஆனால் அக்பர் நகைச்சுவையையும் சமயோசித பதில்களையும் விரும்பினார் என்பதில் சந்தேகமில்லை.” என்றும் தெரிவிக்கிறார்.
பட மூலாதாரம், Aleph
பீர்பாலின் உண்மையான பெயர்
எம்.எச். ஆசாத் தனது புகழ்பெற்ற ‘தர்பார்-இ-அக்பரி’ புத்தகத்தில், “அலெக்சாண்டருடன் அரிஸ்டாட்டில் பெயர் போல அக்பருடன் ராஜா பீர்பாலின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. பீர்பாலின் உண்மையான பெயரில் ‘ராஜா’வோ அல்லது ‘பீர்பாலோ’ இல்லை என்பது முக்கியமல்லாத அளவுக்கு அவரது நினைவுகள் இந்திய மக்களின் மனதில் பதிந்துவிட்டன. இந்தப் பெயர்கள் அவருக்குப் பின்னர் பட்டங்களாக வழங்கப்பட்டன. இதன் காரணமாக அவரது உண்மையான பெயர் மறக்கப்பட்டது.”
பீர்பால் கி.பி. 1556-இல் அக்பரின் அரசவைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு 28 வயது, அவர் அக்பரை விட 14 வயது மூத்தவர்.
பீர்பாலின் உண்மையான பெயர் குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அக்பர் காலத்து வரலாற்று ஆசிரியர் அப்துல் காதிர் பதாயுனியின் கூற்றுப்படி, பீர்பாலின் உண்மையான பெயர் கதாய் பிரம்மதாஸ். ஆனால் பீர்பாலின் உண்மையான பெயர் மகேஷ் தாஸ் என்கிறார் ஜார்ஜ் கிரியர்சன்.
‘தர்பார்-இ-அக்பரி’ ஆசிரியர் எம்.எச். ஆசாத்தும் இதை உறுதிப்படுத்துகிறார். எச். பிளாக்மேனும் ‘ஆயின்-இ-அக்பரி’ மொழிபெயர்ப்பில் இதே பெயரையே பயன்படுத்தியுள்ளார்.
அலகாபாத் கோட்டையில் அமைந்துள்ள அசோகர் ஸ்தூபியில் பின்னர் பொறிக்கப்பட்ட விளக்கத்திலும் பீர்பாலின் உண்மையான பெயர் மகேஷ் தாஸ் என்றும், அவரது தந்தையின் பெயர் கங்கா தாஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், UP Tourism
பீர்பால் எப்படி அக்பரின் அரசவைக்கு வந்தார்?
பீர்பால் இருபத்தி நான்கு ஆண்டுகள் அக்பரின் அரசவையில் இருந்தார், இது அக்பரின் ஆட்சிக் காலத்தில் சுமார் பாதி காலமாகும். அக்பரிடம் இணைவதற்கு முன்பாக, பீர்பால் பல அரசர்களின் அரசவைகளில் அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
பதாயுனியின் கூற்றுப்படி, பீர்பால் ரேவாவின் அரசர் ராமச்சந்திரனிடம் இருந்தார். அக்பரின் அரசவைக்கு பீர்பால் வந்தது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் வெவ்வேறு விவரங்களைத் தந்துள்ளனர்.
சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையே எதிர்பாராத சந்திப்பு நடந்தது, பீர்பாலின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட அக்பர் அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.
வேறு சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பீர்பால் ஆம்பர் அரசர் பகவான் தாஸின் அரசவையில் இருந்தார், அவர் பீர்பாலை ஒரு பரிசாக அக்பரின் அரசவைக்கு அனுப்பி வைத்தார்.
மற்றொரு வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, பீர்பாலை அக்பரின் அரசவைக்கு தோடர்மால் அழைத்து வந்தார்.
ஆர்.பி. திரிபாதி தனது ‘பார்ட்டிஸ் அண்ட் பாலிடிக்ஸ் இன் முகல் கோர்ட்’ புத்தகத்தில், “தான்சேனைப் போலவே பீர்பாலும் முதலில் ரேவா அரசர் ராமச்சந்திரனின் அரசவையில் பணியாற்றினார், அக்பர் அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்தார்.” என எழுதியுள்ளார்.
பீர்பால் தானாகவே அக்பரின் அரசவைக்கு வந்ததாகவும், அவரது சமயோசித பேச்சு மற்றும் புத்திசாலித்தனமான உரையாடலால் ஈர்க்கப்பட்ட அக்பர் அவரைத் தனது அரசவையில் வைத்துக் கொண்டதாகவும் பதாயுனி நம்புகிறார்.
பட மூலாதாரம், Aleph
அக்பரின் நிர்வாகத்தில் பீர்பாலின் பங்கு
பீர்பாலின் பங்கைப் பற்றி எழுதுகையில், ஜே.எம். ஷெலத் தனது ‘அக்பர்’ புத்தகத்தில் குறிப்பிடுகையில், “இபாதத்கானாவில் மத விவகாரங்கள் குறித்த விவாதங்களில், அடிப்படைவாதிகளுக்கு எதிராக பீர்பாலின் சமயோசித அறிவையும் பேச்சாற்றலையும் அக்பர் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தினார்.” எனத் தெரிவித்தார்.
“வைணவ மதம் மற்றும் சூரிய வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட பீர்பாலின் தாக்கம் அக்பர் மீது எந்த அளவிற்கு இருந்தது என்றால், அவரும் சூரியன் மற்றும் நெருப்பின் முக்கியத்துவத்தை ஏற்கத் தயாரானார்.” என ஷெலத் குறிப்பிடுகிறார்.
எம்.எல். ராய்சௌத்ரி ‘தீன்-இ-இலாஹி’ நூலில் இபாதத்கானாவை விவரிக்கும் போது, “அக்பரின் அரசவையில் பீர்பாலின் இருக்கை வடகிழக்கில் இருந்தது, அதே சமயம் ஃபைசி வடமேற்கில் அமர்ந்திருந்தார். அபுல் ஃபசல் தென்கிழக்கு திசையில் அமர்ந்திருந்தார்.” என்று கூறியுள்ளார்.
பாம்பர் காஸ்கோய்ன் தனது ‘தி கிரேட் முகல்ஸ்’ புத்தகத்தில், “இந்து மதத்தைப் புரிந்துகொள்ள அக்பருக்கு பீர்பால் பெரிதும் உதவினார். பீர்பால் தானாகவே இஸ்லாம் மற்றும் பிற மதங்களைப் புரிந்துகொள்ள முயன்றார். இரண்டு வெவ்வேறு மதங்களாகப் பிரிந்திருந்த சமூகத்தில், மக்கள் நெருங்கி வரவும் நல்லிணக்கத்துடன் வாழவும் உதவும் பொதுவான அம்சங்களை அக்பரும் பீர்பாலும் தேடிக்கொண்டிருந்தனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத் துறையிலும் பீர்பால் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அபுல் ஃபசலைப் போல அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், பீர்பால் அமைச்சர்களின் பணிகளைச் செய்து வந்தார்.
இன்றைய மொழியில் அவரை ‘துறை இல்லாத அமைச்சர்’ என்று ஒப்பிடலாம். 1577-இல் மதுரா பிராமணர்களின் பிரச்னையைத் தீர்க்க அவர் அனுப்பப்பட்டார்.
1578-இல் ‘மதத்-இ-மாஷ்’ நிர்வாகத்திற்காக அவர் ஜலந்தருக்கு அனுப்பப்பட்டார். கால்நடைகளின் விலை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்தும் ‘மஜ்லிஸ்’ குழுவின் உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Robinson
ராணுவ நடவடிக்கைகளில் பீர்பாலின் பங்கு
ஒரு தூதராக அக்பருக்கும் மற்ற இந்து மன்னர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதே பீர்பாலின் முக்கியப் பணியாக இருந்தது.
1568-இல் பீர்பாலின் தலையீட்டிற்குப் பிறகுதான் அரசர் ராமச்சந்திரனின் பகுதியை முகலாயப் பேரரசுடன் இணைக்கும் எண்ணம் கைவிடப்பட்டது.
முகலாய அரசவையில் பீர்பாலை ராஜபுத்திர மன்னர்கள் தங்களின் பாதுகாவலராகக் கருதினர். இந்து மற்றும் முஸ்லிம் உயர்குடியினரிடையே பீர்பால் பிரபலமாக இருந்தது மட்டுமல்லாமல், மன்னருடன் அவருக்கு இருந்த நெருக்கத்தின் காரணமாக மக்கள் அவருக்குப் பயப்படவும் செய்தனர்.
அக்பர் தனது ராணுவ நடவடிக்கைகளிலும் பீர்பாலைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார் என்பதிலிருந்து அக்பரின் அரசவையில் பீர்பாலின் முக்கியத்துவத்தை மதிப்பிடலாம். பஞ்சாபின் அமைதியற்ற சூழலை கட்டுப்படுத்த அவர் முதலில் அனுப்பப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து காங்ரா போரில் அவரது பங்களிப்பிற்குப் பிறகு, 1572-இல் அக்பர் அவருக்கு நாகர்கோட் ஜாகீரை வழங்கினார். அதன்பின் குஜராத் மற்றும் பிகார் போர்களிலும் அவர் அக்பருடன் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அக்பரின் கோபத்திற்கு ஆளாகாத பீர்பால்
பீர்பால் பிரஜ் மொழியின் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அக்பர் அவருக்கு ‘கவி ராயர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
” அக்பருக்கு பீர்பாலின் உருவில் ஆழ்ந்த அறிவும், நல்ல புரிதலும் கொண்ட, அக்பருக்கு முற்றிலும் அர்ப்பணிப்புடன் இருந்த ஒரு நபர் கிடைத்தார். அவரது பேச்சாற்றல், தாராள குணம் மற்றும் கவிதைத் திறன் ஆகியவை இணைந்து பீர்பாலை ஒரு சிறந்த முகலாய அரசவைவாதியாக உருவாக்கின.” என இரா முகௌட்டி குறிப்பிடுகிறார்.
அக்பர் மற்றும் பீர்பாலின் நெருங்கிய உறவுக்கு மிகப்பெரிய சான்று தனது நீண்ட காலப் பணியில் அவர் ஒருபோதும் அக்பரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்ததில்லை என்பதுதான்.
அக்பரின் மற்ற நெருங்கிய அரசவை உறுப்பினர்கள் அவ்வப்போது அக்பரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது.
அந்தோனியோ டி மான்செரேட்டும், “அரசுப் பணிகளில் தவறு செய்யும் அதிகாரிகளை அக்பர் ஒருபோதும் மன்னிக்கவில்லை. மூன்று அரசவை உறுப்பினர்கள் மட்டுமே அக்பரின் கோபத்திற்கு ஒருபோதும் ஆளாகவில்லை. அவர்கள் கவிஞர் ஃபைசி, இசைக்கலைஞர் தான்சேன் மற்றும் பீர்பால்,” என எழுதியுள்ளார்.
பீர்பாலுக்கு ஒருபோதும் ஆதரவாக இல்லாத பதாயுனியும்கூட, “அக்பருடன் உரையாடி பீர்பால் சூழலைத் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார். அவரது பதவி உயர்ந்தது மட்டுமல்லாமல், அவர் மன்னரின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். சில நாட்களில் ‘உனது சதை எனது சதை, உனது இரத்தம் எனது இரத்தம்’ என்பது போன்ற நிலை உருவானது,” என எழுதியுள்ளார்.
ஒரே ஒருமுறை பீர்பால் சற்றே இக்கட்டான நிலையில் சிக்கியது போல் தெரிகிறது. பதாயுனி தனது ‘முந்தகாப்-உத்-தவாரிக்’ புத்தகத்தில், “ஒருமுறை அக்பர் ஃபதேபூர் சிக்ரியின் தாசிகளை அழைத்து, அவர்களுடன் தனது அரசவை உறுப்பினர்களில் யார் யார் உறவு கொள்ள முயல்கிறார்கள் என்று கேட்டார். தாசிகள் கொடுத்த பட்டியலில் பீர்பாலின் பெயரும் இருந்தது. இதைப் பற்றி அறிந்த பீர்பால், அரசவையிலேயே தனது உயிரைத் துறக்க முன்வந்தார். அக்பர் அவருக்குத் தண்டனை கொடுப்பதற்கு மாறாக அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Publication Division AMU
அக்பர் – பீர்பால் நெருக்கம்
அக்பரின் மிக நெருக்கமான ஆலோசகராக இருந்தபோதிலும், அவர் முகஸ்துதி செய்பவர்களில் ஒருவராகக் கருதப்படவில்லை.
‘அபுல் ஃபசல் அக்பரை மிகப்பெரிய அளவில் முகஸ்துதி செய்யும் நபர்’ என்று பதாயுனி கருதினார். ஆனால் பீர்பாலின் விசுவாசம் மற்றும் நேர்மை குறித்து பதாயுனி உட்பட எந்த வரலாற்று ஆசிரியரும் கேள்வி எழுப்பவோ அல்லது சந்தேகம் தெரிவிக்கவோ இல்லை.
விசுவாசம் மற்றும் உண்மையான பற்றில் அவர் மான்சிங், ரஹீம் மற்றும் மிர்சா அஜீஸ் ஆகியோரை விட சிறந்தவராகத் திகழ்ந்தார். அக்பர் நான்கு முறை பீர்பாலின் தனிப்பட்ட இல்லத்திற்குச் சென்றார் என்பதிலிருந்து அவர்களின் நெருக்கத்தை மதிப்பிடலாம். மற்ற அரசவை உறுப்பினர்கள் இல்லங்களுக்கும் அக்பர் சென்றார், ஆனால் இரண்டு முறைக்கு மேல் சென்றதில்லை.
1574-இல் அலகாபாத் செல்லும் வழியில் அக்பர்பூரில் உள்ள பீர்பாலின் இல்லத்தில் முதன்முறையாக அக்பர் தங்கினார். அபுல் ஃபசல் இந்தப் பயணத்தை தனது ‘அக்பர்நாமா’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Atlantic Publishers
பீர்பாலின் உயிரைக் காப்பாற்றிய அக்பர்
1583-இல் ஃபதேபூர் சிக்ரியில் நடந்த ஒரு சம்பவம், அக்பருக்கும் பீர்பாலுக்கும் இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தது என்பதை நிரூபித்தது.
அமிதா சரின் தனது ‘அக்பர் அண்ட் பீர்பால், டேல்ஸ் ஆஃப் விட் அண்ட் விஸ்டம்’ புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்.
“அக்பரும் அவரது அரசவை உறுப்பினர்களும் ஒரு மைதானத்தில் யானைச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அக்பர் குதிரையில் அமர்ந்திருந்தார். சண்டையின் இடையில் திடீரென்று மூர்க்கக் குணம் கொண்ட ஒரு யானை பீர்பாலைத் தாக்க வந்தது. பீர்பாலின் உயிர் ஆபத்தில் இருப்பதை அக்பர் கண்டபோது, அவர் தனது குதிரையை ஓட்டி வந்து பீர்பாலுக்கும் யானைக்கும் இடையில் நின்றார். அக்பர் அரச பாணியில் யானையை நிற்குமாறு உத்தரவிட்டார். அக்பரின் கம்பீரமான குரலைக் கேட்டு யானை இருந்த இடத்திலேயே நின்றது.”
அதேபோல் ஒரு போலோ போட்டியின் போது பீர்பால் தனது குதிரையிலிருந்து கீழே விழுந்தார். பார்வதி சர்மா தனது ‘அக்பர் ஆஃப் ஹிந்துஸ்தான்’ புத்தகத்தில், “பீர்பால் மயக்கமடைந்த போது, அக்பர் ஓடிவந்து தனது இதழ்களால் பீர்பாலின் வாயில் ஊதி செயற்கை சுவாசம் அளித்தார்.” என எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Victoria & Albert Museum
பஷ்தூன் போரில் பீர்பால் மரணம்
1586-இல் சுவாத் மற்றும் பாஜௌர் பகுதியில் பஷ்தூன் யூசுப்சாய் மக்களின் கிளர்ச்சியை ஒடுக்க ஜைன் கான் கோகா மற்றும் பீர்பாலை அக்பர் அனுப்பினார்.
இந்தப் போரை அபுல் ஃபசலும் வழிநடத்த விரும்பினார். அக்பர் இருவரின் பெயர்களைச் சீட்டுப் போட்டுப் பார்த்ததில் பீர்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1586-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி முகலாயப் படை தோல்வியைச் சந்தித்தது, பீர்பால் உட்பட எட்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
“ஆப்கானியர்கள் மலந்தராய் கணவாயின் உச்சியில் ஏறி முகலாயர்களைத் தாக்கினர். தாக்குபவர்களுக்கு முகலாய வீரர்கள் ஒரு கிண்ணத்தில் இருக்கும் மீன்களைப் போல இருந்தனர். அவர்கள் அம்புகள் மற்றும் கற்களால் அவர்களைத் தாக்கினர்.” என பதாயுனி குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Rekhta Books
அக்பர் சோகத்தில் ஆழ்ந்தார்
இரா முகௌட்டி தனது புத்தக்கதில், “இந்தச் செய்தி அக்பரை எட்டியபோது அவர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். அடுத்த இரண்டு பகல் மற்றும் இரவுகளில் அவர் எதையும் சாப்பிடவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. அவர் தூரானின் தூதரைச் சந்திக்க மறுத்துவிட்டார் மற்றும் மக்களுக்குத் தரிசனம் தரும் ‘ஜரோகா’ சாளரத்திற்கு வரவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அபுல் ஃபசல் ‘அக்பர்நாமா’வில், “அக்பர் எதிலும் ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டார். அவரது தாயார் ஹமிதா பானு மற்றும் அவரது சகாக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கினார். திடீரென வந்த இந்தத் துயரம் தனது இதயத்தை உலுக்கிவிட்டதாக அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார்.” என எழுதியுள்ளார்.
அக்பரின் மனநிலையை விவரிக்கும் போது பதாயுனியும், “அக்பர் தனது எந்த ஒரு உயர்குடி அதிகாரியின் மரணத்திற்கும் பீர்பாலின் மரணத்திற்கு அழுதது போல் அழுததில்லை. அவர் தனது தளபதிகள் ஜைன் கான் மற்றும் அபுல் ஃபசல் மீது மிகவும் கோபமாக இருந்தார், அவர்கள் தனது முகத்தில் விழிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். தனது வீரர்கள் பீர்பாலின் உடலைக் கூட மீட்டு வரவில்லை என்பதும், அதனால் அவருக்கு முறைப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியவில்லை என்பதும் அவருக்கு வருத்தமாக இருந்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அக்பர் எவ்வளவு கோபமாக இருந்தார் என்றால், அவரே நேரில் காபூல் சென்று பீர்பாலின் உடலை மீட்டு வர விரும்பினார். ஆனால் அரசவை உறுப்பினர்கள், அவரது நண்பரின் உடலைப் புனிதப்படுத்த சூரிய ஒளி போதுமானது என்று கூறி அவரைச் சமாதானப்படுத்தினர்.
பீர்பால் இறந்த சில வாரங்களுக்குள், அக்பர் அவரது மரணத்திற்குப் பழிவாங்க தோடர்மால் தலைமையில் சுவாத் மற்றும் பாஜௌர் மீது தாக்குதல் நடத்தினார். இந்த முறை முகலாயப் படை வெற்றிகரமாகத் திரும்பியது.
பீர்பாலுக்கு அஞ்சலி செலுத்தும் போது அக்பர், ‘அவர் சிறந்தவர்களில் சிறந்தவர். எங்களது நெருங்கிய தோழர்களில் அவர் ஈடு இணையற்றவர்.’ என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு