பட மூலாதாரம், Getty Images
நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று.
விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி?
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள்
பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன.
கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது.
அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது.
அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது.
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது.
சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு ‘அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது’ என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன்.
1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது.
ஆண்களின் குறுகிய உலகம்
பட மூலாதாரம், Getty Images
காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை ‘அபத்தம்’ எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க ‘The Art and science of Cricket’ புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். “இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது.” இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது ‘On Form’ புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார்.
மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது.
அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான்.
இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள ‘Overarm’ பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர்.
ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் ‘Overarm பந்துவீச்சின் பிதாமகன்’ என பொறிக்கப்பட்டது.
ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்
18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
1973இல் தான் The Women’s Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் ‘த அல்பீஸ் கிளப்’பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை.
70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது.
அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji).
குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women’s Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
ஒப்பீடு என்னும் இழிவு
மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது.
மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன்.
மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும்.
ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் “ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?”
பட மூலாதாரம், Getty Images
WPL என்னும் கேம் சேஞ்சர்
ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும்.
ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர்.
மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
“முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம்.
மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது.
பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது” என்கிறார்.
முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.
பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை
“2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர்.
2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது.
நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது” என்கிறார்.
சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார்.
“நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?
மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
“கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.
உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்.” என்றார்.
அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
” நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்” என்றார்.
அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார்.
“70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது” என்றார்.
நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.