1
தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சிம்லாவில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’, ‘பெண் ஒன்று கண்டேன்’, ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக சிறிய அளவில் வரவேற்பை பெற்றாலும், வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறவில்லை.
மேலும் சில திரைப்படங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை அசோக் செல்வன் வழங்காததால் தயாரிப்பாளர்களின் அதிருப்தியை அவர் சம்பாதித்திருக்கிறார். இதன் காரணமாக இந்த திரைப்படத்தை அசோக் செல்வன் சொந்தமாக தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.