0
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் லால் காந்த மகா சங்கத்தினரை அவமதித்தும், அரச அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை அச்சுறுத்தியும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என நினைத்தால் அது வெறும் கனவாகவே முடியும் என்றார்.
கவண் (Catapult) மூலம் செய்ய வேண்டிய காரியங்களுக்கு பீரங்கிகளைப் பயன்படுத்தப்போவதில்லை என லால் காந்த கூறுவதைக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, பளிங்கு உருண்டைகளால் (Marbles) செய்ய வேண்டிய காரியங்களுக்குத் தாம் கவண்களைக் கூட பயன்படுத்தப்போவதில்லை எனப் பதிலடி கொடுத்தார்.
வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கமே தமக்கு எதிராகத் தாமே வீதியில் இறங்கிப் போராடும் விசித்திரமான நிலையை இன்று காணக்கூடியதாக உள்ளதாக அவர் விமர்சித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் ஏனைய விடயங்களில் எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசாங்கம், தனது ஆதரவாளர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதானது, அவர்கள் இன்னும் தாம் எதிர்க்கட்சியில் இல்லை என்பதை உணராததையே காட்டுகிறது என்றார்.
அத்துடன், நாட்டில் அதிகரித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் பின்னணியில் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும், போதைப்பொருள் மற்றும் பாரிய ஊழல்களைக் கண்டுபிடிக்கும் நேர்மையான அதிகாரிகளுக்குத் திட்டமிட்டு இடமாற்றங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது கவலைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.
அச்சுறுத்தல்கள் மூலமோ அல்லது சிறைச்சாலைகளைக் காட்டி பயமுறுத்துவதன் மூலமோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தைத் தடுத்துவிட முடியாது எனவும், கடந்த காலங்களில் விலகிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் கட்சியுடன் இணைந்து வருவதால் கட்சி முன்பை விடவும் பலமாக வளர்ந்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.