
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தின் அஸ்வராவ்பேட் மண்டலத்தில் உள்ள ஒரு உயரமான மலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மூன்று பேர் கொண்ட ஒரு பழங்குடி குடும்பம் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருகிறது.
கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என அந்த குடும்பத்தில் மூவர் மட்டுமே உள்ளனர்.
மலையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் கீழே நடந்து வந்தாலும் கூட, அங்கே ஒரு மனித நடமாட்டத்தைக் கூட காண முடியாது.
இன்றைய அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப்போன தொலைபேசி மற்றும் மின்சார வசதிகள் அங்கு கிடையாது. இருப்பினும், அவர்கள் அப்படியே வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மூன்று பேரும் ஏன் அங்கே தங்கியிருக்கிறார்கள்? அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஆறு வருடங்களாக காட்டை விட்டு வெளியேறாத அவர்களைப் பற்றி அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
குப்பலமங்கம்மா கோவிலிலிருந்து சற்று தூரத்தில்

தெலங்கானாவின் அஸ்வாராவ்பேட்டை மண்டலம் மற்றும் ஆந்திராவின் புட்டயகூடம் மண்டல எல்லையில் உள்ள ஏஜென்சி பகுதியில், பழங்குடியினரின் காவல் தெய்வமான குப்பலமங்கம்மா கோயில் அமைந்துள்ளது.
அந்தக் கோயிலைத் தாண்டியுள்ள மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் அனைத்தும் தெலங்கானாவின் கந்தாளம் வனப்பகுதிக்குள் வருகின்றன.
மாலை 6 மணிக்குப் பிறகு குப்பலமங்கம்மா கோயிலில் மக்கள் நடமாட்டம் இருக்காது.
அந்தக் கோயிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் உயரத்தில், அடர்ந்த காட்டுக்குள் பல ஆண்டுகளாக 40 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தன. இந்த கிராமம் கோகுலபுடி என்று அழைக்கப்பட்டது.
1990 முதல் அடிப்படை வசதிகள் கூட வழங்க முடியாத அந்த மலைப்பகுதியில் வாழும் குடும்பங்களை கீழே கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர்.
முதலில் கீழே வர மறுத்தாலும், மின்சாரம், குடிநீர் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐடிடிஏ(ITDA) அதிகாரிகளின் தொடர் முயற்சியால் அவர்கள் சம்மதித்தனர்.
2000-ம் ஆண்டில், காவடிகுண்ட்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொத்தகண்ணாய் கூடம் பகுதியில் மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட மறுவாழ்வு காலனிக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். அவர்கள் வசித்த இடத்தின் நினைவாக அந்த இடத்திற்கு ‘கோகுலபுடி’ என்றே பெயரிடப்பட்டது.
அந்த 40 குடும்பங்களில் 39 குடும்பங்கள் கீழே வந்துவிட்டன. ஆனால், குருகுண்ட்ல ரெட்டையா என்பவர் மட்டும் கீழே வர மறுத்துவிட்டார்.
அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவர் வனத்தை விட்டு வர சம்மதிக்கவில்லை. அவருடன் அவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் கங்கிரெட்டி ஆகியோரும் அங்கேயே தங்கிவிட்டனர்.

ஆறு வருடங்களாக தனியாக வசித்து வரும் குடும்பம்
ரெட்டையாவின் மனநிலை காலப்போக்கில் மாறும் என்று அதிகாரிகள் நம்பினர். தனது உறவினர்களும் அண்டை வீட்டாரும் கீழே உள்ள மறுவாழ்வு காலனியில் பெற்று வரும் வசதிகளையும், வளர்ச்சியையும் பார்க்கும் போது, அவரும் மனம் மாறி வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் ரெட்டையாவின் எண்ணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வனத்தை விட்டு கீழே இறங்கி வர வழியே இல்லை என்று கூறி, பல ஆண்டுகளாக அந்த அடர்ந்த காட்டிலேயே இக்குடும்பம் வசித்து வருகிறது.
அவரது மனைவி லட்சுமி, அவரது தாய், தந்தை மற்றும் மகன் கங்கிரெட்டி என அனைவரும் அந்த வனத்திலேயே தங்கிவிட்டனர்.

பகலில் சூரிய ஒளி, இரவில் நட்சத்திர ஒளி
இந்தக் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மலை ஏறிச் சென்று ரெட்டையா-லட்சுமி தம்பதியினரின் மகன் கங்கிரெட்டியிடம் பேசினோம்.
மின்சாரம் கூட இல்லாத இந்தச் சூழலில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்று லட்சுமியிடம் கேட்டபோது, “பகலில் சூரியன் இருக்கிறது, இரவில் நிலவும் விண்மீன் ஒளியும் இருக்கிறது. குளிர்காலத்திலோ அல்லது இருள் அதிகமாக இருக்கும் போதோ, நாங்கள் தீ மூட்டிக் கொள்வோம். இங்கே எல்லா வகையான உலர்ந்த புற்களும் உள்ளன” என்று அவர் பதில் அளித்தார்.
“பாம்புகள் எங்களை ஒன்று செய்யாது”

“பகல் மற்றும் இரவின் நேரங்கள் எனக்குத் தெரியும், ஆனால் இன்று என்ன நாள் என்று எனக்குத் தெரியாது. இப்போது மணி என்ன என்று கூட என்னால் சொல்ல முடியாது,” என்று லட்சுமி கூறினார்.
அவரிடம் “உங்களுக்கு நேரம் தெரியுமா?” என்று கேட்டதற்கு, “எனக்கு நேரம் தெரியாது. என்னவென்று தெரியவில்லை. அது அப்படித்தான்” என்றார்.
“இரவு நேரத்தில் உங்களுக்குப் பயமாக இருக்காதா?” என்று கேட்டபோது, “பயமில்லை. கவலையும் இல்லை. நாங்கள் நெருப்பை மூட்டி வைப்போம். விடியும் வரை அந்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கும். விலங்குகள் எதற்கும் தீங்கு செய்யாது. அவை அங்கேயே இருக்கும், நாங்களும் இங்கேயே இருப்போம். பாம்புகள் கூட எங்களை ஒன்றும் செய்யாது. இவை அனைத்தும் எங்களுக்குப் பழகிப்போன ஒன்று” என்று லட்சுமியும் கங்கிரெட்டியும் பதிலளித்தனர்.
“மலைப்பகுதியில் விவசாயம் செய்கிறோம்”

அவர்கள் அந்த மலைப்பகுதியில் விவசாயம் செய்வதாகவும், அதில் அரிசி, சோளம் மற்றும் சிறுதானியங்களுடன் சேர்த்து காய்கறிகளையும் பயிரிடுவதாக லட்சுமி தெரிவித்தார்.
“நாங்கள் உண்பதற்காக மட்டுமே தானியங்களை விளைவிக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டும் பயிரிடுகிறோம். அருகில் உள்ள ஓடையிலிருந்து குடிநீர் கிடைக்கிறது. அந்த நீர் மிகவும் நன்றாக இருக்கும். கோடை காலத்திலும் அங்கு தண்ணீர் வற்றாது. மழைக்காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடும்,” என்றார்.
“எனக்கு அந்த நோயைப் பற்றி எதுவும் தெரியாது”

தனக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் ஏழு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தற்போது இரண்டு பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் லட்சுமி தெரிவித்தார். எஞ்சிய இருவரில் ஒருவன் மகன், மற்றொருவர் மகள்.
மகளுக்குத் திருமணம் செய்து மலை அடிவாரத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும், மகன் கங்கிரெட்டி மட்டும் தங்களோடு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
“எங்களுக்கு நோய்களைப் பற்றி எதுவும் தெரியாது. உடல்நிலை சரியில்லை என்று தோன்றினால், நாங்கள் மூலிகை மருத்துவத்தையே நாடுகிறோம்,” என்று கங்கிரெட்டி கூறினார்.
“அந்த மருந்துகள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்டபோது, மரங்களிலிருந்து இலைகளையும் பழங்களையும் பறித்து மருந்தாகப் பயன்படுத்துவோம்”என்று கங்கிரெட்டி பதிலளித்தார்.
“தற்போது எனது கண் பார்வை சரியாகத் தெரிவதில்லை. ஒரு கைத்தடியை ஊன்றி நடந்தாலும், அது பெரிய அளவில் உதவுவதில்லை,” என்று லட்சுமி தெரிவித்தார்.
ஐந்து குடிசைகள் ஏன்?

ஒருவருக்கு ஒன்று என மூன்று குடிசைகளும், கோழிகள் மற்றும் நாய்க்கு ஒரு குடிசையும், மழைக்காலத்தில் விறகுகள் நனையாமல் இருக்க ஒரு குடிசையும் அவர்கள் கட்டியுள்ளதாக லட்சுமி கூறினார்.
“மழை பெய்தால் வீடு ஒழுகாதா?” என்று கேட்டதற்கு, கங்கிரெட்டி அங்கிருந்த ஒரு ஃபிளெக்ஸ் தாளைக் காட்டி, “இல்லை… இதை மேலே வைப்போம்” என்றார்.
திருவிழா காலங்களில் கோயில்களில் பயன்படுத்தப்பட்டும் ஃபிளெக்ஸ் பேனர்களைக் கொண்டு வந்து, அவர்கள் தங்கள் குடிசைகளை மூடிக்கொள்கிறார்கள்.
“கங்கிரெட்டிக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு குடும்பம் அமையவில்லை. நாங்கள் இந்த மலையை விட்டு கீழே இறங்கவே இல்லை, அதனால் அவர் பள்ளிக்கூடம் சென்று படிக்கவும் இல்லை. அவருக்குத் திருமணத்தில் கூட விருப்பமில்லை, எங்களுடனேயே தங்கிவிட்டார்” என்றார் லட்சுமி.
“எந்தப் பெண் இந்த மலை உச்சிக்கு வந்து வாழ சம்மதிக்கிறாரோ, அவரை மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன். நான் ஒருபோதும் கீழே இறங்கி வரமாட்டேன்,” என்று தெரிவித்தார் கங்கிரெட்டி.
கோவிலில் இருந்து கீழே இறங்காத தந்தையும் மகனும்
தந்தை ரெட்டையாவும் மகன் கங்கிரெட்டியும் மலை அடிவாரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள குப்பலமங்கம்மா கோவில் வரை மட்டுமே வருகின்றனர். தங்கள் வாழ்நாளில் அந்தக் கோவிலைத் தாண்டி சென்றதே இல்லை என்று கங்கிரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
“நாங்கள் அந்தக் கோவிலைத் தாண்டி கீழே செல்ல மாட்டோம்… எதற்காகவும் நாங்கள் கீழே இறங்கப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.
பழங்குடியின மறுவாழ்வு காலனி அமைந்துள்ள காவடிகுண்ட்லா பஞ்சாயத்தின் செயலாளர் மோதிலால் இது குறித்துப் பேசுகையில், அரசு அவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை வழங்க முயற்சித்தது. ஆனால், இவர்கள் இருவரும் அவற்றைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்றார்.
“அந்த அட்டைகள் வேண்டுமென்றால் புகைப்படம் எடுக்க வேண்டும், அதற்கு கீழே வர வேண்டும் என்கிறார்கள். நாங்கள் கீழே வரமாட்டோம். எங்களுக்கு அந்த அட்டைகளும் வேண்டாம். அதனால்தான் நான் அவற்றை வாங்கவில்லை,” என்று கங்கிரெட்டி பிபிசியிடம் கூறினார்.

‘எனக்கு ஆதார் அட்டையும் ரேஷன் அட்டையும் உள்ளது’
“நான் என் மகளைப் பார்க்க மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்வேன். அதேபோல், மலை அடிவாரத்தில் உள்ள எங்கள் உறவினர்கள் வாழும் ‘கோகுலபுடி’ காலனிக்கும் அவர்களைச் சந்திக்கச் செல்வேன். நான் புகைப்படம் எடுத்துக் கொண்டதால், அந்தக் காலனி முகவரியிலேயே எனக்கு ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வழங்கியிருக்கிறார்கள். ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக நான் எப்போதும் கீழே சென்று வருவேன்.
ஆனால், என் மகனும் அவரும் (ரெட்டையா) எங்குமே வருவதில்லை. அந்தக் கோவிலைத் தாண்டி அவர்கள் வெளியே வருவதே இல்லை. ஆனால் நான் மட்டும் சென்று வருகிறேன்,” என்று லட்சுமி கூறினார்.

“அவர் விரும்பவில்லை என்பதால் கீழே செல்லவில்லை”
“மலை அடிவாரத்தில், குப்பலமங்கம்மா கோவிலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள அந்த மறுவாழ்வு காலனிக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை?” என்று கேட்டபோது,
“எங்களுக்கு அது பிடிக்கவில்லை. நான் போகலாம் என்றுதான் சொன்னேன். ஆனால் அவர் (ரெட்டையா) கேட்பதில்லை. அவர் கேட்டிருந்தால் நாங்கள் எப்போதோ கீழே இறங்கியிருப்போம். என் மகனுக்கும் அங்கே வரப் பிடிக்கவில்லை. அதனால்தான் நாங்கள் இங்கேயே தங்கிவிட்டோம்” என்று லட்சுமி பிபிசியிடம் கூறினார்.
தான் இந்த காட்டிலேயே பிறந்ததாகவும், இங்கேயேதான் இறப்பேன் என்றும், ஒருபோதும் கீழே இறங்கப் போவதில்லை என்றும் தன் கணவர் கூறுவதாக லட்சுமி தெரிவித்தார்.
பிபிசி குழுவினர் காட்டுக்குள் இருக்கும் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது, ரெட்டையா அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். தன் வாழ்நாளில் ஒருமுறை கூட கீழே இறங்காத அவர், இப்போது அதிகாரிகள் யாராவது வந்து தன்னை வலுக்கட்டாயமாக கீழே அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், மாலை நேரத்திலும் வீட்டிற்கு வருவதில்லை என்று லட்சுமி கூறினார்.
கடந்த ஆறு மாதங்களாக இந்தக் குடும்பம் மட்டும் காட்டில் தனியாக வசித்து வருவது சமீபத்தில்தான் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அதிகாரிகளும் சில ஊடகங்களும் கடந்த சில நாட்களாக அந்த வனப்பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
“ஆட்கள் வருகிறார்கள்… ஆட்களைக் கண்டாலே அவர் பயந்து ஓடிவிடுகிறார். நள்ளிரவில் தான் வீட்டுக்கு வருகிறார். யாராவது தன்னை கீழே கூட்டிச் சென்று ஏதாவது செய்துவிடுவார்களோ என்று அவர் பயப்படுகிறார். இப்போது காட்டில் யாராவது புதியவர்களைப் பார்த்தால், அவர் பயத்தில் அவர்கள் மீது கல்லெறியவும் செய்கிறார்,” என்றார்.
“குறைந்தபட்சம் குடிசையைச் சுற்றி வேலி போட்டு கொடுங்கள்”

ரெட்டையாவை வலுக்கட்டாயமாக கீழே அழைத்து வந்தாலும் அவர் நிம்மதியாக இருக்க மாட்டார் என்பதால், அவர் இருக்கும் இடத்திலேயே ரெட்டையாவின் வீட்டுக்கு சூரிய சக்தி அமைப்பு பொருத்தி அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோகுலபுடி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“நாங்கள் எங்கள் தாத்தா பாட்டி காலத்திலிருந்தே இந்தக் காட்டில் தான் வசித்து வந்தோம். 2000-ம் ஆண்டில் ஐடிடிஏ எங்களை கீழே கொண்டு வந்தது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் ரெட்டையா கேட்கவில்லை. இப்போது அவரை வலுக்கட்டாயமாக கீழே கொண்டு வந்தாலும், அவரால் அங்கு நிம்மதியாக வாழ முடியாது. எனவே, அரசு அவர் இருக்கும் இடத்திலேயே சூரிய சக்தி மின்சாரம் மற்றும் அவரது குடிசையைச் சுற்றி வேலி அமைத்துக் கொடுத்தால், அது அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்”என்று கோகுலபுடி இளைஞர் மங்கி ரெட்டி பிபிசியிடம் கூறினார்.
அதே சமயம், கோகுலபுடியைச் சேர்ந்த மற்றொருவரான குருகுண்ட்ல பாபு ரெட்டி, ஏழு வயதாக இருக்கும்போது இந்தக் காட்டிலிருந்து கீழே வந்து, இன்று பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். ரெட்டையாவின் குடும்பமும் கீழே வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
“நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்”
கோகுலபுடி குடியிருப்புப் பகுதி அமைந்துள்ள காவடிகுண்ட்லா பஞ்சாயத்தின் தலைவர் லட்சுமண ராவ் மற்றும் செயலாளர் மோதிலால் ஆகியோர் இது குறித்து பிபிசியிடம் பேசுகையில்,”நாங்கள் ரெட்டையாவின் குடும்பத்தை எப்படியாவது கீழே கொண்டு வர எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாங்கள் தயாராக இருந்தும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிற நிலையில் இல்லை.”
“குறிப்பாக ரெட்டையாவும், அவரது மகனும் பொதுமக்களுக்கு முன்னால் வர விரும்புவதில்லை. நாங்கள் அவர்களைப் பார்க்கச் செல்லும்போது, அவர்கள் எங்களிடம் சிக்காமல் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி கீழே கொண்டு வர நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்,” என்றனர்.

“அவர்களுக்கு காடுகளில் வாழ உரிமை உண்டு”
இந்தக் குடும்பத்தைப் பற்றி பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்ட வன அதிகாரி கிஷ்ட கவுட் பிபிசியிடம் பேசுகையில்,
“கொண்டாரெட்டி பழங்குடியினத்தைச் சேர்ந்த ரெட்டையாவின் குடும்பம் காட்டில் தனியாக இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எங்களால் அவர்களைக் காட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச வசதிகளைச் செய்து தருவதை ஐடிடிஏ தான் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்கும் வனத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.
இது குறித்துப் பேச பிபிசி குழுவினர் ஐடிடிஏ திட்ட அலுவலர் ராகுலைத் தொடர்புகொள்ள முயன்றனர், ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும், இப்பகுதியின் மறுவாழ்வுப் பணிகளில் முன்பு பணியாற்றியவரும், தற்போது பத்ராசலம் ஐடிடிஏ பழங்குடியினர் அருங்காட்சியகப் பொறுப்பாளராக இருப்பவருமான வீரசாமி பிபிசியிடம் பேசினார்.
“எங்கள் மாவட்டத்தில் காடுகளுக்குள் வீடுகள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டத்தைக் காண முடியும். குறைந்தது 15 முதல் 20 குடும்பங்களாவது ஒன்றாக வசிக்கும் சூழல் இருக்கும். ஆனால், இங்கே ரெட்டையாவின் குடும்பம் மட்டுமே தனித்து இருக்கிறது. நாங்கள் எத்தனை முறை முயன்றும் அவர்களைக் கீழே கொண்டு வர முடியவில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும் முடியாது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு தகரக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வாய்ப்புள்ளதா என்று நாங்கள் பரிசீலிக்க வேண்டும்,” என்று வீரசாமி கருத்து தெரிவித்தார்.
இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு