சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் ரூ.42.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இது தொடர்பான பேட்டியில் அவர், “சென்ற ஆண்டு 2024 – 25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நம்முடைய ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசை கிராமத்தில் சர்வதேச தரத்திலான (இண்டர்நேசனல் ஸ்டாண்டர்டு) வாட்டர் ஸ்போர்ஸ் அகாடமி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். முதல்வர் ஸ்டாலின் இதற்காக 42.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுருந்தார்.
6 ஏக்கர் நிலத்தில் இந்த வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்க கடந்த ஜனவரி 7 -ந்தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அதற்கான பணிகளை துவக்கி வைத்தோம். இந்த சூழலில் இன்றைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசை பகுதிக்கு வந்து ஆய்வு செய்துள்ளோம். இது கடற்கரை அருகே அமையவுள்ள காரணத்தால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் (COSTAL REGULATION ZONE) CRZ ன் அனுமதியை பெற வேண்டிய சூழல் இருந்தது.
தற்போது அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் இந்த பணிகளை விரைந்து தொடங்க திட்டமிட்டு உள்ளோம். வருகின்ற பிப்ரவரி 5-ம் தேதி இந்த பணிகளை துவங்க இருக்கின்றோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய இருக்கின்றது.
இந்த புதிய அகாடமியில் தங்குமிட வசதி (ஹாஸ்டல்), ஜிம், வாட்டர் ஸ்போர்ஸ் சென்டர், செயில் போட் பார்க்கிங் (sail boat parking), போட் ஹாங்கர், வேர்ல்டு கிளாஸ் டிரையினிங் கம் கோச்சிங் அகாடமியும் அமைய இருக்கின்றது. இந்த அகாடமியில் செயிலிங், கேனோயிங், சர்ப்பிங், கயாக்கிங் மற்றும் ஸ்டாண்ர்டப் பேடில் போன்ற விளையாட்டுகளுக்கு உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சென்னையில் ஆண்டுதோறும் உலக சர்ப்பிங் லீக் நடக்கின்றது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அலைச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றார்கள். இங்கேயும் தனியார் விளையாட்டு பயிற்சி மையம் பயிற்சி அளிப்பதுடன் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றார்கள்.” என்றார்.