பட மூலாதாரம், Getty Images
போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் சமீபத்தில் இறந்ததையடுத்து, சனிக்கிழமையன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள கார்டினல்கள் விரைவில் வாடிகனில் கூடி அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
ரகசியமான, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்தச் செயல்முறை, ‘கான்கிளேவ்’ என்று அழைக்கப்படுகிறது. அடுத்த போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிக்கவுள்ள கார்டினல்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் அவர்களின் முடிவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?
யாரெல்லாம் வாக்களிக்க தகுதியானவர்கள்?
கார்டினல்கள் கல்லூரியில் தற்போது 252 கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் 135 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே அவர்கள் புதிய போப்-ஐ தேர்வு செய்வதற்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் வாக்களிக்கும் வயதுடைய கார்டினல்களின் மிக அதிகமான எண்ணிக்கையாக இது உள்ளது. கார்டினல்கள் கத்தோலிக்க திருச்சபையின் மூத்த குருமார்களாக உள்ளனர். அவர்கள் பொதுவாக ஆயர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
போப் பிரான்சிஸ் வாக்களிக்கும் வயதுடைய கார்டினல்களில் பெரும்பான்மையான 108 கார்டினல்களை நியமித்தார். மீதமுள்ளவர்கள் அவரது முன்னோடிகளான பதினாறாவது போப் பெனடிக்ட், இரண்டாவது புனித ஜான் பால் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுவாக, லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த முதல் போப்பாகவும், 8ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர் அல்லாத முதல் போப் ஆண்டவராகவும் இருந்த போப் பிரான்சிஸ், தனது முற்போக்கான மற்றும் பன்மைத்துவம் கொண்ட நடைமுறை தொடர்வதை உறுதி செய்யும் நோக்கில், கார்டினல்களை திட்டமிட்டு நியமித்துள்ளார் என்று சில வாடிகன் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாறி வரும் கத்தோலிக்க திருச்சபை
போப் பிரான்சிஸ் 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது, (பல்வேறு பிராந்தியங்களில் இருந்து கார்டினல்களை நியமித்ததால்), கார்டினல் கல்லூரியின் நிலவியல் பிரதிநிதித்துவம் மாற்றமடைந்தது.
வரலாற்றில் முதன்முறையாக, வாக்களிக்கும் வயதுடைய கார்டினல்களில், ஐரோப்பியர்கள் பெரும்பான்மையாக இல்லை.
தற்போது அவர்கள் 39%ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், இந்த எண்ணிக்கை 2013இல் 52% ஆக இருந்தது.
போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்ட வாக்களிக்கும் வயதுடைய 108 கார்டினல்களில், 38% பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள், 19% பேர் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், 19% பேர் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.
இவைபோக, 12% துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து, 7% வட அமெரிக்காவில் இருந்து, 4% மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்காவில் இருந்து இருக்கின்றனர். ஐரோப்பியர்கள் அல்லாத கார்டினல்களின் எண்ணிக்கை மொத்தம் 73 ஆக உள்ளது.
உலகளவில் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட கத்தோலிக்க திருச்சபையை நோக்கிய இந்த மாற்றம், 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய ஓர் அணுகுமுறையின் வேகமான வளர்ச்சி என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க திருச்சபை வரலாற்று ஆசிரியர் டாக்டர் மைல்ஸ் பட்டெண்டன் கூறுகின்றார்.
இதற்கு முன், கார்டினல்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களாகவும், முக்கியமாக இத்தாலியர்களாகவும் இருந்தனர். கத்தோலிக்க சமூகங்கள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அனைத்து கத்தோலிக்க சமூகங்களின் பிரதிநிதிகளாகவும் கார்டினல்களின் கல்லூரி இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் நம்பியதாக பட்டெண்டன் கூறுகின்றார்.
“போப் பிரான்சிஸ் திருத்தந்தையாக இருந்தபோது, அயர்லாந்து அல்லது ஆஸ்திரேலியாவைவிட மங்கோலியா, அல்ஜீரியா, இரான் போன்ற நாடுகளில் இருந்து ஏன் அதிகமான கார்டினல்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை இது விளக்குகிறது,” என்கிறார் பாட்டென்டன்.
கார்டினல்களின் பிராந்தியம், வாக்குகளில் தாக்கம் செலுத்துகிறதா?
பட மூலாதாரம், Getty Images
பொதுவெளியில், தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது வாக்கெடுப்பில் பங்கேற்கும் தங்களின் முடிவில் தாக்கம் செலுத்தாது என்று கார்டினல்கள் கூறுவார்கள். ஆனால் நடைமுறையில், வாக்கெடுப்பில் தாக்கம் செலுத்தும் காரணிகளுள் ஒன்றாக இது இருக்கக்கூடும் என்கிறார் பட்டெண்டன்.
தெற்குலக நாடுகளைச் சேர்ந்த பல கார்டினல்கள் தங்கள் பிராந்தியத்தில் இருந்து, குறிப்பாக ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து மற்றொரு போப் தேர்வு செய்யப்படுவதற்கான நேரம் இது என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறார்கள்.
அதே நேரத்தில் பல ஐரோப்பியர்கள், குறிப்பாக இத்தாலியர்கள், மீண்டும் தங்கள் பகுதியில் இருந்தே போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். வாடிகன் அமைந்துள்ள ரோமில் வசிக்கும் கார்டினல்களுக்கும், அங்கு வசிக்காத கார்டினல்களுக்கும் இடையே ஒரு பிரிவு உள்ளது.
தெற்குலக நாடுகளைச் சேர்ந்த கார்டினல்களுடன் ஒப்பிடுகையில், இத்தாலிய கார்டினல்களுக்கு பரஸ்பர பணியிட உறவுகளை உருவாக்குவதற்கு அதிக காலம் கிடைத்துள்ளது. இதனால், தேர்தல் நேரத்தில் அவர்கள் தங்களது வாக்குகளை ஒருங்கிணைத்து, ஒன்றிணைந்த குழுவாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக பட்டெண்டன் சுட்டிக்காட்டுகிறார்.
வாக்கெடுப்பில் அரசியல் சித்தாந்தமும் முக்கியப் பங்கு வகிக்கும். “உதாரணமாக, பல லத்தீன் அமெரிக்க கார்டினல்கள் மிகவும் முற்போக்கானவர்கள். பொதுவாக பழமைவாதப் போக்குடைய ஆப்பிரிக்க கார்டினல்களிடம் இருந்து அவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். மேலும் இந்த கார்டினல்களின் கூட்டணி நிலவியல் எல்லைகளால் மட்டும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்கிறார் பேட்டென்டன்.
வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
பட மூலாதாரம், Getty Images
மாநாட்டின்போது, கார்டினல்கள் வெளி உலகுடன் தொடர்பில் இருக்க மாட்டார்கள். தொலைபேசிகள், இணையம் மற்றும் நாளிதழ்களை அவர்கள் பயன்படுத்த முடியாது.
வாக்கெடுப்பின் போது, வாடிகன் நகரில் உள்ள ஐந்து மாடி விருந்தினர் மாளிகையான காசா சான்டா மார்ட்டாவில் கார்டினல்கள் தங்கி, ஒவ்வொரு நாளும் ரகசியமாக வாக்களிக்கும் சிஸ்டைன் சேப்பலுக்கு நடந்து செல்வார்கள்.
ஒவ்வொரு கார்டினலும், தாங்கள் அடுத்த போப் ஆண்டவராகத் தேர்வு செய்ய விரும்பும் நபரின் பெயரை ஒரு வாக்குச்சீட்டில் எழுதி, அதை வெள்ளியால் செய்யப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய கலசத்தில் வைப்பார்கள். வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.
இந்தச் செயல்முறை நடைபெறும்போது, கத்தோலிக்கர்கள் அருகிலுள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் காத்திருந்து, சிஸ்டைன் ஆலயத்தின் புகைப்போக்கியில் இருந்து புகை எழுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். வெளிவரும் புகையின் நிறம் கருப்பு என்றால் எந்த முடிவும் இறுதியாகவில்லை என்றும், வெள்ளை நிறப் புகை வெளியேறினால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் பொருள்.
புதிய போப், கார்டினல் கல்லூரியின் முன்பாக முறையாகத் தனது பதவியை ஏற்க வேண்டும். பின்னர் தேர்வு செய்யப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கி உள்ள பால்கனியில் புதிய போப் தோன்றுவார்.
வரலாற்றில் மிக நீண்ட காலம் நடந்த மாநாடு 1268இல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் நீடித்தது. ஆனால் சமீப காலங்களில், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, மாநாடுகள் சராசரியாக மூன்று நாட்களுக்குள் நடந்து முடிகின்றன.
திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அவரது முன்னோடியான போப் பதினாறாவது பெனடிக்ட் ஆகியோர் மாநாடு தொடங்கிய இரண்டாம் நாளிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முன்னணி வேட்பாளர் யாரும் இல்லை
பட மூலாதாரம், Getty Images
போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, புதிய போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்படலாம் என இத்தாலி முதல் கனடா வரை, கானா முதல் பிலிப்பைன்ஸ் வரை பலரும் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர்களைச் சுற்றி ஒருமித்த ஆதரவு உருவாகிறதா என்பதைக் கண்டறிய, கார்டினல்கள் மத்தியில் ஏற்கெனவே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்கிறார் பட்டெண்டன். ஆனால் முடிவைக் கணிப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
“ஒரு அரசியல் கட்சியில் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தலைப் போல, தேவையான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றாலே வெற்றி உறுதியாகிவிடாது.
போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை எளிய பெரும்பான்மையைப் பெறுவதைவிட, மேலும் பல காரியங்களை உள்ளடக்கியது,” என்கிறார் பட்டெண்டன்.
“ஒருமித்த கருத்து மூலம் ஓரளவுக்கு முன்னேற வேண்டும் என்ற உணர்வு திருச்சபைக்கு உள்ளது. அதனால், சிறுபான்மை குழுக்களைப் புறக்கணிக்காமல் நடந்து கொள்வதும் அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.