படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலுக்கு இந்தியா கடுமையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அசிம் முனீரின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளது.
தி பிரிண்ட் ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றில், அசிம் முனீர் அணு ஆயுத தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தி வெளியானதை அடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது பதிலை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரின் மூலம் பாகிஸ்தானின் இருப்புக்கு அச்சுறுத்தல் வந்தால், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் பாகிஸ்தான் அணு ஆயுதப் போரை முடுக்கிவிடும் என்று அவர் பேசியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “அமெரிக்காவுக்கு சென்ற அசிம் முனீர் பேசிய சில கருத்துகள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாகி விட்டது” என்று தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பணிய மாட்டோம் – இந்தியா
தி பிரிண்ட் ஊடகத்தில் வெளிவந்த செய்தியின் படி, அசிம் முனீர் அமெரிக்காவில் நடந்த நிகழ்வில், “பாகிஸ்தான் அணு ஆயுத நாடாகும். எங்கள் முடிவு நெருங்குவதாக தெரிந்தால், உலகில் உள்ள பாதி நாடுகளை எங்களுடன் அழித்துவிடுவோம்” என்று பேசியுள்ளார்.
“இவை எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு என்று சர்வதேச சமூகம் எளிதாக புரிந்துக் கொள்ளக் கூடும். பயங்கரவாதிகளுடன் நட்புறவில் உள்ள ராணுவத்தை கொண்டுள்ள நாட்டிடம் அணு ஆயுதங்களின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் நம்ப முடியாது என்ற சந்தேகத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த கருத்துகள் நட்பு நாட்டின் மண்ணிலிருந்து பேசப்பட்டுள்ளது என்பது மேலும் வருத்தமளிக்கிறது. இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பணியாது என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்காக அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” என்றும் தனது அறிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மே மாதம் நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் வெற்றி கண்டதாக அசிம் முனீர் பேசியவை வெளிவந்துள்ளன. இந்தியா ‘விஸ்வ குரு’ என்று கூறிக் கொள்கிறது, ஆனால் அது உண்மையல்ல என்றும் அவர் பேசியுள்ளார். இந்தியாவின் ‘பாகுபாடான இரட்டை முகம் கொண்ட கொள்கைகளை’ எதிர்த்து பாகிஸ்தான் ராஜதந்திர யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை மூத்த அதிகாரிகள் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அசிம் முனீர் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஐஐடி மெட்ராஸ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நிகழ்த்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் எந்தவொரு வழக்கமான நடவடிக்கையிலிருந்தும் வேறுபட்டது என்று பேசியிருந்தார்.
மே மாதம் நடைபெற்ற மோதலின் போது 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் கூறியிருந்தார். எனினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா அசீப் இதை மறுத்திருந்தார்.
ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, மே 6-ஆம் தேதி இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்ததாக இந்தியா கூறியது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல்கள் நடைபெற்றன.
மே 10-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு சண்டை நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது, ஆனால் இந்தியா அதனை ஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
டிர்ம்ப் குறித்து அசிம் முனீர் என்ன கூறினார்?
பட மூலாதாரம், PA/REUTERS
இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி நன்றி தெரிவித்தார்.
“அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளது. அவரது தலைமைத்துவம் இந்தியா – பாகிஸ்தான் இடையில் மட்டுமல்லாமல், உலகில் பல போர்களை தடுத்து நிறுத்தியுள்ளது” என்று அவர் பேசினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று டிரம்ப் கூறிக் கொள்கிறார். ஆனால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட பிறகு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது மத்தியஸ்தம் செய்யப்பட்டதாக கூறப்படும் எந்தவொரு கூற்றும் முற்றிலும் பொய் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.