பட மூலாதாரம், PCB
ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்தவர் சமீர் மின்ஹாஸ்.
இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, பாகிஸ்தான் அண்டர்-19 கிரிக்கெட் அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டர் சமீர் மின்ஹாஸ் வெறும் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்தார். ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடிய இந்த அதிரடி ஆட்டம், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரத்தைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸை பேசு பொருளாக மாற்றியுள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடன், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிபரும் பாரம்பரிய போட்டியாளரான இந்தியாவை வீழ்த்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது
சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியபோது, இறுதியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி மோதல்களின் கடந்த கால சாதனைகள் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை, துபையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது, ஆனால் இந்த முடிவு பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியா வெற்றி பெற 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.
சமீர் மின்ஹாஸின் அதிரடி ஆட்டம்
பட மூலாதாரம், PCB
பாகிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 113 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். சமீர் மின்ஹாஸ் தனது சதத்தை வெறும் 71 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
இறுதிப் போட்டியின் நாயகனான சமீர் மின்ஹாஸ், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சமீரைத் தவிர, அகமது ஹுசைன் 72 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கான் 35 ரன்களும், கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 19 ரன்களும், ஹம்சா ஜுஹூர் 18 ரன்களும் எடுத்தனர். முகமது சியாம் 13 ரன்களுடனும், நகாப் ஷஃபிக் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தானின் முதல் விக்கெட் 31 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது ஓவரில் விழுந்தது, தொடக்க ஆட்டக்காரர் ஹம்சா ஜுஹூர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு சமீர் மின்ஹாஸுடன் இணைந்த உஸ்மான் கான் 17-வது ஓவர் வரை ஒரு முனையைத் தக்கவைத்துக் கொண்டார், மற்றொரு முனையில் சமீர் மின்ஹாஸ் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
17-வது ஓவரில் உஸ்மான் கானை கிலன் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மூன்று விக்கெட்டுகளையும், கிலன் படேல் மற்றும் ஹெனில் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சமீர் மின்ஹாஸ் யார்?
பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்டோருக்கானஆசியக் கோப்பையை வென்றது, ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தானின் மலை போன்ற ஸ்கோருக்கு காரணமாக இருந்த அந்த இளம் வீரருக்கு நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதில் தனி ஆர்வம் உண்டு.
தெற்கு பஞ்சாபின் முல்தான் நகரைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸ் பெரிய இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிப்பது இது முதல் முறையல்ல.
இதே தொடரின் இரண்டாவது போட்டியில் (பாகிஸ்தானின் முதல் ஆட்டம்), மலேசியாவிற்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் எடுத்திருந்தார்.
மலேசியாவிற்கு எதிரான அந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசினார்.
வெறும் 19 வயது மற்றும் 19 நாட்களில் இரண்டு பெரிய இன்னிங்ஸ்களை விளையாடிய சமீர் மின்ஹாஸ், டிசம்பர் 2, 2006 அன்று முல்தானில் பிறந்தார்.
வலது கை தொடக்க ஆட்டக்காரரான சமீர் மின்ஹாஸ், ஏற்கனவே ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவர் பாகிஸ்தானுக்காக நான்கு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அராஃபத் மின்ஹாஸின் தம்பி ஆவார். அராஃபத் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராகப் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பாத்வே அமைப்பிலிருந்து உருவான வீரர்
பட மூலாதாரம், ACC
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பிலிருந்து வெளிவந்த இளம் வீரர்களில் சமீர் மின்ஹாஸும் ஒருவர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு, அவர் முல்தான் மண்டல அண்டர்-13, தெற்கு பஞ்சாப் அண்டர்-16, முல்தான் அண்டர்-19 மற்றும் முல்தான் மண்டல அண்டர்-19 அணிகளில் இடம்பெற்றிருந்தார்.
கடந்த மாதம் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அசார் அலி, சமீர் மின்ஹாஸை எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் உமைர் அல்வியிடம் பேசிய அசார் அலி, இந்த ஆண்டு முதன்முறையாக கராச்சியில் நடந்த பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸைப் பார்த்தபோதே தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
அசார் அலியின் கூற்றுப்படி, “அவரது பேட்டிங் நுட்பம் மற்றும் ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் இன்னும் உழைத்தால், அவர் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல வீரராகத் திகழ்வார்.”
அசார் அலியின் கருத்துப்படி, சமீர் மின்ஹாஸின் வெற்றிக்கு பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பு உள்ளது, அதன் மூலமே அவர் முன்னுக்கு வந்தார்.
அவர் ஒவ்வொரு வயதுப் பிரிவு மட்டத்திலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார், அதன் காரணமாகவே உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் அவர் சேர்க்கப்பட்டார்.
“நான்கு மாதங்களுக்கு முன்பு பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸ் கடுமையாக உழைத்தார், அதன் பலன் இன்று அனைவர் முன்னிலையிலும் உள்ளது. அவர் ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்டர் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட.” என அசார் அலி தெரிவித்தார்.
ஆசியக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் மின்ஹாஸ், 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டு தொடரிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்றும், அங்கு இரண்டு சதங்கள் அடித்துத் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றும் அசார் அலி கூறினார்.
அவரது கருத்துப்படி, மலேசியா அண்டர்-19 அணிக்கு எதிரான சமீரின் சதத்தை மறக்க முடியாது, மேலும் இந்தியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அவரது அதிரடியான அதேசமயம் பொறுப்பான பேட்டிங் அவரது திறமைக்கான வெளிப்படையான சான்றாகும்.

சமூக ஊடகங்களில் சமீர் மின்ஹாஸ் பற்றிய விவாதம்
சமூக ஊடகங்களிலும் சமீர் மின்ஹாஸ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சமீர் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, “சமீர் மின்ஹாஸ், என்ன ஒரு அற்புதமான வீரர்” என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் கூறுகையில், “சமீர் மின்ஹாஸ் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் 471 ரன்கள் குவித்துள்ளார். என்ன ஒரு சிறப்பான ஆட்டம்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு எக்ஸ் பயனர், “இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் சமீரின் அபாரமான ஆட்டம். என்ன ஒரு அற்புதமான இளம் வீரர்” என்று எழுதியுள்ளார்.
ஷாகிர் அப்பாசி என்ற பயனர், “கவனமாகப் பாருங்கள்… சமீர் மின்ஹாஸின் கிளாஸ். என்ன ஒரு வீரர். என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். இறுதிப் போட்டியில் 172 ரன்கள், அதுவும் இந்தியாவிற்கு எதிராக – இதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹாரூன் என்ற பயனர், “சமீர் மின்ஹாஸ் ஒரு உண்மையான பேட்டர். அவர் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். அவரிடம் வலுவான தடுப்பு ஆட்டம் உள்ளது மற்றும் பெரிய ஷாட்களையும் விளையாட முடியும். அவர் தனது செயல்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு