பட மூலாதாரம், X/MK Stalin
சமீபத்தில் வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் ஒரு காட்சியில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை இந்தி படித்ததாக சொல்லப்படுகிறது. சி.என். அண்ணாதுரை உண்மையில் இந்தி படித்தாரா?
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா நடித்து பொங்கலை ஒட்டி வெளியாகியிருக்கிறது பராசக்தி திரைப்படம்.
பராசக்தி படத்தில், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன், கதாநாயகியான ஸ்ரீலீலாவிடம் இந்தி கற்றுக்கொள்வதைப் போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.
‘அண்ணாவே இந்தி படிச்சாரு’
சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, பிருத்வி பாண்டியராஜனுக்கும் இந்தி கற்றுக்கொடுக்கிறார் ஸ்ரீலீலா.
ஆனால், கற்றுக்கொடுக்கும்போது ஸ்ரீலீலா தன்னை தொடர்ந்து பிரம்பால் அடிக்கவும் கோபமடைகிறார் பிருத்வி.
சிவகார்த்திகேயனைப் பார்த்து, “அண்ணா, பெரியார்கிட்டயெல்லாம் விருது வாங்கின நீ, இந்த பிள்ளகிட்ட அடி வாங்கி இந்தி கத்துக்கிட்டு பிழைப்பு நடத்தனுமாடா?” என்று கோபமாகக் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவார்.
அதற்குப் பதிலளிக்கும் சிவகார்த்திகேயன், “அண்ணாவே இந்தி படிச்சாரு தெரியுமா, அதிலயும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்ல..” என்று சொல்வார். அதற்கு பிருத்விராஜ், “அவர் நல்ல வாத்தியாரிடம் படித்திருப்பார்” என்று சொல்லிவிட்டு செல்வதைப் போல அந்தக் காட்சி அமைந்திருக்கும்.
பட மூலாதாரம், Dawn Pictures
அண்ணா உண்மையில் இந்தி கற்றுக்கொண்டாரா?
அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை “பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு” என்ற பெயரில் அவருடைய மகன் சி.என்.ஏ. பரிமளம் தொகுத்திருக்கிறார்.
இதில் அவருடைய ஆரம்ப காலக் கல்வி குறித்தும் கல்லூரிக் காலக் கல்வி குறித்தும் சொல்லப்படுகிறது. ஆனால், அதில் எந்த இடத்திலும் இந்தி கற்றதாகக் குறிப்பிடப்படவில்லை.
அண்ணாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை, அண்ணா: சி.என்.அண்ணாதுரையின் வாழ்வும் காலமும் (Anna: the Life and Times of C.N. Annadurai) என்ற பெயரில் ராஜரத்தினம் கண்ணன் எழுதியிருக்கிறார்.
இதில் அண்ணாவின் ஆரம்ப கால கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி வரை சற்று விரிவான தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த நூல் தரும் தகவல்களின்படி அண்ணா தனது ஆரம்பக் கல்வியை பச்சையப்பன் ஆரம்பப் பள்ளியில் பயின்றார்.
பள்ளிக்கூட இறுதித் தேர்வில் அவர் கணிதத்தில் இரண்டு முறை தோல்வியடைந்து, மூன்றாவது முயற்சியிலேயே வெற்றிபெற்றதாகவும் இந்த நூல் குறிப்பிடுகிறது. பிறகு சிறிது காலம் நகராட்சியில் எழுத்தராக பணியாற்றினார் அவர்.
பட மூலாதாரம், Penguin Publications
தமிழாசிரியர் பணி
பிறகு, 1928-இல் பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் இன்டர் மீடியட் படித்தார். கல்லூரியில் நடந்த தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்ததாகவும் பிறகு, படிப்புதவித் தொகை பெற்று பி.ஏ. ஹானர்ஸை முடித்ததாகவும் இந்த நூல் கூறுகிறது.
படிப்பை முடித்ததும் சென்னை ஜார்ஜ் டவுன் கோவிந்தப்ப நாயக்கன் இடைநிலைப் பள்ளியில் தமிழாசிரியராக சில காலம் பணியாற்றினார் அண்ணா.
சிறுவயதிலிருந்தே ஆங்கிலத்தை அவர் கவனமாகக் கற்றதற்கான குறிப்புகள் இந்த நூலில் இருக்கின்றன. சிறு வயதில் மற்ற சிறுவர்களைப் போலவே கிராப் வைத்துக்கொள்ள விரும்பினாலும் அதனை தனது சிற்றன்னையிடம் கேட்க அவருக்கு அச்சமாக இருந்தது.
ஒரு முறை ஆங்கிலத்தில் 100க்கு 90 மதிப்பெண்களைப் பெற்று, அதனை சிற்றன்னையிடம் காட்டி, கிராப் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை அவர் வெளிப்படுத்தியதாக இந்த நூல் கூறுகிறது.
மேலும் அவர் படித்த காலம் நெடுக, ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தது பல இடங்களில் இந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. 1932வாக்கிலேயே தனது முதல் ஆங்கிலக் கட்டுரையை எழுதிவிட்டார் அண்ணா என்கிறது இந்தப் புத்தகம்.
‘மாஸ்கோ மக்கள் அணிவகுப்பு’ என்ற பெயரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைக்கு சேஷையா சாஸ்திரி அறக்கட்டளையின் பரிசு கிடைத்தது.
பட மூலாதாரம், Google
அண்ணா குடும்பம் கூறுவது என்ன?
“எனக்குத் தெரிந்து அவர் எந்தக் கட்டத்திலும் இந்தியைப் படித்ததாகத் தெரியவில்லை. அது பற்றிய குறிப்புகள் எங்கும் இல்லை,” என்கிறார் இந்நூலாசிரியரான ராஜரத்தினம் கண்ணன்.
அதேபோல, அண்ணாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணா இந்தி படித்ததாக தாங்கள் அறிந்ததில்லை என்கிறார்கள்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.ஏ. பரிமளத்தின் மருமகன் யுவராஜ் முத்துக்குமார், “அண்ணா குறித்து சி.என்.ஏ. பரிமளம் எவ்வளவோ எங்களிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவர் இந்தி படித்ததாக அவர் சொன்னதில்லை. நாங்களும் அறிந்ததில்லை.” என்றார்.
“எனக்குத் தெரிந்து அண்ணா இந்தி படித்ததாகத் தெரியவில்லை. அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அவருக்கு டெல்லியைச் சேர்ந்த சம்பத் என்பவர் டெல்லியில் அவருக்கு உதவியாக இருந்தார். அண்ணாவுக்கு வாடகைக் கார் பிடிக்க வேண்டுமென்றால்கூட, இந்தி தெரியாது என்பதால் சம்பத்தான் அதைச் செய்து தருவார். எந்த இடத்திலும் அண்ணா இந்தி படித்ததாக நான் அறிந்திருக்கவில்லை,” என்கிறார் அண்ணாவையும் அண்ணாவுக்கு நெருக்கமானவர்களையும் அறிந்திருக்கும் பேராசிரியர் நாகநாதன்.
பட மூலாதாரம், ARUNSUBASUNDARAM
“அண்ணா இந்தியைக் கற்க முயற்சித்தார்”
ஆனால், அண்ணா இந்தி கற்றுக்கொள்ள முயற்சித்தார் என்கிறார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த நூல்களை எழுதிய பேராசிரியர் அ. ராமசாமி.
“அண்ணா இந்தியை பள்ளிக்கூடத்தில் கற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், பள்ளிநாட்களில் இந்தியை சுயமாக கற்றுக்கொள்ள உதவும் சிறு நூல்களை வாங்கி படித்திருக்கிறார். அதை நான் எனது இந்தியாவில் மொழி சுதந்திரத்திற்கான போராட்டம் (Struggle for freedom of Languages in India) நூலிலும் பதிவுசெய்திருக்கிறேன்.” என்கிறார் அ. ராமசாமி.
தனது நூலில் ‘இந்தி குறித்த அண்ணாவின் பார்வை’ என்ற பகுதியில் இந்தியை கற்றுக்கொள்ள அண்ணா மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி.
“1948வாக்கிலேயே ‘நாங்கள் இந்திக்கு எதிராக இருக்கிறோம் என யாரும் எண்ணிவிடக்கூடாது. நம்முடைய மக்கள் இந்தியை மட்டுமல்ல, எவ்வளவு மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து’ என அண்ணா எழுதினார்.” என்கிறது அந்த நூல்.
மேலும் “உண்மையில் அண்ணாவும் தன்னுடைய பள்ளி நாட்களில் இந்தியை கற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறார். 50 பைசாவுக்கு விற்கும் இந்தி – தமிழ் போதினியை வாங்கி படித்தார். ஆனால், அதில் அவருக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைத்தது எனத் தெரியாது. ஆனால், அண்ணாவின் இந்த முயற்சி, பல மொழிகளைக் கற்ற வேண்டும் என்ற அவரது ஆசையையும் நோக்கத்தையுமே காட்டுகிறது. இந்தியைக் கற்ற விரும்புபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டுமென்றும் அண்ணா குறிப்பிடுகிறார்.” எனவும் அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கராவின் கருத்தைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு