கடந்த ஏப். 11-ஆம் தேதி நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார்.
அதற்கு மறுநாள், (ஏப்.12) தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் இரண்டாம் ஆண்டு தொடக்க நிகழ்வில் பேசிய கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “முன்பு எனக்கு ஒரு பொறுப்புணர்வும் கட்டுப்பாடும் இருந்தது, இனி நான் ஃப்ரீயாக, அண்ணாமலையாக பேச முடியும். அடித்து ஆட வேண்டிய பாக்ஸிங் கலை அரசியல்வாதிகளுக்குத் தெரிய வேண்டும். இனி பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இருக்கிறார். சிக்ஸர் மட்டும் அடிப்பதுதான் என் வேலை” என பேசியிருந்தார்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, இப்படியான அதிரடி பேட்டிகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் இதுவரை இருந்த மாநில தலைமைகளை விட கூடுதலான கவனத்தை பல தரப்பிலிருந்து பெற்றார். 2020-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்த அண்ணாமலைக்கு, மிக விரைவிலேயே 2021 ஜூலை மாதம் மாநில தலைமை பொறுப்பு வழங்கப்பட்டதை கட்சிக்குள்ளேயே பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியின்படி, மீண்டும் அண்ணாமலை தலைவராக்கப்படலாம் என்ற யூகங்கள் பொய்யாகி, நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கூட முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை, அண்ணாமலையை பார்த்து ‘தம்பி வா, தலைமையேற்க வா’ என கூறியிருந்தார்.
பாத யாத்திரை, சாட்டையடிப் போராட்டம், செருப்பு அணியாமல் இருப்பது என்பன போன்ற நூதனமான செயல்பாடுகளால் தமிழக பாஜக தினசரி அரசியல் தளத்தில் பேசப்படுவதற்கான ஆதாரமாக விளங்கிய அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் இனி என்னவாகும்?
தடாலடி அரசியல்
திமுக அரசின் மீது காட்டமான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வந்தார் அண்ணாமலை, திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை ‘DMK Files’ எனும் பெயரில் வெளியிட்டார். அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரின் கைக்கடிகாரம், கார் ஆகியவை எந்தெந்த நிறுவன தயாரிப்புகள், அதன் விலை என்ன என்பது வரை ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை தாண்டி இத்தகைய பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி, கட்சிக்குள்ளும் வெளியேயும் அதிகப்படியான வெளிச்சத்தை அவர் பெற்றார்.
“அவருடைய உடல்மொழியாலும் ஆவேசமான, ஆக்ரோஷமான அரசியல் நடவடிக்கைகளாலும் இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதே விஷயங்களுக்காகத் தான் தமிழக மக்கள் அவரை ரசிக்கவில்லை. மக்கள் அதை ரசித்திருந்தால் குறைந்தபட்சம் அவர் போட்டியிட்ட தொகுதியிலாவது அண்ணாமலை வெற்றி பெற்றிருப்பார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். லட்சுமணன்.
பட மூலாதாரம், K Annamalai/X
படக்குறிப்பு, சொந்த கட்சியில் உள்ள தலைவர்களே அண்ணாமலையின் போக்கை ரசிக்கவில்லை என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
தலைவர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள்
தமிழ்நாடு பாஜகவின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், மாநில தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கு தேசிய அளவிலான பொறுப்புகள், குறிப்பாக மத்திய இணையமைச்சர் அல்லது மாநில ஆளுநர் பதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எல். முருகன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை கூறலாம்.
2009-இல் தமிழ்நாடு பாஜக தலைவரானார் பொன். ராதாகிருஷ்ணன். பின்னர் மீண்டும் 2012 டிசம்பரில் 2-வது முறையாக மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வென்று, மோதியின் முதல் 5 ஆண்டு ஆட்சியில் மத்திய நிதி, சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளின் இணையமைச்சராக பதவி வகித்தார்.
2014 ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 2019 செப்டம்பர் மாதம் அப்பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்களிலேயே தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார், 2021 பிப்ரவரி மாதம், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், 2024ல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார். தற்போது முழுநேரமாக கட்சிப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
தமிழிசை சௌந்தரராஜனுக்குப் பிறகு மார்ச் 2020 முதல் ஜூலை 2021 வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் எல்.முருகன். 2021 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வியை தழுவினார். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், 2021-ஆம் ஆண்டு முதல் மத்திய பாஜக ஆட்சியில் வெவ்வேறு துறைகளில் தற்போது வரை இணையமைச்சராக பதவி வகிக்கிறார். 2024-ல் நீலகிரி மக்களவை தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். பொன். ராதாகிருஷ்ணனுக்கு பிறகு மக்களவையில் தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு உறுப்பினர் இல்லாத நிலையில், எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்கிறார்.
இவர்களுக்கு முன்பும் இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன், ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். இல. கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்தார். தற்போது நாகாலாந்து ஆளுநராக இருந்து வருகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு மாநில ஆளுநர்களாக பதவிவகித்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக இருந்துவருகிறார்.
அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு?
அண்ணாமலையின் பணிகளை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியக் கட்டமைப்பில் அண்ணாமலையின் அமைப்பு ரீதியான திறன்களை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்.
“தேசியக் கட்டமைப்பு” என்பது எதை உணர்த்துகிறது? தேசிய கட்டமைப்பில் பயன்படுத்துவோம் என அமித் ஷா கூறியதை பலரும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி என நினைக்கின்றனர், ஆனால் அது பெரிய பொறுப்பல்ல. தேசிய செயலாளராக நியமிக்கப்படலாம் அல்லது இரண்டு மாநிலங்களுக்கு மேலிட பார்வையாளராக நியமிக்கப்படலாம், மத்திய இணையமைச்சராகவும் வாய்ப்புகள் உண்டு. வயது காரணமாக ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.” என்றார் மூத்த பத்திரிகையாளர் ஆர். லட்சுமணன்.
திமுகவுக்கு எதிராக வழக்கு தொடுப்பது, அந்த வழக்குகளை பிரத்யேகமாக கையிலெடுத்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகளில் அண்ணாமலை ஈடுபடலாம் என்கிறார் அவர்.
பட மூலாதாரம், @AmitShah/X
படக்குறிப்பு, அதிமுக தலைவர்களுடன் அண்ணாமலை இணக்கமாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இதுகுறித்து கூறுகையில், “கட்சியில் என்ன பதவி தரப் போகிறார்கள் என உறுதியாக தெரியவில்லை. ஆனால் உடனடியாக மீண்டும் ஒரு தலைமை பதவி கொடுத்தால் அவருக்கு அதன் மதிப்பு தெரியாது. சொந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களே அவரை ரசிக்கவில்லை. ஊடகங்களையோ கூட்டணி கட்சி தலைவர்களையோ அவர் மதிக்கவில்லை. சிறப்பாக செயல்பட்டார் என்றால் ஏன் பதவியிலிருந்து நீக்க வேண்டும்? அவரிடம் உள்ள பிரச்னையை தலைமை உணர்ந்திருக்கிறது” என்றார்.
இனி தான் கட்டுப்பாடு இல்லாமல் சிக்ஸர் அடிப்பேன் என்ற அண்ணாமலையின் பேச்சைக் குறிப்பிட்ட குபேந்திரன், “தலைவராக இருக்கும் போதே அவர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதில்லை” என்கிறார்.
“எதை எப்படி கையாள வேண்டும் என தெரியாத நபராக இருக்கிறார். அவர் இயல்பை மாற்றிக்கொள்வார் என தெரியவில்லை. அவர் அரசியலில் பக்குவம் அடைய 10-15 ஆண்டுகள் ஆகும். ஒரு உதாரணம் சொல்கிறேன். அமித் ஷாவின் பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்களை பார்த்து, ‘உங்களை மதித்து மத்திய உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் வந்திருப்பதால் எழுந்து நின்று கேள்வி கேட்க வேண்டும்’ என்கிறார். இப்படி ஒரு தலைவர் பேசி நான் பார்த்ததில்லை” என்கிறார் அண்ணாமலை.
2023-ம் ஆண்டு அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு அதிமுகவின் மறைந்த தலைவர் ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததும் கூட்டணி தலைவர்களுடன் இணக்கமாக இல்லாததும் தான் காரணம் என்ற கருத்து நிலவியது. தற்போது அதே கூட்டணி அமைந்திருப்பதால், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து அண்ணாமலையால் பணியாற்ற முடியுமா என குபேந்திரனிடம் கேள்வியெழுப்பினோம்.
“அப்படி தமிழக தேர்தலில் அண்ணாமலையை பணியாற்ற விட்டால், தமிழக பாஜக வளர்ச்சிக்கோ, அண்ணாமலை எதிர்காலத்துக்கோ சரியாக இருக்குமா என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு நல்லதல்ல. அதிமுக தலைவர்களை அண்ணாமலை ஆதரித்துப் பேசினால், அவர் பேசிய பழைய விஷயங்களை பகிர்ந்து எதிரணியினர் ட்ரோல் செய்வார்கள். ஒருவேளை தமிழக தேர்தலில் அண்ணாமலை பணியாற்றவில்லை என்றால் அந்த கூட்டணிக்கு பலமாக இருக்கும்.” என்றார் அவர்.
இதே கருத்தை ஆமோதிக்கும் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், “நிச்சயமாக மாநில அரசியலில் அவரால் முன்பு போன்று உறுதியாக செயல்பட முடியாது.” என்றார்.
அண்ணாமலைக்கு என்ன மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படலாம் என்பது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் பிபிசியிடம் பேசியபோது, “அவரை முழுமையாக பயன்படுத்துவோம் என தேசிய தலைவர்கள் கூறியிருக்கின்றனர். அவருக்கு பெரிய அனுபவம் இருக்கிறது, தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் பேசுகிறார். எல்லா மாநில பிரசாரங்களுக்கும் செல்கிறார். பல தென் மாநிலங்களில் அவரை பயன்படுத்த வாய்ப்புள்ளது.” என்றார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழாவில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “முன்பு தமிழ்நாட்டில் பாஜக ஒரு குழல் துப்பாக்கியாக தான் செயல்பட்டு வந்தது. தற்போது இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட உள்ளது” என்றார்.
தற்போது இமயமலையில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் அண்ணாமலை. “அவர் நிச்சயம் வருத்தத்தில் இருக்கிறார். அதைத்தான் அவருடைய இமயமலை பயணம் உணர்த்துகிறது. அவருடைய வருத்தத்தை தேசிய தலைமை போக்குகிறதா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றார் லட்சுமணன்.