தலைவராக பொறுப்பேற்றது முதலே தமிழக பாஜகவை தினம்தோறும் பேசுபொருளாக்கி கொண்டிருந்தார் அண்ணாமலை. இப்போது அவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழக பாஜக பெரியளவில் செய்திகளில் அடிபடாமல் ஆஃப் மோடில் இருக்கிறது. தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றது முதலே அதிரடி கிளப்பிய அண்ணாமலை வெகு சீக்கிரமே பிரபலமானார்.
இவரின் ஓவர் ஸ்பீடு பிடிக்காமல் விரைவிலேயே கூட்டணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டது அதிமுக. அதன்பின்னர் ‘நாங்கதான் இங்க எதிர்க்கட்சி’ என பிரகடனம் செய்துவிட்டு, திமுகவை சகட்டுமேனிக்கு விளாச ஆரம்பித்தார் அண்ணாமலை. இது தமிழக அரசியலில் அவருக்கான ஒரு ஆதரவு தளத்தையும் உருவாக்கியது.
2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக தோற்றது. அதைவிட்டுவிட்டு, பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளியதை பெருமை பேசியது பாஜக. இப்படி தன்னை பரபரப்பாக வைத்துக் கொண்டிருந்த பாஜக, அண்ணாமலை விமானம் ஏறிய பிறகு லீவ் விட்ட கதையாக கிட்டத்தட்ட முடங்கிவிட்டது.
சமூக வலைதளங்களில் வாள் வீசும் அண்ணாமலை ஆர்மியும் மவுனமாக இருக்கிறது. அண்ணாமலை ஊரில் இல்லாத இந்த இரண்டு மாதங்களில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானார். அடுத்ததாக, நடிகர் விஜய் தவெக மாநாட்டை நடத்தி பாஜகவை வெளிப்படையாக விமர்சித்தார். இவ்விரு சம்பவங்களிலும், தமிழக பாஜக பெரிதாக பேசுபொருளை உருவாக்கவில்லை.
அண்ணாமலை இல்லாத நேரத்தில், தமிழக பாஜகவின் இந்த ஸ்லீப்பிங் மோடு இயல்பானதா அல்லது இனி, அண்ணாமலைதான் தமிழக பாஜக என்ற ‘ஒன் மேன் ஷோ’ பிம்பத்தை உருவாக்குவதற்காக இப்படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இது உண்மையானால், அண்ணாமலை தாயகம் திரும்பியதும், மீண்டும் அவரின் தடாலடி தொடங்கும். தமிழக பாஜக மீண்டும் பேசுபொருளாகும். அப்போது ‘அண்ணாமலை பாஜகவின் தவிர்க்க முடியாத சக்தி’ என்ற பிம்பம் மீண்டும் கட்டமைக்கப்படும்.
இதுகுறித்து பேசிய தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “கடந்த 5 மாதங்கள் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புத் தேர்தலுக்கான காலம். எனவே, இப்போது அண்ணாமலை இருந்திருந்தாலும், முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்திருப்பாரே தவிர, மற்றபடி உறுப்பினர் சேர்க்கை, அமைப்பு தேர்தல் பணியிலேயே அதிகம் ஈடுபட்டிருப்பார். எனவே, இந்த காலகட்டத்தில் நாங்கள் அரசியலைவிடவும், அமைப்பை வலுப்படுத்தும் பணியில் அதிகம் கவனம் செலுத்துகிறோம்.
பாஜக எப்போதுமே ஒன் மேன் ஷோ கிடையாது. பாஜகவில் கட்டுக்கட்டாக தலைவர்கள் உள்ளனர். அந்த தலைவர்கள் போட்ட படிக்கட்டுகளின் மேல்படியில் இப்போது அண்ணாமலை நிற்கிறார். பாஜகவுக்கு உள்ள வலுவான அடித்தளத்துக்கு மேலே சிகரம் வைத்தது போல அவர் நிற்கிறார்.
தமிழக பாஜகவில் அண்ணாமலை போன்ற பளீர் தலைவர் இதற்கு முன்னதாக இருந்ததில்லை. அவர் வந்த பின்னர் பாஜகவுக்கு புது எழுச்சி வந்துள்ளது உண்மை. அவர் தமிழகம் திரும்பியதும் அதே வேகத்தில் பணியை தொடர்வார்” என்றார். அண்ணாமலை மீண்டும் வந்து அதிரடி செய்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் ஊரில் இல்லாத நேரத்தில் நிலவும் ‘அமைதி’யே ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது!