பட மூலாதாரம், Annamalai/X
தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள இயலாது என்று 6 தொகுதிகளின் பாஜக பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதற்கான பின்னணி காரணங்கள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனால் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பட்ட முறையில் பாஜக-வுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமென்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது அண்ணாமலைக்கு இருக்கும் பாஜக தலைமையின் மீதான கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிவதாகவும், அவர் தேர்தல் பணியிலிருந்து ஒதுங்குவதால் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் நிச்சயமாக பாதிப்பு இருக்குமென்றும் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்தார்.
ஆனால் தேர்தல் பணிகளில் இருந்து அவர் ஒதுங்குவதற்கும், போட்டியிடாமல் தவிர்ப்பதற்கும் வாய்ப்பே இல்லை எனவும் அவர் நிச்சயமாக தேர்தல் பரப்புரை செய்வார் என்றும் பாஜக, அதிமுக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பணியிலிருந்து ஒதுங்க அண்ணாமலை கூறும் காரணம் என்ன?
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிப்ரவரி 3ஆம் தேதியன்று, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
”என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு டயலாசிஸ் செய்ய வேண்டியுள்ளது. ஒரு மகனாக அவரை உடனிருந்து கவனிப்பதுதான் எனது முதல் கடமை. அதனால்தான் நான் கோவையில் அதிகமாக இருக்கிறேன். என்னால் அதிகமாகப் பயணம் செய்ய முடியாது. இந்தத் தேர்தலில் அடிப்படை வேலைகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை” என்று கூறினார் அண்ணாமலை.
”இதன் காரணமாக சிங்காநல்லுார், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இதைப் பற்றி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்துள்ளேன். கட்சியிலும் அதை ஏற்றுக்கொண்டு வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள். அதே நேரத்தில் கட்சி என்ன பிரசாரம் செய்ய வேண்டுமென்று சொல்கிறதோ, அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்து, எனக்கும், நயினார் நாகேந்திரனுக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையில் உள்ளதாகக் கூறிய அண்ணாமலை, இதுபற்றி உள்ளுக்குள் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்றும் கூறினார்.
சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக வந்த தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”தேர்தலில் நிற்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய காலமும் சூழலும் இருக்கிறது. இதெல்லாம் செய்ய வேண்டுமா என்பதை கட்சி கூறிய பிறகு அதை முடிவு செய்வோம். நான் பொறுப்பாளராக இருந்த சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு கட்சியில் வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்” என்றும் அவர் பதிலளித்திருந்தார்.
பட மூலாதாரம், Annamalai/X
பேசுபொருளாக மாறிய அண்ணாமலை பேட்டி
அண்ணாமலையின் இந்த முடிவு பற்றி தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் கருத்து கேட்கப்பட்டது.
தேர்தலில் தொகுதி பொறுப்பாளர்களை நியமிப்பதில் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டதா என்று கேட்டதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ”பாஜகவை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. மையக்குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். அவரிடம் மீண்டும் அண்ணாமலை முடிவு குறித்துக் கேட்டதற்கு, எந்தவொரு தெளிவான பதிலையும் தராமல் கடந்து சென்றார்.
தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்குவதாக எடுத்த முடிவு குறித்து, கருத்துக் கேட்பதற்காக அண்ணாமலையை தொடர்புகொள்ள பிபிசி தமிழ் முயன்றும் அவரிடமிருந்து பதில் பெற முடியவில்லை.
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கருத்து கேட்டபோது, அவர்களும் வெளிப்படையாக பதில் தர மறுத்துவிட்டனர். ஆனால் தேர்தல் பரப்புரையில் இருந்தும், தேர்தலில் நிற்பதில் இருந்தும் அண்ணாமலை நிச்சயம் ஒதுங்கமாட்டார் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய எஸ்.ஆர்.சேகர், ”அண்ணாமலையை ஓரங்கட்டும் எண்ணம் தேசிய தலைமை, மாநிலத் தலைமை எதற்கும் இல்லை. அதற்கான தேவையுமில்லை. இது காங்கிரஸ் கட்சியில்லை. இங்கே கட்சித் தலைமை செய்வதுதான் முடிவு. அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமை என்பதை அவரும் ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று வெளிப்படையாகத் அறிவித்தார்” என்றார்.
”அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என்பது என்னுடைய பெரும் நம்பிக்கை. அதற்கு முழுமையான தகுதியுடையவர் அவர் என்பதும் தேசிய தலைமைக்குத் தெரியும். இப்போதுதான் கட்சியின் தேசிய தலைவர் மாறியிருக்கிறார். தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. அவை முடிந்த பிறகு அவருக்கு தேசிய அளவில் நிச்சயமாக ஒரு சிறப்பான பொறுப்பு வழங்கப்படும்” என்றார் சேகர்.
பட மூலாதாரம், Annamalai/X
தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?
மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், அண்ணாமலையின் இந்தப் பேட்டி, கட்சியின் தேசிய தலைமை மீது அவருக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய எஸ்.பி.லட்சுமணன், ”தான் எதிர்பார்த்த இடம் அல்லது வாய்ப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை என்ற விரக்தியாக அது இருக்கலாம். நேற்றைய அவரது பேட்டியிலேயே ஒரு முரண்பாடு தெரிகிறது. எனக்கு அப்பாவை பார்க்க வேண்டும், பிரசாரம் செய்ய முடியாது, 6 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருக்க முடியாது என்கிறார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு சூழல் இருக்கிறது என்கிறார்” என்றார்.
”நயினார் நாகேந்திரன் இவரிடம் ஆலோசிக்காமல் தொகுதி பொறுப்பாளராக அறிவித்திருக்கமாட்டார். அப்படி கலந்து ஆலோசிக்கும்போது ஒப்புக்கொண்டுவிட்டு, அதை பொதுவெளியில் இப்படி மறுப்பது, மாநிலத் தலைவராக இருந்த ஒருவருக்கு அழகல்ல. அண்ணாமலையிடம் ஆலோசிக்காமல் தொகுதிகளின் பொறுப்பாளராக அவரை நயினார் நியமித்திருந்தால் ஒரு முன்னாள் மாநிலத் தலைவரை நடத்துகிற விதம் இதுவல்ல” என்றார் எஸ்.பி.லட்சுமணன்.
பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook
பாஜக-வுக்குள் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்துப் பல்வேறு வாதங்களும் வலுத்து வரும் நிலையில், ஒருவேளை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ளாமல் அண்ணாமலை ஒதுங்கினால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பேச்சு எழுந்துள்ளது.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ”அண்ணாமலை இல்லாமல் தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்வதால் கட்சிக்கும், கூட்டணிக்கும் எந்த அளவுக்கு பலவீனம் என்பது கட்சிக்கும் தெரியும். அண்ணாமலை போன்ற செல்வாக்கு மிக்க தலைவரை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பது கட்சித் தலைமைக்குத் தெரியும். அதனால் அவர் இந்தத் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கமாட்டார். நிச்சயமாக தேர்தல் பணிகளைச் செய்வார். அத்துடன் ஏதாவது ஒரு தொகுதியிலும் நின்று நிச்சயமாக வெற்றி பெறுவார்” என்றார்.
பட மூலாதாரம், Edappadi K Palanisamy/X
அண்ணாமலை ஒதுங்கினால் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாதிப்பா?
அண்ணாமலையின் இந்த முடிவை அதிமுக எப்படிப் பார்க்கிறது என்பது பற்றியும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் பாஜக, அதிமுக உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தக் கட்சியின் தலைவர்களும் இதுபற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதுபற்றி அதிமுக தலைவர்கள் சிலரிடம் பேசியபோது அவர்களும் வெளிப்படையாக கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ”அண்ணாமலை தேர்தல் பரப்புரைக்கு வருவாரா, வரமாட்டாரா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஆனால் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென்ற ஒத்த கருத்துடன் இருக்கும் எல்லோரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.
”அதிமுக எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. அப்போதிருந்து திமுகவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் பங்கேற்கும் அனைவருமே அரசியல்ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதே நம்பிக்கையுடன்தான் இந்தத் தேர்தலையும் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம். அதிலும் இந்த முறை திமுகவை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அதிகரித்திருக்கிறது. அதனால் கூட்டணியில் இருக்கும் எல்லோருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். நிச்சயமாக அது கிடைக்குமென்றும் நம்புகிறோம்” என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.

பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், ”இப்போது திமுக, காங்கிரஸ் இடையில் மோதல் முற்றியுள்ளது. அதைத் திசை திருப்பவே அண்ணாமலை பேட்டியை அவர்கள் திரித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில்தான் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் என எல்லோரும் கருத்து சொல்கிறார்கள். பாஜக-வில் அப்படி யாரும் சொல்லவில்லை. கூட்டணியைப் பொருத்தவரை அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவருமே சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். கூட்டணிக்குள் எந்தப் பிசிறும் இல்லை” என்றார்.
தன்னுடைய தனிப்பட்ட பிரச்னைகளைத் தாண்டி, இந்தத் தேர்தலில் அண்ணாமலை நிச்சயமாக தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை தேர்தல் பணிகளில் இருந்தும் பரப்புரையில் இருந்தும் ஒதுங்கினால் தனிப்பட்ட முறையில் பாஜக-வுக்கு அதிக இழப்பு என்று கூறும் மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், ”தெரிந்தோ தெரியாமலோ மோதியும் அமித்ஷாவும் அண்ணாமலையை கட்டுப்பாடின்றி வளர்த்துவிட்டுவிட்டனர். அவருக்கென்று ஓர் இளைஞர் பட்டாளம் இருக்கிறது. அதனால் அவர் தேர்தல் பணியில் ஒதுங்கும்போது நிச்சயமாக அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்தத் தாக்கம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை இப்போது மதிப்பிட முடியாது” என்றார்.
”அண்ணாமலை தன் முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது தெரியாது. ஆனால் இறுதி வரையிலும் இந்தத் தேர்தலில் பணிகளில் ஈடுபடாமலும் பரப்புரை செய்யாமலும் அண்ணாமலை ஒதுங்கினால் அது பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இழப்புதான்.” என்றார் எஸ்.பி.லட்சுமணன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு