சென்னை: அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யவும், அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வரப்பட்டது. புலன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றமும் செப்.24ம் தேதி தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு அக்.1ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை காவல் துறை சார்பில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை இன்று (நவ.11) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யவும், அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அந்த அதிகாரிகள் பற்றிய சுருக்கமான விபரங்களுடன் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு